தேவதைகளா? ராட்சஸிகளா? யாரிவர்கள்?!

எந்த ஒரு வீட்டில் ஆண் குழந்தைக்கும், பெண் குழந்தைக்கும் இடையில் வேறுபாடு கற்பிக்காமல் வளர்க்கிறார்களோ அந்த வீடு சொர்க்கம். அங்கு பிறந்த பெண்கள் தேவதைகள் என்பதில் யாருக்கேனும் மாற்றுக் கருத்து
தேவதைகளா? ராட்சஸிகளா? யாரிவர்கள்?!

இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் என்றார்கள்.

பெண் குழந்தைகளைக் கொண்டாட இப்படி ஒரு நாள் இருப்பது அழகு!

எந்த ஒரு வீட்டில் ஆண் குழந்தைக்கும், பெண் குழந்தைக்கும் இடையில் வேறுபாடு கற்பிக்காமல் வளர்க்கிறார்களோ அந்த வீடு சொர்க்கம். அங்கு பிறந்த பெண்கள் தேவதைகள் என்பதில் யாருக்கேனும் மாற்றுக் கருத்து இருக்கிறதா?

அம்மா, அப்பா இருவரும் வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். உறவுகள் பல வருடங்களுக்குப் பிறகு தொட்டுக்கோ, தொடச்சிக்கோ என்ற ரீதியில் ஒருங்கிணைந்தாலும் அவர்களால் பெரிதாக எந்த உதவியும் கிடைக்க முடியாத நிலை. ராணி அத்தையைத் தாண்டியும் 3 பெண்கள், 3 ஆண்கள் என பெரிய குடும்பம் அது. அம்மாவுக்கு விவரம் இருக்கும் அளவுக்கு விவேகமோ, தைரியமோ காணாது. வீடு அப்போது பெய்த கனமழையில் இடிந்து விழும் நிலை.... திடீரென குடும்பத்தின் ஆணிவேரான அப்பா ஹார்ட் அட்டாக்கில் போய் விட்டார். நண்டும் சிண்டுமாகப் பிள்ளைகள் ராணி அத்தை தான் மூத்தவர். 21 வயது தான், கல்யாணமாகியிராத கன்னிப்பெண். அப்பா போனபின் வீடு துக்கத்தில் ஆழ்ந்தது. இருக்கும் வீடு இடியும் தருவாயில்... ஒருவேளை அடுத்தொரு சாதாரண மழையென்றாலும் கூட தாங்காத நிலை. உறவுகள் கருமாதிக்கு வந்து எட்டிப்பார்த்து விட்டு கல்லெறிந்த காக்கைக் கூட்டமென காணாமல் போயினர். ஒருவேளை வீடு இடிந்து விழுந்து விட்டால் குழந்தைகளோடு சென்று தங்க ஒரு நாதியும் இல்லாத நிலை. ராணி அத்தைக்கு எங்கிருந்து தான் அந்த தைரியம் வந்ததோ... மறுநாளே வீட்டை இடிக்க நாள் குறித்து விட்டாள்... அம்மாவுக்கோ கோபமென்றால் பொல்லாக் கோபம். என்னடீ இது நடுத்தெருவிலயா நிக்கறது? வீட்டை இடிச்சுப் போட்டுட்டு எங்க போறது? அம்மா அழ... ராணி அத்தைக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கவெல்லாம் நேரமில்லை. இடியாமலிருந்த மச்சு வீட்டறையில் இருந்த சொற்ப பொருட்களை அடைத்து அதில் குடும்பத்தினர் அனைவரும் இரவுகளில் தூங்கி எழ ஏற்பாடு செய்து கொண்டாள். மீதமிருந்த இடத்தில் ஊர்க்காரர்களுக்கு மாட்டுத்தொழுவம் போடவும், வற்றல் களமிடவும் இடத்தை வாடகைக்கு விட ஏற்பாடு செய்தாள். தனக்கும் நகரத்தின் எக்ஸ்போர்ட் கம்பெனியில் ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்து கொண்டு அப்படியே சிறுகச் சிறுக தவணை முறையில் எளிமையாக வீடு கட்டவும் ஏற்பாடு செய்து கொண்டாள். வீட்டின் கட்டிட வேலைகளுக்கு பெரும்பாலும் கூலியாட்களைத் தவிர்த்து விட்டு வீட்டு மனிதர்களே ஒன்று கூடி அந்த வீட்டைக் கட்டி முடித்தார்கள். சிமெண்ட் வாங்கிச் சேகரிக்க சில காலம், மணல் வாங்கி சேமிக்க சில காலம், கட்டிடப் பணியாளர்களுக்கு கூலிப்பணம் சேர்க்க சில காலம், நடுவில் தம்பி, தங்கைகளுக்கு பள்ளிக்கூடச் செலவுகளுக்கு... (அரசுப் பள்ளியில் சொற்பப் பணம் தானென்றாலும் அதுவும் கூட ராணி அத்தைக்கு அப்போது திண்டாட்டமாகத்தான் இருந்திருக்கிறது.) சில காலம் என முழுதாக ஐந்தாறு ஆண்டுகள் சிறுகச் சிறுக காசு சேர சேர அந்த வீட்டைக் கட்டி முடித்தாள் ராணி அத்தை. முதலில் அம்மா அவளை வீட்டை இடித்துப் போட்டதற்காக கரித்தாலும் கூட 21 வயதுப் பெண்ணின் மனோ திடம், விடா முயற்சி மற்றும் பொறுமை கண்டு பிறகு அந்தப் பெண் என்ன சொன்னாலும், எதை நடத்தினாலும் அதுவே வேத வாக்கு எனும் அளவுக்கு அவள் மீது மரியாதை கொண்டாள். 

இப்போது அவர்கள் குடும்பம் நல்ல நிலையில் இருக்கிறது.

அம்மா மட்டுமில்லை, அந்தக் குடும்பத்தில் யாரிடம் கேட்டாலும் சொல்வார்கள். எங்களது குடும்பத்தின் குலதெய்வம் ராணி அக்கா என்று.

இவள் ஆரம்பத்தில் ராட்சஸியாக அவளது அம்மாவின் கண்களில் தென்பட்டிருக்கலாம். ஆனால் தேவதையானது அவள் கொண்ட மனோதிடத்தால்.

எப்போதாவது ராணி அத்தையை சந்திக்க நேரும் போது என் மகள்களை நான் கொஞ்சிக் கொண்டிருந்தால் அவள் கூறுவதுண்டு...

‘ரொம்ப கொஞ்சிக் கொஞ்சி பொமரேனியன் நாய்க்குட்டிகளாட்டம் ஆக்கி வச்சிடாத குழந்தைகளை....எப்பவும் பெண் குழந்தைகள் திடமாவும், தைரியமாவும் வளர்க்கப்படனும். இன்னைக்கு மட்டுமில்லை என்னைக்குமே அது தான் அவங்களுக்கு துணையா இருக்க முடியும்.’

- என்பாள். சில நேரங்களில் எனக்கது எரிச்சலூட்டக் கூடிய வார்த்தைகளாக இருந்ததுண்டு. ஆனால், அவள் சொன்னது வாஸ்தவமான பேச்சு என்பதும் புரிந்தே தான் இருக்கிறது. 

தற்போது இணையத்தில் ஒரு பழக்கம் இருந்து வருகிறது. பெண் குழந்தைகளைப் பெற்ற தகப்பன்மார்கள் சிலர் ‘தேவதைகள் கொண்டாடும் வீடு’ என்ற பெயரில் தங்களது பெண் குழந்தைகளின் குறும்புகளை, அவர்களுடனான தங்களது இனிமையான தருணங்களை வெகு அழகியலோடு பதிவு செய்வார்கள். இவ்விஷயத்தில் ‘அபியும் நானும்’ பிகாஷ் ராஜ் கூட அவர்களோடு போட்டி போட முடியாது. அவ்வளவு அன்பு. அவ்வளவு கரிசனம், அவ்வளவு பெருமை! அவ்வளவு பெருமிதம்! அப்படியான அப்பாக்களைக் காணும் யாருக்குமே அவர்கள் மீது மிகப்பெரிய மரியாதை தோன்றும்.

ஆனால், இப்படியான பேருவகை கொண்ட தகப்பன்மார்கள் இருக்கும் தேசத்தில் தான் அயனாவரம் சிறுமியைச் சீரழித்த காமுகர்களும் வாழ்கிறார்கள் என்று யோசிக்கையில் இந்தக் காமுகர்களும் கூட ஒருவேளை தாம் பெற்ற மகள்கள் என்று வருகையில் அதே விதமாகத்தான் உணர்வார்களோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆக, பிற குழந்தைகளையும் தான் பெற்ற மக்களைப் போலவோ அல்லது உடன் பிறந்த சகோதரிகள் போலவோ நேசிக்கும் பக்குவம் ஒவ்வொரு தகப்பனுக்கும் வரவேண்டியது அவசியமாகிறது. ஆண்களிடையே குறைந்த பட்சம் மக்களைப் பெற்ற மகராசன்களிடையேயேனும் அப்படியான மனப்பக்குவம் வருமாயின் நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நிச்சயம் குறைந்தே தீரும்.

ஒருவேளை அப்படியான உணர்வு அவர்களுக்கு வராமலே போய்விட்டால்... அப்போது நம் பெண் குழந்தைகளுக்கு என்ன விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளை நாம் செய்து வைத்திருக்கிறோம்?

அவர்களை சதா பின் தொடரும் நிழலாக நம்மால் பாதுகாத்துக் கொண்டே இருக்க முடியாதல்லவா?

ஆகவே நம் பெண் குழந்தைகளை தேவதைகளாக வளர்ப்பதைக் காட்டிலும் கொஞ்சம் ராட்சஸிகளாகவும் வளர்க்க வேண்டியது நமது தலையாய கடமைகளில் ஒன்றாகிறது.

ராட்சஸிகள் என்றால் உடனே நீங்கள் லங்கையில் ராவணன் சீதைக்கு காவல் வைத்த ராட்சஸிகளையோ அல்லது தாடகையையோ கற்பனை செய்து விடாதீர்கள்.

ராட்சஸ குணம் நிறைந்த நமது உக்கிர தேவிகள் உதாரணர்களாக இருக்கிறார்களே!

மகாகாளி, துர்கை, சண்டி, சாமுண்டி, சங்கரி, வீர லட்சுமி என ராட்சஸ குணம் கொண்ட உக்கிர தேவதைகளின் குணங்களையும் அந்தக்குணங்களுக்கான அவசியத்தையும் நாம் பெற்ற தேவதைகளுக்கு கற்பிக்க வேண்டியது பெற்றோர் கடமை!

உலகப் பெண்கள் அத்தனை பேருக்கும் பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com