கேள்விகளால் துளைக்கப்படும் பாதிக்கப்பட்டவர்கள் / தில்லாக சட்டத்தை துணைக்கு அழைக்கும் குற்றம்சாட்டப்பட்டவர்கள்: மீடூவின் இலக்கென்ன? ஜெயிக்குமா மீடூ!

கேள்விகளால் துளைக்கப்படும் பாதிக்கப்பட்டவர்கள் / தில்லாக சட்டத்தை துணைக்கு அழைக்கும் குற்றம்சாட்டப்பட்டவர்கள்: மீடூவின் இலக்கென்ன? ஜெயிக்குமா மீடூ!

மீடூ... பாதிக்கப்பட்ட பெண்களைப் பொறுத்தவரை மிகப்பெரிய ஆசுவாசம் தரத்தக்க புரட்சியாக இருந்த போதிலும்.. இதிலும் கூட குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள்... அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை 

மகளிர் மட்டும் திரைப்படம் 1994 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அதை ஒரு காமெடி திரைப்படமாக மட்டுமே நாம் இன்றளவும் அணுகி வருகிறோம். ஆனால் அத்திரைப்படத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் மீதான நமது புரிதலை நாம் எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தி இருக்கிறோம் என்று பார்த்தால்... கிட்டத்தட்ட எதுவுமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 

பெண்கள் பணியிடங்களில் பாலியல் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டால் அதற்கான கண்காணிப்பு எத்தனை அவசியம் என்பதை உணர்த்திய திரைப்படம் மகளிர் மட்டும். ஆண்களும், பெண்களும் இணைந்து பணிபுரிய வேண்டிய சூழலில் பெண்கள்... அவர்களுக்கான வேலையில் பதவி உயர்வுக்காகவோ, பணி  நிரந்தரத்திற்காகவோ அல்லது வேறு ஏதேதோ காரணங்களுக்காகவோ உயர் அதிகாரிகள் அல்லது உடன் இணைந்து பணிபுரியக்கூடிய ஆண்களின் பாலியல் தேவைகளை நிறைவேற்றும் பகடைக்காய்களாக  ஆக்கப்பட்டு விடக்கூடாது. எதிர்த்துக் குரல் எழுப்ப வேண்டும். அப்படி குரல் எழுப்பப் பட்டால் அதற்கான பலன் நிச்சயம் கிட்டும் என்பதை உணர்த்திய திரைப்படம் ‘மகளிர் மட்டும்’.

படம் வெளிவந்து 25 ஆண்டுகளைத் தொடப்போகிறது. அத்திரைப்படம் பெண்களுக்கான பணியிட பாலியல் தொந்திரவுகளை மட்டும் அலசவில்லை. வேலையிடங்களிலும் குடும்பத்தையும், குழந்தைகளையும் மனதளவில் சுமந்து கொண்டு... ஒருபக்கம் வீட்டில் துணையின்றி தனித்திருக்கும் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு மறுபக்கம் வேலை நெருக்கடி எனத் தவிக்கும் பெண்களின் கவலையைப் பற்றியும் பேசியது. பெண் ஊழியர்களின் அனைத்து சின்னச் சின்னப் பிரச்னைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து தீர்த்து வைக்கும் மையமாக அலுவலகம் திகழ்ந்தால் பெண் ஊழியர்களின் வேலைத்திறன் அதிகரித்து நிறுவனம் முன்னேற்றப்பாதையில் வெகு விரைவாகப் பயணிக்கும். என்பது தான் மகளிர் மட்டும் திரைப்படத்தின் ஒன்லைன். ஆனால், அத்திரைப்படம் வெளிவந்த காலத்தில் பெண் ஊழியர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் உளவியல் அச்சுறுத்தல்கள் குறித்துப் பேசப்படுவதைக் காட்டிலும் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலைக் குறித்து அதிக விமர்சனம் கிளம்பியது.

‘காள மாடு ஒன்னு கறவை மாடு மூணு’ எனத்தொடங்கும் அப்பாடலில் பெண்களைக் கறவை மாட்டுக்கு ஒப்பிட்டதாகக் கூறி மகளிர் அமைப்புகள் போராடின. இதனால் அத்திரைப்படத்திலிருந்து நாம் உணர்ந்து கொண்டிருந்திருக்க வேண்டிய சில உண்மைகளை நாம் நீர்க்கச் செய்து விட்டோம். உண்மையில் மகளிர் மட்டும் திரைப்படத்தில் பணியிடங்களில் பெண் ஊழியர்களுக்கு கிட்ட வேண்டிய வசதிகளாக அத்திரைப்படம் பட்டியலிட்ட, சுட்டிக்காட்டிய க்ளைமாக்ஸ் காட்சி முன் வைக்கும் தீர்வுகள் வரவேற்கப்படவேண்டியவை.

அதே போலத்தான் நாம் இந்த மீடூ இயக்கப் போராட்டங்களையும் அணுக வேண்டும். மீடூ இயக்கம் முன்னெப்போதையும் விட மிகுந்த உத்வேகத்துடன் தமிழகத்தில் கடந்த வாரம் முதல் கிளர்ந்தெழுந்துள்ளது. இதுவரை எதிர்க்கப் பயந்த பெருந்தலைகள் எல்லாம் இப்போது மீடூவின் கீழ் உருட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. திடீரென வெடித்துப் பரபரப்பைக் கிளப்பியிருக்கும் மீடூ இயக்கம் பாதிக்கப்பட்ட பெண்களைப் பொறுத்தவரை மிகப்பெரிய ஆசுவாசம் தரத்தக்க புரட்சியாக இருந்த போதிலும்.. இதிலும் கூட குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள்... அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றால் தான் அதை மீடூ இயக்கத்திற்கான வெற்றியாக நாம் கருத முடியும். ஒருவேளை அது பேசித்தீர்க்கப்பட்டு விட்டால் அதனால் என்ன பலன் என்று யோசித்துப் பாருங்கள்? ஐ மீன் காம்ப்ரமைஸ்! காம்ப்ரமைஸ் செய்து தீர்க்கப்பட வேண்டியவையா மீடூ குற்றங்கள்?! அதற்கு தண்டனை என்ற ஒன்று வேண்டாமா?

இதற்கொரு உதாரணம். இது மீடூ புகாராக அளிக்கப்படவில்லை என்ற போதும் இதுவும் ஒரு பாலியல் வன்முறை புகார் தான்.  2014 ஆம் ஆண்டில் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா, தொழிலதிபர் நெஸ் வாடியா மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டை மும்பை நீதிமன்றம் கடந்த வாரம் ரத்து செய்தது. இந்த வழக்கின் பூர்வீகத்தை ஆராய்ந்தால், கடந்த 2014 ஆம் ஆண்டில் நடிகை ப்ரீத்தி ஜிந்தா, தனது முன்னாள் காதலரும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் கிரிக்கெட் அணியின் உரிமையாளர்களில் ஒருவருமான நெஸ்வாடியா தன் மீது பாலியல் அத்துமீறல் நடத்தியதாக ப்ரீத்தி ஜிந்தா அவர் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வாடியா மன்னிப்புக் கேட்டால் தான் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக ப்ரீத்தி ஜிந்தா நீதிமன்றத்தில் தெரிவித்தார். அப்போது மன்னிப்புக் கேட்க வாடியா ஒப்புக் கொள்ளாத காரணத்தால் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு நான்காண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தற்போது இந்த வழக்கில் ப்ரீத்தி ஜிந்தா, நெஸ் வாடியா இரு தரப்பிலும் சமாதானப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வழக்கு சுமுகமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. ப்ரீத்தி வழக்கை வாபஸ் பெற்றதற்கு மட்டுமல்ல, வழக்கு தொடர்ந்ததற்கும் நெஸ் வாடியா அவரது முன்னாள் காதலர் என்பதும் ஒரு காரணமென மும்பை பத்திரிகைகள் எழுதின. தமது முன்னாள் காதலரான நெஸ் வாடியா, தற்போது வேறொரு பெண்ணுடன் காதலில் இருப்பதை தாங்க முடியாமல் தான் ப்ரீத்தி அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை எழுப்பினார் என்றும் கூறப்பட்டது. தற்போது வழக்கு சமரசமாக முடிக்கப்பட்டதின் பின்னணி இரு தரப்பினரும் சமாதானம் அடைந்து ப்ரீத்தி வழக்கை வாபஸ் பெற்றார் என்று கூறப்பட்டிருக்கிறது. 

இந்த வழக்கை முன் மாதிரியாகக் கொண்டு சொந்தக் காரணங்களுக்காக மீடூ பாலியல் புகார்களை சம்மந்தப்பட்ட பெண்கள் எழுப்பத் தொடங்கி பின்னாட்களில் காவல்துறை மற்றும் நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை ஆண்டுக்கணக்காக வீணாக்கி பின்னர் தங்களுக்குள் சமரசமாகி விட்டதாக அறிவித்து வழக்கை வாபஸ் பெற்றால் மீடூ போன்று பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டிக்கவென்றே தன்னெழுச்சியுடன் கிளர்ந்தெழுந்துள்ள இயக்கத்துக்கான முக்கியத்துவத்தை செயலிழக்கச் செய்வதாக ஆகாதா? 

மீடூ வைப் பொறுத்தவரை அதன் முக்கியத்துவம் என்பது குற்றம் சுமத்தப்பட்டு குற்றவாளியென நிரூபிக்கப்பட்டவர்கள் அதற்கான தண்டனையை சட்டப்பூர்வமாகவோ அல்லது உணர்வுப் பூர்வமாகவோ பெறுவது அன்றோ நியாயம்?!

மீடூ விவகாரம் கடந்தாண்டு முதலே இணையத்தில் பரபரப்பாகப் பேசப்படப் பட்டு வந்த போதும் தமிழகத்தில் சின்மயி வைரமுத்துவின் மீது முதல் குற்றச்சாட்டை வைத்த பிறகே இங்கு பெரிய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. வைரமுத்துவின் மீது கூட முதல் குற்றச்சாட்டை வைத்தது சின்மயி அல்ல, அவர் சிந்து மேனன் என்ற மற்றொரு பெண்ணின் குற்றச்சாட்டைத்தான் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டார். அதன் பின்னரே தனக்கும் அதே விதமானதொரு பாலியல் அச்சுறுத்தல் வைரமுத்துவிடம் இருந்து வந்ததாக சின்மயி அடுத்த நாளே ட்வீட் செய்தார். சின்மயியின் மீடூ குற்றச்சாட்ட்டை முதலில் சட்டை செய்யாத வைரமுத்து, இப்போது சட்டரீதியாக எதிர்கொள்வதாக அறிவித்திருக்கிறார். வைரமுத்து மட்டுமல்ல... இதே விதமாக மீடூ குற்றச்சாட்டில் வகையாக மாட்டிக் கொண்ட மற்றொரு பிரபலம் இவர் நாடறிந்த பிரபல பத்திரிகையாளராகவும் இருந்தவர் தற்போது மோடி அமைச்சரவையில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சராகவும் இருப்பவர். அவர் மீது ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 11 க்கும் அதிகமான மீடூ குற்றச்சாட்டுகள் இதுவரை பதிவாகியுள்ளன. இந்தப் பதினொன்றையும் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகள். அவற்றை நான் நேரடியாக நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார் என்று அறிவித்திருக்கிறார் அமைச்சர் M J அக்பர். 

இப்போது விவகாரம் எதை நோக்கிப் பயணிக்கிறது என்றால், 

ஒருபக்கம் மீடூ இயக்கம் பெரிதாக வெடித்ததை ஒட்டி அலுவலகங்கள் தோறும் வேலைத்தளத்தில் பெண்களுக்கு எதிராக நிகழக்கூடிய பாலியல் அச்சுறுத்தல்களைப் புகாராகப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஒரு குழு அமைக்கப் படுவது துரிதமாகியிருக்கிறது. எங்கள் அலுவலகம் உட்பட இனி ஒவ்வொரு அலுவலகத்திலும்... ஒரே ஒரு பெண் ஊழியர் பணிபுரியும் அலுவலகத்திலும் கூட இனி இப்படியோர் குழு அமைக்கப்பட வேண்டியதின் அவசியத்தை இந்த மீடூ போராட்டம் உறுதி செய்திருக்கிறது. குறைந்த பட்சம் பெண்களுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல்களில் ஈடுபடும் நோக்கம் கொண்டவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணியாக செயல்படலாம். தங்களைக் கண்காணிக்க, புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க ஒரு குழு இருக்கிறது என்ற அச்ச உணர்விலாவது பாலியல் வன்முறைக் குற்றங்கள் குறையலாம் என்ற நம்பிக்கையை இந்த நடவடிக்கைகள் உறுதிப் படுத்துகின்றன. 

ஆயினும் இங்கே யோசனையையும், அவநம்பிக்கையையும் ஒருசேரக் கிளறிவிடக் கூடிய விஷயம்...

குற்றவாளி குறித்து அதிகமாக விசாரணைகள் எழும்பவில்லை என்பதே!

ஊடகங்கள் முதல் தனிநபர் வரை இப்போது வரையிலும் சின்மயியின் குற்றச்சாட்டைப் பற்றித்தான் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்களே தவிர, வைரமுத்துவை நோக்கியோ அல்லது அவரைப் போலவே பாலியல் அச்சுறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பிரபல பிரபலங்களை நோக்கியோ மீடியாக்கள் ஏன் படையெடுக்கவில்லை? பாதிக்கப்பட்டவர்களை நோக்கி நீளும்;

உங்களை பாலியல் ரீதியாக அச்சுறுத்தியவரை நீங்கள் எப்படி உங்கள் திருமணத்திற்கு அழைக்கலாம்?

அவரது காலில் விழுந்து எப்படி ஆசி வாங்கலாம்?

அவர் விருது பெற்றதற்கு ட்விட்டரில் எப்படிப் பாராட்ட மனம் வந்தது?

இப்படியெல்லாம் பாதிக்கப்பட்டவர்களை கேள்விகளால் துளைத்தெடுப்பதை விட்டு விட்டு...

வைரமுத்துவை நோக்கி;

நீங்கள் உங்களது பாலியல் அனுகூலங்களுக்காக உங்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தியது வாஸ்தவம் தானா?

அரசியல் அணுக்கத்தைக் காட்டி உங்களது நிகழ்ச்சிகளுக்கு பாடகர்களை வற்புறுத்தி வரவழைத்துப் பங்கேற்கச் செய்தது உண்டா?

சின்மயியின் குற்றச்சாட்டை நீங்கள் எந்தெந்த விதத்தில் மறுக்கிறீர்கள்?

அவரது குற்றச்சாட்டுக்கு உள்நோக்கம் உண்டென்பதைப் போலவே உங்களது மறுப்புக்கும் உள்நோக்கம் உண்டு என்று அவர் சொன்னால் அதற்கு உங்களது பதில் என்ன?

நீங்கள் அப்பழுக்கற்றவர் என்றால் உங்களுக்காக உங்களை ஆதரித்து இதுவரை உங்கள் பெண் ரசிகைகளிலிருந்து கூட ஒருவரும் குரலெழுப்பாதது ஏன்?

ஆண்டாள் விவகாரத்தில் கூட உங்களை ஆதரிக்க பல குரல்கள் எழுந்த நிலையில் இந்த மீடூ வுக்கு எதிராக எதிராக ஒரு குரல் கூட இதுவரை பதிவாகாதது ஏன்/

இப்படியெல்லாம் வைரமுத்துவுக்கு அக்னிப் பரீட்சை நிகழ்த்த மீடியாக்கள் தயங்குவது ஏன் என்பது தான் புரியாத புதிர்!

அவர் மிக எளிமையாக தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிரான ஆதாரங்களைத் தாம் திரட்டி வருவதாகவும் புகாரை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாகவும் எதிர்வினையாற்றி விட்டு அமைதியடைந்து விட்டார். ஆனால் பாவம் சின்மயி இன்னமும் பதில் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

இதைக் குறித்து நடிகையும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி ஒரு கருத்தை முன் வைத்தார்... நியாயமான கருத்து அது;

நம் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களைத்தான் அதிகம் கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள்.

குற்றம் சுமத்தப் பட்டவர்களை அப்படியே விட்டு விடுகிறார்கள்.

வைரமுத்து மட்டுமல்ல இதுவரை இவருக்கு முன்பே மீடூ குற்றச்சாட்டுக்கு உள்ளான M J அக்பர், அலோக்நாத், விவேக் கோத்தாரி, நானா படேகர், பிரகாஷ் எம் சுவாமி போன்ற பிற பிரபலங்கள் வரிசையை எடுத்துக் கொண்டாலும் இதுவரையிலும் மீடியாக்களில் கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கப் பட்டுக் கொண்டிருப்பது பாதிக்கப்பட்ட பெண்களாகத்தான் இருக்கிறார்களே ஒழிய ஆண்கள் சுதந்திரமாக இஷ்டமிருந்தால் பதில் சொல்வோம். இல்லாவிட்டால் காலம் பதில் சொல்லும், சட்டம் பதில் சொல்லும் என்று ஸ்டேட்மெண்ட்டோடு நிறுத்திக் கொள்கிறார்கள்.

இதனால் போராடியவர்களுக்கும், போராடியவர்களுக்கு ஆதரவாக திரண்டவர்களுக்கும் என்ன விதமான நியாயம் கிடைக்கக் கூடும்?!

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல்கள் குறைய வேண்டும் என்ற நோக்கில் உண்டாக்கப்பட்ட விசாகா கமிட்டியின் பரிந்துரையை இத்தனை வருடங்களில் எத்தனை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளன? என்று கணக்கிடத் தொடங்கினால் ஒருவேளை ஏமாற்றமே மிஞ்சலாம். ஏனெனில், பல தனியார் அலுவலகங்களில் இன்னும் கூட அப்படி ஒரு கமிட்டி அமைக்கப்படாமல் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. மீடூ உத்வேகத்திற்குப் பிறகு சில தனியார் நிறுவனங்கள் இந்நாள் வரை தூங்கிக் கொண்டிருந்து விட்டு திடீரென்று சுய உணர்வு வந்தாற்போல அவசர அவசரமாக ஒரு கமிட்டியை உருவாக்கியிருக்கலாம். 

எது எப்படியோ பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் எனில் அவர்களுக்கான தண்டணை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

மீண்டும் அப்படியான குற்றங்களில் ஈடுபடுவதற்கான தைரியத்தை அவர்கள் இந்நாள் வரை ஈட்டிய செல்வமோ, செல்வாக்கோ, அரசியல், அதிகார பலமோ அவர்களுக்கு உதவக் கூடாது.

இதுதான் மீடூவின் நோக்கம்.

இந்த நோக்கம் நிறைவேறினால் மட்டுமே அதை மீடூ வின் வெற்றியாகக் கொண்டாட முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com