சோபியாவின் கோஷம் கருத்துச் சுதந்திரமா? அநாகரீகமா?

கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் அதிகம் பேசப்படும் ஒரு விஷயம் விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கு அருகில் எழுப்பப்பட்ட கோஷம். அதைத் தொடர்ந்து சோபியா கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார்.
சோபியாவின் கோஷம் கருத்துச் சுதந்திரமா? அநாகரீகமா?

கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் அதிகம் பேசப்படும் ஒரு விஷயம் விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கு அருகில் எழுப்பப்பட்ட கோஷம். அதைத் தொடர்ந்து சோபியா கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார்.

“ஜனநாயக விரோத கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குறியது. உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும். அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள். நானும் சொல்கிறேன்! பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக” என்று டிவிட்டரில் திமுக தலைவர்  ஸ்டாலின் தனது கருத்தை பதிவு செய்தார்.

சோபியா செய்தது ‘கருத்துச் சுதந்திரம்', என்ற வட்டத்தில் வருமா? சோஷியல் மீடியாக்களில் கடுமையாக வலம் வரும் சோபியா போன்றவர்கள் தங்கள் கருத்தை ஒரு தலைவரின் காதுகளுக்கு பக்கத்தில் தான் சொல்ல வேண்டுமா? இது விமானத்திற்குள் செய்தது தவறு என்று சட்டங்கள் சொன்னாலும், இது போன்ற கருத்துக்களை வெளிப்படுத்தும் முறை நெறிமுறைகளுக்கு எதிரானது. எந்த இடத்தில் சொன்னாலும் தவறு. கனடாவில் படிக்கும் அவருக்கு இது தெரியாதா? அதுவும் கோஷம் எழுப்புவதற்கு முன் தனது கருத்தை டிவிட்டரில் பதிந்துவிட்டு கோஷம் எழுப்புகிறார் என்றால், அவர் ஏதோ உத்வேகத்தில் இதைச் சொன்னதாக எடுத்துக் கொள்ள முடியாது.

ஒவ்வொரு மனிதனுக்கும் அரசின் மீது தனிப்பட்ட வெறுப்பு, பாதிப்பு என்பது இருக்கும். அதை பொது இடத்தில் இப்படி வெளிப்படுத்துவதை எப்படி நாகரீகமாக கருத முடியும்? சோபியா இந்தப் பிரச்னையை மத அடிப்படையில் அணுகியிருக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்?

ஒருவர் தவறு செய்கிறார் என்றால், அவரை கண்டிக்காவிட்டாலும் பரவாயில்லை, அதற்கு துணை போகக்கூடாது. ஆனால், தமிழக எதிர்கட்சி தலைவர்கள் கண்ணை மூடிக்கொண்டு சோபியாவின் செயலை நியாயப்படுத்துகிறார்கள். இதைத் தொடர்ந்து படிக்கும் முன், ஒரு குட்டிக்கதையை படிப்போம்.

ஒரு வயதான அரசன். அவனுக்கு இரண்டு மகன்கள். அவர்களில் ஒருவரை அரசனாக்க நினைத்தான். இரண்டு மகன்களையும் அழைத்தான்.

‘மகன்களே! உங்களில் யாருக்கு தகுதியிருக்கிறதோ அவனை அரசனாக்கிவிட்டு நான் துறவறம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன். யார் சிறந்தவன் என்பதை கண்டுபிடிக்க ஒரு போட்டி வைத்திருக்கிறேன். அதன்படி, முதல் ஆறு மாதங்கள் முதல் மகன் அரசனாக இருப்பான். அடுத்த ஆறு மாதம் இரண்டாவது மகன் ஆட்சியில் இருப்பான். இரண்டு பேர் ஆட்சி செய்யும் முறையைப் பார்த்து யார் சிறப்பாக ஆட்சி செய்கிறார்களோ அவனிடம் ஆட்சியை ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன்', என்று சொல்லி முதல் மகனை அரசனாக்கினான்.

முதல் மகன் தன் முழுத் திறமையையும் பயன்படுத்தி ஆட்சியை தொடங்கினான். அண்ணன் ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தினால் போட்டியில் ஜெயித்துவிடலாம், ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என்று கணக்குப் போட்டான் தம்பி. அதன்படி நாட்டில் கொலை, கொள்ளை ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தான். இதைத் தொடர்ந்து தம்பியின் நம்பிக்கையை பெறுவதற்காக புதிதாக பல குற்றவாளிகள் உருவானார்கள். ஆறு மாதங்கள் முடிந்தன. போட்டியின் இரண்டாவது கட்டமாக தம்பிக்கு முடிசூட்டினான் அரசன். தம்பியின் ஆட்சி தொடங்கியது. அவனுடன் இருந்த குற்றவாளிகள் அரண்மனையில் நல்ல பெயருடன் உலா வந்தனர்.

தம்பியின் ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைத்து விடக்கூடாது என்று அண்ணன் நினைத்தான். தம்பி செய்ததைப் போலவே குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தான். நாட்டில் திருட்டும், கொள்ளையும் அமோகமாக நடந்தது. ஆறு மாதங்கள் முடிந்தன. மகன்கள் இருவரையும் அழைத்தான் அரசன். சாதுவையும் அழைத்தான்.

‘சாதுவே! இருவர் ஆட்சி செய்யும் முறையை பார்த்தீர்கள். யார் சிறப்பாக ஆட்சி செய்தார்கள் என்பதைச் சொல்லுங்கள்', என்று அரசன் கேட்டான்.

‘அரசே! இரண்டு மகன்களும் அடுத்தவர் ஆட்சியை நாசம் செய்ய திருடர்களுக்கும், கொள்ளைக்காரர்களுக்கும் அடைக்கலம் கொடுத்தார்கள். இதனால், கொள்ளையைத் தொழிலாக கொண்டவர்கள் மட்டுமல்லாது, இவர்களின் அன்பைப் பெறுவதற்காக பலர் புதிதாக கொலை, கொள்ளையில் ஈடுபட்டார்கள். இவர்கள் இருவரும் சிறந்த குடிமகன்களை உருவாக்கவில்லை. மாறாக சிறந்த கொள்ளைக்காரர்களை உருவாக்கியிருக்கிறார்கள். அடுத்தவர் ஆட்சி செய்யும் போது அதில் குழப்பம் விளைவித்தால், அந்த ஆட்சி தமக்கே கிடைக்கும் என்று நம்பினார்கள். இவர்களை அரசனாக மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், மக்கள் அனைவரும் திருடர்களாக மாறவேண்டும். நடைபெறும் ஆட்சி ஏற்படுத்திய அதிருப்தி மற்றொரு அதிருப்தியை ஆட்சியில் அமரவைக்கும் என்று கணக்குப்போடுகிறார்கள். இந்தக் கணக்கை காலம் பொய்யாக்கும். ஆகையால், இவர்களில் ஒருவரை தேர்தெடுத்து திருடர்களுக்கு தலைவனாக்குங்கள். மக்கள் தங்கள் தலைவனை தேர்ந்தெடுக்கட்டும்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.

இந்தக் கதையில் வரும் அரசனின் மகனைப் போல யாரும் தவறுகளுக்கும், தவறு செய்பவர்களுக்கும் துணைபோகக்கூடாது.

“பொது இடங்களில் குரல் எழுப்புவதும், விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளிகளே. சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம். அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்? நானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன்”, என்று கமலஹாசன் டிவிட்டரில் கருத்தை பதிவு செய்திருக்கிறார். இவர் சொல்லும் கருத்துக்களை புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதற்கு பிறவி ஞானம் கொஞ்சம் அதிகம் தேவை. அல்லது தமிழில் முனைவர் பட்டம் பெற்ற ஒருவரை பக்கத்தில் அமர்த்தி இவர் சொல்ல வந்த கருத்தின் உண்மையான பொருளை புரிந்து கொள்ள முடியும். ‘என் வாழ்க்கை திறந்த புத்தகம்', என்று சொல்லும் இவர் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். பொது இடத்தில் புத்தகத்தை திறந்து வைப்பது இவருக்கு பெருமையாக இருக்கலாம். எங்களுக்கு அப்படியல்ல.

இத்தகைய அரசியல்வாதிகளின் குடும்பத்தினர்கள் பயணம் செய்யும் போது பக்கத்தில் சென்று யாராவது வில்லத்தனமாக குரல் எழுப்பினால் அமைதியாக சென்று விடுவார்களா? ‘ஆம்! அமைதியாக சென்று விடுவோம்', என்று அவர்கள் சொன்னால், ஒரு அரசியல்வாதியின் குடும்பம்கூட வெளியே வரமுடியாது. உங்களுக்கு பாஜகவை பிடிக்காது, பிரதமர் மோடியை பிடிக்காது. அதற்காக அரசியலில் கலக்கும் அநாகரீகத்தை ஆதரிப்பீர்களா? இத்தகைய எதிர்ப்பு மற்றவர்களையும் இதே தவறில் ஈடுபடத் தூண்டுகிறது. இது ஏற்புடையதல்ல. பாராளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ள பல கட்சி எம்.பி.க்கள் ஒரே விமானத்தில் பயணிப்பதை பார்க்கிறோம். அப்போதெல்லாம் இப்படித்தான் நடக்கிறதா?

“விமானத்தில் சக பயணியிடம் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்வது ஏர்கிராப்ட் ரூல்ஸ் 1937, விதி 23ன் படி குற்றம். இத்தகைய குற்றத்திற்கு விதி 161ன் படி ஓராண்டு வரை சிறை தண்டனையோ அல்லது ஐந்து லட்சம் ரூபாய் அபராதமோ, அல்லது இரண்டும் சேர்ந்து தண்டனையாக வழங்குவதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது', என்று சட்டம் சொல்கிறது.

சோபியா என்ற அந்த இளம் மாணவியின் படிப்பை மனத்தில் கொண்டு அவர் மீது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சிலர் சோஷியல் மீடியாக்களில் தங்கள் கருத்துக்களை பதிந்துள்ளார்கள்.

‘சோபியா அறிவியல் மாணவி. அவருக்கு சட்டம் தெரியாது'. தமிழிசை தாய் ஸ்தானத்தில் இருந்து சோபியாவிடம் பேசியிருக்கலாம்', என்று சோபியாவின் தந்தை கருத்து தெரிவித்திருக்கிறார். இது எந்த வகையான பேச்சு என்று புரியவில்லை. தாய்க்கு பொறுப்பு இருக்க வேண்டும். மகளுக்கு அது தேவையில்லை என்கிறாரா அவர்? இந்த வழக்கை திரும்ப பெறுங்கள் என்று சொல்பவர்களுக்கு! இந்த வழக்கை திரும்ப பெறுவது சரியான நடவடிக்கையாகாது. தவறை சட்டத்தின் பார்வைக்கு கொண்டு செல்லாமல் போனால், அது சரியான நடவடிக்கையாகாது. இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. நாளை இதுபோன்று ஒரு சம்பவம் நடைபெறும் போது இந்த வழக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அரசியல் நாகரீகத்தை வலியுறுத்த இந்த வழக்கின் தீர்ப்பு மிக அவசியம். இது போன்ற நிகழ்வுகள் தொடரக்கூடாது என்றால், சட்டப்படி இவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாது, இது போன்ற தவறுகளை ஆதரிக்கும் கட்சிகளுக்கு நீதிமன்றம் தனது கண்டனம் தெரிவிக்குமானால், தமிழகத்தில் ஒரு நல்ல அரசியல் நாகரீகம் வளரும் என்று எதிர்பார்க்கலாம்.

அப்படியில்லாமல், அநாகரீக செயல் தொடருமானால், தலைவர்கள் பயணிக்கும் போது உடன் குண்டர்களையும் பாதுகாப்புக்கு அழைத்துச் செல்லும் நிலை ஏற்படும். ஆகையால், அரசியல் கட்சிகளே! தவறு செய்பவர்களை கண்டியுங்கள். உங்கள் வீட்டு பெண்கள் பயணிக்கும் போது யாராவது இப்படி எரிச்சலூட்டினால், அதை அமைதியாக ஏற்றுக் கொள்வீர்களா? அரசின் கொள்கை, நடத்தை ஆகியவற்றை ஒரு ஓரமாக வையுங்கள். தனிப்பட்ட நபரை அசிங்கப்படுத்தும் விதமாக பேசுவது சரியா? இதை சரியென்று யாராவது சொன்னால், இனி வரும் காலங்களில் எந்த அரசியல்வாதியும் அவர்களது குடும்பமும் நிம்மதியாக பயணிக்க முடியாது

எது எப்படியோ, வெளிப்படையாக பாஜகவை விமர்சனம் செய்ததால், அடுத்த சீசன் பிக்பாஸில் இவருக்கு ஒரு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

-சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com