மனித வணிகம் ஒரு சமூகத்தீமை மட்டுமல்ல; அது மானுடத்திற்கு எதிரான ஒரு கொடுமையான குற்றமும் கூட!

வேலையில்லாமல் சிரமப்படும் நாகப்பனும், கஸ்தூரியும் ரூ.30,000ஃ- என்ற தொகையை முன்பணமாக
மனித வணிகம் ஒரு சமூகத்தீமை மட்டுமல்ல; அது மானுடத்திற்கு எதிரான ஒரு கொடுமையான குற்றமும் கூட!

வேலையில்லாமல் சிரமப்படும் நாகப்பனும், கஸ்தூரியும் ரூ.30,000/- என்ற தொகையை முன்பணமாக வாங்கிக் கொண்டு ஒரு கரும்பு அரவை தொழிலகத்தில் வேலை செய்யத் தொடங்கினர். தங்களது கஷ்டம் விரைவில் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையோடு வாங்கிய முன்பணத்தை திருப்பி செலுத்த ஒவ்வொரு நாளும் நீண்ட மணிநேரங்களுக்கு கடுமையாக அவர்கள் உழைத்தனர். இருப்பினும், அவர்களது நிலைமை மோசமானது தான் மிச்சம். தங்களது உறவினர்களோடு திருவிழாவை கொண்டாடுவதற்கு சொந்த ஊருக்கு போவதற்குக்கூட அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள் பட்ட கஷ்டம் இதோடு நின்றுவிடவில்லை. அவர்கள் பட வேண்டியிருந்த மிகப்பெரிய கொடுமைகள் மற்றும் சிரமங்களின் தொடக்கமாகவே இது இருந்தது.

ஆறு வயதான அவர்களது மகள் புவனா தொழிற்சாலை முதலாளியால் கடத்தப்பட்டு, அவளை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.2,00,000/- கடன் பெற்றதாக பத்திரத்தில் கையெழுத்திடுமாறு அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர். கடனை திருப்பிச் செலுத்த வேலை செய்யவில்லை என்றால் அவர்களை கொல்லப் போவதாகவும் அந்த முதலாளி மிரட்டினான். முதலாளியின் பேச்சிற்கு இணங்கி அவர்கள் நடக்கவில்லை என்றால் தாங்கள் கொல்லப்பட்டு கரும்பு தோட்டத்திலேயே புதைக்கப்பட்டு விடுவோம் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ரூ.2,00,000/- என்ற வாங்காத, பொய்யான கடனை திரும்ப செலுத்துவதற்காக இரவும், பகலும் உழைப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. இந்த கடனுக்காக பிணையாக சிறை பிடிக்கப்பட்டிருந்த தங்களது மகளை திரும்பப் பெறுவதற்கு வேறு வழி அவர்களுக்கு இல்லை. 

மனித உழைப்பை சுரண்டுகின்ற மனித வணிகம் என்பது ஒரு அவசியமான சமூக தீமை மட்டுமல்ல; இது மானுடத்திற்கு எதிரான ஒரு கொடுமையான குற்றமும் கூட. கொத்தடிமை தொழில்முறை, வர்த்தகரீதியிலான பாலியல் சுரண்டல், உடல் உறுப்புகளை அனுமதியின்றி சட்ட விரோதமாக அகற்றுவது மற்றும் பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடுத்துவது போன்றவை இந்தியாவில் நடைபெறுகின்ற மனிதவணிக குற்றத்தின் பல்வேறு முகங்களாகவும், வடிவங்களாகவும் இருக்கின்றன.

லாபமீட்டுவதற்காக ஏழைகள் மற்றும் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய நலிந்த மக்கள் மீதும் உடல் சார்ந்த, உளவியல் சார்ந்த மற்றும் பாலியல் ரீதியிலான வன்முறையை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிற ஒடுக்குமுறையின் கடுமையான நிஜ நிகழ்வுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவருகிற இதுபோன்ற பல சுரண்டல் கதைகள் வெளி வந்திருக்கின்றன. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 3 மில்லியன் பெண்களும், குழந்தைகளும் மனித வணிகத்திற்காக கடத்தப்படுகின்றனர் என்று 2014-ம் ஆண்டில் பெண்கள் மற்றும் குழந்தை முன்னேற்றத்திற்கான அமைச்சகம் வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில் மதிப்பீடு செய்திருந்தது. இந்த குழந்தைகளில் 45 விழுக்காட்டினர் கொத்தடிமை தொழிலாளர்களாக, வீட்டு வேலை செய்பவர்களாக அல்லது ஜவுளி மற்றும் பட்டாசு தொழிலகங்கள் போன்ற சிறு தொழிற்சாலைகளில் பணியாளர்களாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்று NCRB ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.

6 வயது குழந்தையான புவனா, ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வரவும் மற்றும் சணல் பைகளை கழுவவும் நிர்ப்பந்திக்கப்பட்டாள். அவள் அடித்து உதைக்கப்பட்டு, சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டாள் என்பதற்கும் கூடுதலாக, முதலாளியின் உறவினர் அவளிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறான் (பாலியல் பலாத்காரமாக இருக்கக் கூடும்). அவளது பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட நிலையில் அவளைச் சுற்றி கனிவான இதயம் கொண்ட யாரும் இல்லாத சூழலில் அவள் அனுபவிக்கின்ற வலியை வாய்விட்டு எடுத்துச் சொல்லக் கூட அந்த சின்னஞ்சிறு குழந்தையால் இயலவில்லை. அடிமையைப் போல் நடத்தப்பட்ட இந்த மோசமான நிலையிலிருந்து மீட்கப்படுவதற்கான எந்த நம்பிக்கையும் இல்லாத நிலையில் அவளது நிலைமை மோசமானதிலிருந்து மிக மோசமாக மாறியது. செய்தி தகவல் அலுவலகத்தால் பிரசுரிக்கப்பட்ட ஒரு தகவலின்படி 'இந்தியாவில் 2015-2016 காலகட்டத்தில் மொத்தத்தில் 34707 பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டும் மனித வணிகத்திற்காக கடத்தப்பட்டுள்ளனர். 2016-ம் ஆண்டில் 19000 பெண்களும், குழந்தைகளும் கடத்தப்பட்டனர். அதாவது ஒவ்வொரு நாளும் 52 பெண்கள் மற்றும் குழந்தைகள் சராசரியாக கடத்தப்படுகின்றனர் என்பதையே இது குறிப்பிடுகிறது.

நாகப்பன், கஸ்தூரி மற்றும் புவனாவின் நிஜ வாழ்க்கையின் அனுபவங்கள் இந்த மனித வணிகத்தின் பல்வேறு வடிவங்கள் மற்றும் அம்சங்களை வெளிப்படுத்துகிறது. கரும்பு அரவை தொழிலகத்தில் கொத்தடிமை தொழிலாளர்களாக ஆக்கப்பட்ட நாகப்பன் மற்றும் கஸ்தூரிக்கு அவர்களை நயவஞ்சகமாக கவர்வதற்கு முன்பணம் வழங்கப்பட்டது. தனது பெற்றோர்களின் கடனுக்கு பிணையாக புவனா ஆக்கப்பட்டாள். ஆனால் அவள் கடத்தப்பட்டு ஒரு குழந்தை தொழிலாளியாக வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டாள். 6 வயதான புவனா, வீட்டு வேலைக்கார பெண்ணாக, அந்த வீட்டு குடும்ப தலைவனின் கைகளில் அடி, உதையும், சித்ரவதையும் அனுபவித்தாள்.

மனித வணிகத்தில் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள், வன்முறை வழிமுறைகளின் வழியாக அவர்களது முதலாளிகளால் லாப நோக்கத்திற்காக, உடல்ரீதியாக அல்லது உளவியல் ரீதியாக கட்டுப்பாடுகளின்கீழ் காவலில் வைக்கப்படுகின்றனர். மனித வணிகத்தால் பாதிக்கப்படுகிற அப்பாவி மக்களின் வலியும், துன்ப, துயரமும் சுரண்டல் நடைபெறுகின்ற தொழிலகங்களின் பின்னால் மறைக்கப்பட்டிருக்கிறது. அச்சமும், நம்பிக்கையில்லாத அவலமும் கலந்த ஒரு வாழ்க்கையைத் தான் அவர்கள் வாழ்கின்றனர். இத்தகைய மனித வணிக நேர்வுகள் பலவற்றில் விடுவிக்கப்படுவோம் என்ற நம்பிக்கையை பாதிக்கப்படுபவர்கள் கைவிட்டுவிடுகின்றனர்; இந்த அடிமைத்தனம் தான் தங்களது விதி என்று மனதளவில் ஏற்றுக்கொள்கின்றனர். 

எனினும், நாகப்பனும், கஸ்தூரியும் எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தொழிலகத்தின் முதலாளிக்கு எதிராக ஒரு புகாரை பதிவு செய்ய காவல்துறைக்கு சென்றனர். அவர்கள் தேர்வு செய்த பாதை எளிதானதல்ல; ஆனால், காவல்துறையிடம் போவதைவிட அவர்களுக்கு வேறு வாய்ப்பு ஏதும் இல்லை. தொடக்கத்தில் தங்கள் மீதான சுரண்டல் மற்றும் தங்களது மகள் கடத்தப்பட்டது குறித்து விளக்கமளிக்க அவர்கள் சிரமப்பட்டனர். இந்த விஷயத்தை சந்தேக கண்ணோடு காவல்துறை கையாண்டது. ஆனால், ஒரு என்ஜிஓ அமைப்பின் உதவியோடு தங்களை கொடுமைக்கு ஆளாக்கிய அந்த சுரண்டல் முதலாளி மீது ஒரு புகாரை காவல்துறையில் நாகப்பன் மற்றும் கஸ்தூரியால் வெற்றிகரமாக பதிவு செய்ய முடிந்தது. அதன்பிறகு, புவனாவை காவல்துறை மீட்டு அழைத்து வந்து, நாகப்பன் மற்றும் கஸ்தூரியிடம் ஒப்படைத்தது. மிக மோசமான நிலையில் அவளை அவர்கள் பார்த்தபோது, அதை நம்ப இயலாத பெற்றோர் இருவரும் மகளின் நிலையை நினைத்து தொடர்ந்து கண்ணீர் விட்டு அழுவதைத் தவிர அப்போது அவர்களுக்கு வேறு வழியில்லை. ஆறு வயது என்ற குழந்தை பருவத்தில் அவள் பட்ட கஷ்டத்தையும், அனுபவித்த கொடுமையையும் அவளது நிலைமை அவர்களுக்கு வெளிப்படுத்தியது. 

அந்த கொத்தடிமை நிலையிலிருந்து நாகப்பன், கஸ்தூரி மற்றும் புவனா விடுவிக்கப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கப்பட்டது. தங்களது மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அரசிடமிருந்து பெற்ற வீட்டுமனை பட்டாவைத் தொடர்ந்து அதில் அவர்கள் ஒரு வீட்டை கட்டினர். புவனா இப்போது ஒரு தனியார் பள்ளியில் சேர்ந்து நன்றாக படிக்கிறாள். கொத்தடிமை தொழிலாளர்களாகவும், மனித வணிகம் என்ற கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களாகவும் இந்நாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் மத்தியில் இந்த கதை ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.

மனித வணிகம் என்ற குற்றம் நிஜமானது மற்றும் நம்மைச் சுற்றி தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. தேனீரில் நாம் கலக்கும் சர்க்கரை, நாகப்பன் மற்றும் கஸ்தூரி போன்ற கொத்தடிமை தொழிலாளர்கள் இரவும், பகலும் கொத்தடிமைத்தனத்தில் சுரண்டப்பட்ட ஒரு சர்க்கரை ஆலையிலிருந்து வந்ததாக இருக்கக் கூடும். அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் அடைக்கப்பட்டிருக்கிற சாக்கு பைகள், ஆறு வயதே ஆன புவனா போன்ற சிறு குழந்தையின் சின்னஞ்சிறு கைகளால் ஆற்றில் கழுவி சுத்தம் செய்யப்பட்டதாக இருக்கக்கூடும். நாம் அணிகிற ஆடைகள், இளம் பெண்கள், வேலை என்ற பெயரில் சுரண்டப்படுகிற ஜவுளி மில்களில் நெய்யப்பட்டதாக இருக்கக்கூடும். நாகப்பன், கஸ்தூரி மற்றும் புவனா ஆகியோர் விடுவிக்கப்பட்டு விடுதலைக் காற்றை சுவாசித்த அவர்களது கதையை சொல்வதற்கு உயிரோடு இருக்கின்றனர்; ஆனால் இவர்களைப் போன்ற வேறு பலர், அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்ட, கொத்தடிமையாக வைக்கப்பட்டிருந்த இடங்களிலேயே மண்ணோடு மண்ணாக புதைக்கப்படுகின்றனர்.

மனித வணிகத்தில் பாதிக்கப்படுபவர்களை அடையாளம் காணவும், விடுவிக்கவும் மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கவும் அரசும், என்ஜிஓ அமைப்புகளும் பணியாற்றி வருகின்றனர். குடிமை சமூகமானது இதை உணர்ந்து, மனித வணிகம் என்ற கொடுமையான குற்றத்திற்கு எதிராக புரட்சியை நிகழ்த்த கைகோர்த்து செயல்பட்டாலொழிய இந்த அவலங்கள் நிற்கப்போவதில்லை. இக்குற்றத்தை, கொடுமையை அச்சமின்றி தொடர்ந்து நிகழ்த்தும் இந்த கொடுங்கோலர்கள் அனைத்து இடங்களிலும் இருக்கின்றனர். குழந்தைகள் மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நபர்களை அடையாளம் காணும் அவர்கள், அவர்களை கடத்தி, அல்லது நயவஞ்சகமாக தங்கள் வலையில் சிக்கவைத்து அவர்கள் வழியாக இலாபம் சம்பாதிக்கின்றனர். இந்த வன்கொடுமையில் ஈடுபடும் மனித வணிக கொடுங்கோலர்கள் தங்களது செயல்நடவடிக்கை முறையை சமீபத்தில் மாற்றிக் கொண்டிருக்கின்றனர். பலர் இணைந்த ஒரு வலையமைப்பாக செயல்படும் இவர்கள் அவர்களது நடவடிக்கைகளை இரகசியமாக, வெளியே தெரியாமல் மேற்கொள்கின்றனர். மனித வணிக குற்றத்தை எதிர்த்துப்போராடி வெல்வதற்கு, அரசு, என்ஜிஓ-க்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய மூன்று தரப்பினருமே ஒருமித்த ஒரு அணியாக இணைந்து செயல்படுவது மிக முக்கியமாகும். 

இத்தருணத்தில் நாம் நினைவில் கொள்ளவேண்டிய நிஜம் ஒன்று இருக்கிறது; பல நாகப்பன்கள், கஸ்தூரிகள் மற்றும் புவனாக்கள், கொத்தடிமையிலிருந்தும் மற்றும் மனிதவணிகத்தின் பல்வேறு கோர வடிவங்களிலிருந்தும் விடுவிக்கப்பட நம்மை எதிர்நோக்கி இன்னும் காத்திருக்கின்றனர்.

- மைக்கிள் யங்காட், இயக்குநர் - ஐஜேஎம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com