புராரி விவகாரம் ‘கூட்டுத் தற்கொலை’ அல்ல ‘விபத்து’: வெளிவந்தது உளவியல் பிரேதப் பரிசோதனை முடிவு!

அவர்களது நோக்கம் தங்களது தந்தையின் ஆன்மாவின் குரலைக் கேட்பதாகவும், கடவுளை அடைவதாகவுமே இருந்திருக்கிறதே தவிர தங்களில் யாரும் இம்முயற்சியின் வாயிலாக உயிரை விடக்கூடும் என்ற எண்ணம் அவர்களுக்கு
புராரி விவகாரம் ‘கூட்டுத் தற்கொலை’ அல்ல ‘விபத்து’: வெளிவந்தது உளவியல் பிரேதப் பரிசோதனை முடிவு!

இந்தியாவை உலுக்கிய புராரி கூட்டுத் தற்கொலை வழக்கில் பிரேதப் பரிசோதனை முடிந்து விட்ட பச்சத்தில் அது குறித்த தகவல்களை அறிக்கையாகப் பெற்றுக் கொண்ட காவல்துறை தற்போது அவ்வழக்கில் உளவியல் பிரேதப் பரிசோதனை அறிக்கை பெற முற்படுவதாக கடந்த மாதம் செய்தி வெளியிட்டிருந்தோம். சிலருக்கு இந்த உளவியல் பரிசோதனை என்றால் என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

உளவியல் பிரேதப் பரிசோதனை?!

உளவியல் பிரேதப் பரிசோதனை என்பது தற்கொலை நிகழ்வதற்கு முன்னும், பின்னுமான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் மனநிலையை ஆராயும் முயற்சி.

இந்தப் பரிசோதனை நிகழ்த்த மொத்தம் 40 வகையான சோதனைகளை உளவியல் மருத்துவர்கள் கையாள்வார்கள். பிரேதப் பரிசோதனையில் இப்படியொரு நூதன முறை 1961 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. சந்தேகத்திற்கிடமான வகையில் நிகழும் மரணங்களை ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்டறிய மட்டுமே இத்தகைய அரிதான பிரேதப் பரிசோதனை முறை பின்பற்றப்படுகிறது. இந்தப் பரிசோதனை மூலமாக இறந்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறை, குணநலன்கள் உள்ளிட்டவை சோதனைக்கு உட்படுத்தப்படும். எளிதாகச் சொல்வதென்றால் அறிவியல் பரிசோதனை, இறந்தவரின் பூர்வீகத்தை ஆராய முற்படும் தொல்லியல் பரிசோதனை மற்றும் இறந்தவர்களின் ரகசிய நடவடிக்கைகளை கருத்தில் எடுத்துக்கொண்டு ஆராய முற்படும் துப்பறிவியல் எனும் பலதரப்பட்ட சோதனைகளின் கூட்டு முயற்சியே இந்த உளவியல் பிரேதப் பரிசோதனை என்று சொன்னால் சரியாக இருக்கும்.

இந்தப் பரிசோதனை வாயிலாக புராரி கூட்டுத் தற்கொலை நிகழ்ந்ததின் பின்னணியை ஓரளவிற்குத் துல்லியமாகக் கணக்கிட விரும்புகிறது காவல்துறை. 

உளவியல் பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் தெரியும் பட்சத்தில் ஒருவேளை புராரி கூட்டுத்தற்கொலை மர்மத்தின் முடிச்சுகள் அவிழலாம்.

இம்மாதிரியான உளவியல் பிரேதப் பரிசோதனைகள் அனைத்து கொலை மற்றும் தற்கொலை மரணங்களிலும் நிகழ்த்தப்படுவது வழக்கமல்ல. 

இது முற்றிலும் அரிதான பரிசோதனை.

இந்த வழக்கில் இதுவரை 200 க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

மேலே உள்ளது பழைய செய்தி...

இச்செய்தியின் அடிப்படையில் புராரி கூட்டுத் தற்கொலை விவகாரத்தில் உண்மை கண்டறிவதில் மேலும் என்னென்ன முன்னேற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்று நோக்கினால். புராரி விவகாரத்தை கூட்டுத் தற்கொலை என்று வகைப்படுத்தக் கூடாது. அதை ஒரு விபத்தாகக் கருதவே உளவியல் பிரேதப் பரிசோதனை வழிவகுத்துள்ளது என்கின்றன பரிசோதனை முடிவுகள்.

புராரி விவகாரம் ‘கூட்டுத்தற்கொலை’ அல்ல அது  ‘விபத்து’!

டெல்லி காவல்துறையினர் சிபிஐ யிடம் கடந்த ஜூலை மாதம் புராரி கூட்டுத்தற்கொலை விவகாரத்தில் உளவியல் பிரேதப் பரிசோதனை நிகழ்த்தி உண்மை கண்டறிய கோரியது. அதன்படி சிபிஐ நிகழ்த்திய உளவியல் பரிசோதனை முடிவுகள் கடந்த புதன்கிழமை மாலையில் சிபிஐ வசம் வந்தடைந்தது.

உளவியல் பிரேதப் பரிசோதனை முடிவு!

அதனடிப்படையில் தெரிய வந்த உண்மை என்னவென்றால், புராரியில் அன்று இறந்தவர்களான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்குமே தாம் இறக்கப் போகிறோம் என்ற உணர்வோ அல்லது எதிர்பார்ப்போ, அது குறித்த அச்சமோ இருக்கவில்லை. அவர்கள் தாங்கள் நம்பிய ஒரு சடங்கை நிறைவேற்றுவதாக எண்ணியே இச்செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள். கடைசிவரை இது ஒரு தற்கொலை முயற்சி என்ற எண்ணமே அவர்களுக்கு இருந்திருக்கவில்லை என்கிறது பரிசோதனை முடிவு.

புராரி மரணங்களில் தெரிய வந்த மற்றுமொரு உண்மை. சந்தாவத் குடும்பத்தினர் கடந்த 11 ஆண்டுகளாக தொடர்ந்து எழுதி வந்த டைரி. அந்த டைரியில் இருந்த பெருமளவு தகவல்களில் முக்கியமானது அக்குடும்பத்தினருக்கு இருந்து வந்த தாந்த்ரீக நம்பிக்கை. மறைந்த தந்தையின் ஆன்மா வந்து தங்களை வழிநடத்துவதாக சந்தாவத் குடும்பத்தின் இளைய மகன் லலித் சந்தாவத் தான் உறுதியாக நம்பியதோடு தனது குடும்பத்தினரையும் மூளைச் சலவை செய்து அதை நம்ப வைத்துள்ளார். கடவுளை அடைவதைப் பற்றியதான மாய நம்பிக்கையில் ஊறிப் போனவர்களான சந்தாவத் குடும்பத்தினர் தங்களது குடும்ப உறுப்பினரான லலித்தின் தூண்டுதலாலும், போதனைகளாலும் இப்படி உயிருக்கே ஆபத்தான சம்பிரதாயத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அவர்களது நோக்கம் தங்களது தந்தையின் ஆன்மாவின் குரலைக் கேட்பதாகவும், கடவுளை அடைவதாகவுமே இருந்திருக்கிறதே தவிர தங்களில் யாரும் இம்முயற்சியின் வாயிலாக உயிரை விடக்கூடும் என்ற எண்ணம் அவர்களுக்கு கிஞ்சித்தும் இருந்திருக்கவில்லை என்கிறது சைக்கலாஜிக்கல் அடாப்சி (உளவியல் பிரேதப் பரிசோதனை’ அறிக்கை.

வெளியூர்களில் வசித்ததால் இந்தக் கொடுமையான நிகழ்விலிருந்து தப்பியவர்களாக சந்தாவத் குடும்ப உறுப்பினர்களான மூத்த மகன் தினேஷ் சிங் சந்தாவத், மற்றும் சுஜாதா நாக்பால் குடும்பத்தினரையும் சிபிஐ இவ்வழக்கிற்காக உளவியல் பரிசோதனைக்கு உட்படுத்தியிருந்தது. அதிலிருந்து தெரிய வந்த உண்மைகளும் கூட சந்தாவத் குடும்பத்தினருக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணமெல்லாம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதாகவே இருந்தது.

இறந்த சந்தாவத் குடும்பத்தினர்...

புராரியில் ஒரே நாளில் சந்தாவத் குடும்ப உறுப்பினர்களான 77 வயது நாராயன் தேவி, அவரது மகள் 57 வயது பிரதிபா, அவரிடைய மகன்களான பாவ்னேஷ் (50) மற்றும் லலித்(45), பாவ்னேஷின் மனைவி சவிதா (48), அவர்களுடைய மூன்று வாரிசுகளான மேனகா (23), நீத்து(25) மற்றும் தீரேந்திரா (15), லலித்தின் மனைவி டினா(42) அவர்களுடைய 15 வயது மகன் துஷ்யந்த், பிரதிபாவின் மகள் ப்ரியங்கா என் மொத்தம் 11 பேர் ஒரே நாளில் தூக்கில் தொங்கி உயிரிழந்தனர். இவ்வழக்கு முதலில் தற்கொலையாகக் கருதப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள உளவியல் பிரேதப் பரிசோதனை அறிக்கை இது தற்கொலையல்ல விபத்து என்று கண்டறிந்திருப்பது பெரும் அதிர்ச்சி.

தாந்த்ரீக நம்பிக்கை மரணத்துக்கு இட்டுச் சென்ற கொடுமை!

எத்தனை செல்வம் இருந்த போதும். குடும்பத்தினரில் பெரும்பாலானோர் கற்றறிந்த கல்விமான்களாய் இருந்த போதும் சம்பிரதாய, சடங்குகளின் மீதான மூடநம்பிக்கைகள் வாழ வேண்டிய இளந்தளிர்கள் முதல் குடும்பத்தின் மூத்தவர்கள் வரை பலி கொண்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. தாம் சாகப் போகிறோம் என்ற உணர்வே இன்றி தம்மை சாவுக்கு ஒப்புக் கொடுத்த அந்த 11 பேரின் வாழ்க்கை மத நம்பிக்கை என்ற பெயரில் மூட நம்பிக்கைகளில் ஆழ்ந்திருப்பவர்களுக்கான எச்சரிக்கை மணி என்றால் அதில் தவறில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com