தமிழகத் திருமணங்களில் முதன்முறையாக ‘மினி பெட் பாட்டில்’ கலாச்சாரத்தை துவக்கி வைத்தவர் இவரே!

தமிழகத் திருமணங்களில் முதன்முறையாக ‘மினி பெட் பாட்டில்’ கலாச்சாரத்தை துவக்கி வைத்தவர் இவரே!

அறுசுவை அரசு’ நடராஜன்தான் விருந்து படைத்தார். ஏக தடபுடல். முதன் முறையாக, இலைக்கு ஒன்றாக சிறிய பிஸ்லேரி வாட்டர் பாட்டிலை வழங்கி அசத்தினார்.

அறுசுவை அரசு நடராஜன் நினைவேந்தல்!

அறுசுவை அரசு நடராஜன் 17.09.18 அன்று 90வது வயதில் நளன் இருக்கும் இடத்திற்குப் போய்ச் சேர்ந்தார்... அவர் மறைந்தாலும் அவர் விட்டுச் சென்ற சமையல் சாம்ராஜயம் என்றென்றைக்குமாக தமிழகத்தில் தனது  அறுசுவைகளையும் அள்ளித்தந்து உணவுப் ப்ரியர்களை அசத்த மறக்காது! அவரது நினைவாக பிரபல நகைச்சுவை எழுத்தாளம் ஜே எஸ் ராகவன் பகிர்ந்து கொண்ட நேச நினைவலைகளே இக்கட்டுரை!

அடிப் பிடிச்ச பாயசமா?

வருஷம் ஞாபகமில்லை. அகாடமியில் அறுசுவை அரசு நடராஜ ஐயரின் கேன்டீன் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் முன்று வேளைகளில் மதிய உணவு நேரம். டிசம்பர் மாத. மிதமான வெயில். 
    

‘வாங்கோ, வாங்கோ என்று வாயெல்லாம் பல்லாக கைகளைக் கூப்பி என்னையும் என் மனைவியையும் வரவேற்றார். சிவந்த மெல்லிய உடல். தும்பைப்பூ நிற முடி. பால் வெள்ளை விபூதி. வெள்ளை அரைக் கைச் சட்டை. வெள்ளை வேட்டி.  அவரின் வரவேற்புக்கு முன்னால் டைனிங் ஹாலிலிருந்து கும்மென்று வந்த அறுசுவை தயாரிப்புகளின் பின்னிப் பிணைந்து வந்த கதம்ப வாசனை ஏற்கனவே எங்களை வரவேற்றுவிட்டது.
    

‘எப்போ பிரியாவுக்கு கல்யாணம்? மாப்பிள்ளை கிடைச்சாரா?’’
    

‘மாப்பிள்ளை இனிமேதான் கிடைக்கணும். ஆனா, கேட்டரர் எப்பவோ கிடைச்சாச்சு.’
    

‘யாரு?’
    

‘வேற யாரு? நீங்க தான்!’
    

அறுசுவை அட்டகாசமாகச் சிரித்தார். ‘டேய், நாராயணா, சாரையும், மாமியையும் உள்ளே அழைச்சிண்டு போய் கவனிடா’
    

சாப்பிட்டு எழுந்துகொள்ள மூன்று முறை எம்பி  முயன்றும் முடியவில்லை. கிரேன் இருந்தால் சௌகரியப் படும்... என்று நினைத்தேன்.
    

கை அலம்ப, காலி நாற்காலிக்காகத் தயாராக நின்று கொண்டிருந்த பசித்த மாந்தர்கள் ஊடே புகுந்து கையை அலம்பிவிட்டு வாசலுக்கு வந்தேன்.
    

அறுசுவை நின்று கொண்டிருந்தார். முகமெல்லாம் சோகம் அப்பிக் கிடந்தது.

‘என்ன ஆச்சு?’ என்று பதற்றத்துடன் கேட்டேன்.

‘அது ஒண்ணுமில்லை….’அறுசுவை தடுமாறினார்.

‘சட்னு சொல்லுங்கோ. இன்னிக்கு சாப்பாடு எப்படி?’

வலது கை கட்டை விரலை  ஆகாசத்தை நோக்கி உயர்த்திக் காண்பித்தேன். 

‘சூப்பர்’ என்றாள் என் மனைவி இரண்டாவது நாயனமாக வாங்கி வாசித்தாள். 

‘பாயசம்? பாயசம்? பால் பாயசம்.’

‘அதான் டாப் இன்னிக்கு. மகாராஜா  கிரீடத்திலே இருக்கிற வைடூரியம் மாதிரி?’

‘;நெஜத்தைத்தானே சொல்றேள்.

ஆமா, நீங்க நெஜம்தானே சொல்வேள். பின்னே இன்னிக்கு ஒருத்தர் லைட்டா  அடிப் பிடிச்சுப் போன வாசனை வந்ததுன்னு சொல்லிட்டுப் போனாரே.’

‘அப்படியா? யார் அது?’ எங்கே?...’ நான் கேட்டேன்.

‘அதோ, அந்த நீலப் புடைவை மாமி. சந்தனக் கலர் ஜிப்பா மாமாவோட  போறாரே. அவர்தான்.’

நானும் என் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சிரித்துக் கொண்டோம்’

‘ஏ…ஏன்…ஏன் எதுக்கு சிரிக்கிறேள்?’

‘அதுவா. சொல்றேன். கதை அப்படிப் போறதா?  எங்களுக்கு எதிரேதான் அவா ரெண்டு பேரும் உக்காந்து சாப்பிட்டிண்டு இருந்தா. அந்த மாமா சாப்பிட மாத்திரம் வாயைத் திறந்துண்டு இருந்திருக்கலாம். அப்படி இல்லாம,  ஒவ்வொரு ஐட்டத்தையும் சப்புக் கொட்டி சாப்பிட்டு விட்டு,  பொண்டாட்டியைப் பாத்து, ‘பச்சடின்னா, இது பச்சடி. நீயும் பண்றியே. இது உசிலி.  நீயும் அன்னிக்குப் பண்ணினியே. இது ரசவாங்கி நீயும் பண்றியே. பாயசம்னா இது பாயசம்.’  அப்படின்னு சொல்லிண்டே சாப்பிட்டிண்டு இருந்தார். எந்தப் பொம்மனாட்டி இதை சகிச்சிப்பா. அதான் கறுவிண்டு, கோவத்தை உங்க மேலே கொட்டிட்டா. மாமாவோட மனசுதான் அடிப் புடிச்சுப் போயிடுத்து….’

மேலே மூடியிருந்த ஆகாயம் திடீரென்று வெளுத்தது. அறுசுவையின் முகத்தில் புன்னகை மறுபடியும் பூத்தது. 

‘டேய், நாராயணா, ராகவன் சாருக்கும், மாமிக்கும் இரண்டு கப்பிலே சூடா பாயசம் கொண்டாடா’ என்று குதூகலத்துடன் உத்தரவு போட்டார்.
                    

(என்னுடைய மகள் பிரியாவின் திருமணம் 2000த்தில் நடந்தது.)

‘அறுசுவை அரசு’ நடராஜன்தான் விருந்து படைத்தார். ஏக தடபுடல். முதன் முறையாக, இலைக்கு ஒன்றாக சிறிய பிஸ்லேரி வாட்டர் பாட்டிலை வழங்கி அசத்தினார். இதில் வேடிக்கை என்னவென்றால், கல்யாணத்துக்கு வந்திருந்த சில வி.ஐ.பிக்கள் இரண்டு மூன்று பாட்டில்களை விரும்பிக் கேட்டு வாங்கிக் கொண்டு போனார்கள்.

தமிழகத் திருமணங்களில் மினி பெட் வாட்டர் பாட்டில் கலாச்சாரத்தை துவக்கி வைத்தவர்...

(தமிழகத்தில் திருமண விழாக்களில் எல்லோரும் எவர்சில்வர் டம்ளர்களில் தண்ணீர் வைத்துக் கொண்டிருந்த காலத்தில் பிளாஸ்டிக் பெட் பாட்டில்களில் தண்ணீர் வைப்பதெல்லாம் புதுமையான விஷயம். 2000 க்கு முன்பு வரை கடைகளில்  பெட் பாட்டில்களில் தண்ணீர் விற்பனை கூட அரிதாகத்தான் இருந்தது. பிஸ்லேரி வாட்டர் அருந்துவது அப்போது அந்தஸ்தான விஷயங்களில்  ஒன்றாகக்கூட கருதப்பட்டது. அப்படியான காலத்தில் கட்டுரையாளரின் மகள் திருமணத்தில்  அறுசுவை அரசு நடராஜன் முதன்முறையாக மினி பெட் பாட்டில் கலாச்சாரத்தை துவக்கி வைத்து விருந்தினர்களைப் புருவம் உயர்த்தி சபாஷ் சொல்ல வைத்தார் என்ற விஷயம் வேறெங்கும் பதிவானதாகத் தெரியவில்லை!)

கட்டுரை ஆசிரியர்  ஜே எஸ் ராகவன், பிரபல நகைச்சுவை எழுத்தாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com