மானுடம் தோற்குதம்மா!

மியான்மரில் ஒரு மிகக் கொடூரமான மனிதநேய இடர்ப்பாடு அரங்கேறி வருகிறது. மியான்மரில் ராக்கைன் மாநிலம் ரோகிங்கியா முஸ்லிம்களின் தாயகம். ஏறத்தாழ பத்து லட்சத்துக்கும்

மியான்மரில் ஒரு மிகக் கொடூரமான மனிதநேய இடர்ப்பாடு அரங்கேறி வருகிறது. மியான்மரில் ராக்கைன் மாநிலம் ரோகிங்கியா முஸ்லிம்களின் தாயகம். ஏறத்தாழ பத்து லட்சத்துக்கும் அதிகமான பர்மிய மொழி பேசும் முஸ்லிம்கள் இங்கே வசிக்கிறார்கள். இவர்களுக்கு எதிராக இப்போது மியான்மர் ராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது.
கடந்த மாதம் 9-ஆம் தேதி எல்லைப்புறத்தில் இருந்த மூன்று ராணுவச் சோதனைச் சாவடிகள் தாக்கப்பட்டன. இதன் பின்னணியில் இருந்த ஜிகாதி முஸ்லிம்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக ராணுவம் கூறுகிறது. இந்த நடவடிக்கையில் 150-க்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஏறத்தாழ 30,000 பேர் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டிருப்பதும், ஆயிரக்கணக்கானோர் உயிருக்குப் பயந்து வெளியேறுவதும் ராணுவத்தின் கொடூரமான தாக்குதலை வெளிப்படுத்துகின்றன. தப்பி ஓடுபவர்கள்கூடச் சுட்டுக் கொல்லப்படுவதாகக் கூறப்படுகிறது.
அது மட்டுமல்ல, ஒட்டுமொத்த ரோகிங்கியாக்களின் மீதும் தாக்குதல் நடைபெறுவதால், ஆயிரக்கணக்கானவர்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் கேட்டுத் தப்பி ஓடுகிறார்கள். ஆனால், எந்த நாடும் அவர்களுக்கு அடைக்கலம் தரத் தயாராக இல்லை.
ரோகிங்கியா முஸ்லிம்கள் தாக்கப்படுவதும், அவர்கள் உயிருக்குப் பயந்து அண்டை நாடுகளில் தஞ்சம் கேட்டுக் கெஞ்சுவதும் புதியதொன்றுமல்ல. புத்த மதத்தினர் பெரும்பான்மையாக உள்ள மியான்மரில், ராக்கைன் பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் பல ஆண்டுகளாக வாழ்கிறார்கள். இவர்கள் வங்கதேசத்திலிருந்து குடிபெயர்ந்த வந்தேறிகள் என்பதுதான் மியான்மர் மக்களின் பொதுவான கருத்து. அவர்கள் ரோகிங்கியாக்களை மியான்மர் குடிமக்களாக ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களுக்குக் குடியுரிமையும் தரப்படுவதில்லை.
மியான்மரால் குடியுரிமை மறுக்கப்பட்ட ரோகிங்கியாக்களை அண்டை நாடுகளான வங்கதேசமோ, தாய்லாந்தோ, மலேசியாவோ ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. தங்களுக்கென்று நாடு இல்லாத நிலையில் தவிக்கும் ரோகிங்கியாக்கள் அண்டை நாட்டு எல்லையில் தடுக்கப்பட்டு விடுகிறார்கள். அதனால், அவர்கள் பல முறை தோணிகளில் ஏறி அண்டை நாடுகளுக்குச் செல்ல முற்படுவதும், அங்கேயும் தடுக்கப்பட்டு நடுக்கடலில் தவிப்பதும் புதிதொன்றுமல்ல.
மியான்மர் அரசு அவர்களை வங்கதேசக் குடியேறிகள் என்று கருதினால், ரோகிங்கியாக்கள் தங்களை இப்போது ராக்கைன் என்று அழைக்கப்படும் அரகன் பகுதியின் பூர்வகுடிகள் என்று கூறுகிறார்கள். அவர்கள் பர்மிய மொழி பேசுவதால் வங்கதேச, மலேசிய, இந்தோனேஷிய முஸ்லிம்கள் இவர்களைத் தங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்வதில்லை. இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கவும் தயாராக இல்லை. மலேசியாவிலும், தாய்லாந்திலும் அகதிகளாக நுழைய முற்பட்ட நூற்றுக்கணக்கான ரோகிங்கியாக்கள் கொல்லப்பட்டு புதையுண்டிருப்பது சமீபத்தில் வெளிப்பட்டிருக்கிறது.
மியான்மரில் திட்டமிட்ட இன அழிப்பு நடைபெறுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இது குறித்து பௌத்தர்களின் நாடான தாய்லாந்து பேசாமல் இருப்பது புரிகிறது. ஆனால், இஸ்லாமிய நாடுகளான வங்கதேசமும், மலேசியாவும், இந்தோனேஷியாவும் மௌனம் காப்பதும், ரோகிங்கியாக்களுக்கு அடைக்கலம் தர மறுப்பதும்தான் வேடிக்கையாக இருக்கிறது.
இத்தனை காலமும் ராணுவ ஆட்சி இருந்தபோதும் சரி, இப்போது ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியைப் பிடித்த பிறகும் சரி, ஜனநாயக தேசிய லீக் கட்சியின் தலைவி ஆங் சான் சூகி எதுவுமே பேசாமல் இருப்பதும், ரோகிங்கியாக்களுக்கு ஆதரவு தெரிவிக்காமல் இருப்பதும் பலரையும் புருவம் உயர்த்தச் செய்திருக்கிறது. பல ஆண்டுகளாக நிலவி வந்த ராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய லீக் ஆட்சியைப் பிடித்தபோது இந்தப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும் என்று கருதியவர்களுக்குப் பெருத்த ஏமாற்றம்.
மியான்மரில் ராணுவம்தான் வலிமையான அமைப்பாகவும், அதிகாரம் மிகுந்ததாகவும் இருக்கிறது என்பது உண்மை. பாதுகாப்பு, ராணுவம், எல்லைக் காவல் ஆகியவற்றுடன் நிதி, பொருளாதாரம் ஆகியவற்றிலும் ராணுவத்தின் அதிகாரம் கணிசமானது. இந்தப் பிரச்னையை வளர்த்துக் கொண்டிருப்பதே ராணுவம்தான்.
இதன் மூலம் பெரும்பான்மை மக்களை அது திருப்திப்படுத்த நினைக்கிறது.
ரோகிங்கியாக்களுக்கு 1972-இல் இருந்து மறுக்கப்பட்டு வரும் குடியுரிமையாவது வழங்கப்படுகிறதா, அதற்கான முயற்சிகளை ஆங் சான் சூகி கட்சி முன்னெடுக்கிறதா என்றால் இல்லை. இப்போதும் அவர்கள் வங்கதேசத்திலிருந்து வந்த குடியேறிகள் என்றுதான் ராணுவம் கூறுகிறதே தவிர, அவர்களை மியான்மர் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இப்படி எந்த நாட்டையும் சேராமல் 10 லட்சம் பேர் இருந்து கொண்டிருப்பதை ஐ.நா.வும், உலக நாடுகளும் எதுவும் செய்ய இயலாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.
ராணுவத்தைப் பகைத்துக் கொள்ள ஆங் சான் சூகி தயாராக இல்லை என்பது வேதனையாக இருக்கிறது. இப்போது அதிகாரம் இருக்கிறதோ இல்லையோ ஆங் சான் சூகியிடம்தான் அந்த நாட்டின் நிர்வாகம் இருக்கிறது. இனியும் நாடற்ற நிலையில், அடக்குமுறையை எதிர்கொண்டு சொந்த நாட்டில் அகதிகளாக ரோகிங்கியாக்கள் தொடர்வது, நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகிக்கு மிகப்பெரிய களங்கம் என்பதை அவர் உணர வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com