சிவப்பு வணக்கம்!

ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கிறது.

ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கிறது. நவம்பர் 26-ஆம் தேதி ஹவானாவில் காலமான கியூபாவின் முன்னாள் அதிபரும், கம்யூனிஸ சித்தாந்தத்தின் கடந்த நூற்றாண்டுத் தளபதிகளில் ஒருவருமான ஃபிடல் காஸ்ட்ரோவின் அஸ்தி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சாண்டியாகோ நகரில் அடக்கம் செய்யப்பட்டது. 1959-இல் இந்த நகரத்திலிருந்துதான் ஃபிடல் காஸ்ட்ரோவும், நண்பர்களும் கியூபா புரட்சியை ஆரம்பித்து தங்கள் விடுதலைப் பயணத்தைத் தொடங்கினார்கள். இப்போது அவர்கள் சென்ற அதே வழியாக, கியூபாவின் தலைநகரான ஹவானாவிலிருந்து 900 கி.மீ. அவரது அஸ்தி திருப்பிப் பயணித்து சாண்டியாகோவில் அடக்கம் செய்யப்படுகிறது.
ஸ்பெயினின் காலனிய ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடி விடுதலை பெற்றுத் தந்த ஜோஸ் மார்டியின் கல்லறைக்கு அருகில், இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும், பாடிஸ்டாவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகவும் போராடி கியூபா புரட்சியை வெற்றிகரமாக நிகழ்த்திய ஃபிடல் காஸ்ட்ரோ அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
சாண்டியாகோ நகரம், புரட்சிகளைப் பதியம் போடும் நகரம். 19-ஆம் நூற்றாண்டில் ஸ்பெயினுக்கு எதிரான சுதந்திரக் கிளர்ச்சி இங்குதான் தொடங்கியது. அதற்குப் பிறகு இருபதாம் நூற்றாண்டில் சர்வாதிகாரி பாடிஸ்டாவுக்கு எதிராக ஃபிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா உள்ளிட்ட தோழர்கள் புரட்சியைத் தொடங்கியதும் இதே சாண்டியாகோவில்தான்.
அரை நூற்றாண்டு காலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அதன் வாசலில் இருந்தபடி ஃபிடல் காஸ்ட்ரோவால் எதிர்த்து நிற்க முடிந்திருக்கிறது என்பது நிச்சயமாக ஒரு வரலாற்றுச் சாதனைதான். "படுகொலை முயற்சிக்கு ஒலிம்பிக் போட்டிகளில் இடம் இருந்திருந்தால் எனக்குத்தான் தங்கப் பதக்கம் தரப்பட்டிருக்கும்' என்று அடிக்கடி விளையாட்டாகச் சொன்னவர் ஃபிடல் காஸ்ட்ரோ. அவர் மீது நூற்றுக்கணக்கான கொலை முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டும், அதையெல்லாம் முறியடித்த திறமை ஃபிடல் காஸ்ட்ரோவின் தனிப்பெருமை.
அல்ஜீரியா, மொசாம்பிக், நாம்பியா, அங்கோலா உள்ளிட்ட நாடுகளின் காலனிய ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் ஃபிடல் காஸ்ட்ரோவின் பங்களிப்பு முக்கியமானது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடைபெற்ற எல்லா போராட்டங்களுக்கும் ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆதரவு இருந்திருக்கிறது.
அடித்தட்டிலுள்ள சாமானியனுக்கும்கூட தரமான கல்வியையும், சிறப்பான மருத்துவ வசதியையும் அரசு அளிக்கிறது என்பதுதான், உலகமே கியூபாவைப் பார்த்து வியந்து பேசும் சிறப்பு. ஆனால், கியூபாவை வளமாக வைத்திருப்பதற்கு சோவியத் யூனியன் கொடுத்த விலை மிகப்பெரிது என்பது பலருக்கும் தெரியாது. பனிப்போர் காலத்தில் சோவியத் யூனியன் பல பில்லியன் டாலர்களை கியூபாவுக்கு மானியமாக அளித்து அமெரிக்காவுக்கு எதிரான தனது நட்பு நாட்டைப் பாதுகாத்து வந்தது. கியூபாவைப் பாதுகாப்பதற்காக சோவியத் யூனியன் செலவழித்த பெரும் பணமேகூட, அதன் வீழ்ச்சிக்கும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ சித்தாந்தம் தோல்வி அடைந்ததற்கும் காரணமாக இருந்திருக்கலாம்.
தனது நாட்டை வளப்படுத்த, ஏனைய கம்யூனிஸ நாடுகளை
ஃபிடல் காஸ்ட்ரோ பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான் நிஜம்.
சோவியத் யூனியன் பிளவுபட்டு ஆதரவு இல்லாமல் போன கட்டத்தில், கியூபாவுக்குக் கை கொடுத்தது வெனிசூலா. இப்போது, வெனிசூலாவும் திவாலாகி மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. அதனால்தான், அமெரிக்காவுடன் இருந்த விரோதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து கியூபா தனது கதவுகளைத் திறக்க முற்பட்டிருக்கிறது. ஃபிடல் காஸ்ட்ரோவைப் போலவே இப்போது அதிபராக இருக்கும் அவரது சகோதரர் ரௌல் காஸ்ட்ரோவும், கியூபாவின் நலத்தைப் பாதுகாப்பதுதான் முக்கியம் என்று கருதி செயல்படுபவர்.
தனது 32-ஆவது வயதில் புரட்சியால் ஆட்சியைப் பிடித்த
ஃபிடல் காஸ்ட்ரோ, 49 ஆண்டுகள் தொடர்ந்து சர்வதேச அளவில் போராட்டங்களைச் சந்தித்த வண்ணம் இருந்திருக்கிறார். அவர் மீதான அமெரிக்காவின் கொலை முயற்சிகளும், தனது வாசற்படியில் இருக்கும் சிறிய தீவை அடிமைப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளும் ஃபிடல் காஸ்ட்ரோவை சர்வதேச அளவில் புரட்சிக்கும், ஏகாதிபத்திய எதிர்ப்புக்கும் அடையாளமாக உயர்த்திப் பிடித்தன. அடிமைத்தனத்துக்கு எதிராகவும் வறுமைக்கு எதிராகவும் அவர் துணிந்து போராடினார் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. கியூபாவில் அனைத்து மக்களுக்கும் உணவு, கல்வி, மருத்துவம் மூன்றும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
"ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு சர்வாதிகாரி', "கியூபாவை உலகப் பொருளாதார வளர்ச்சியில் சேர விடாமல் தடுத்து விட்டவர்', "கியூபா மக்களை சுதந்திரமாக சுவாசிக்க அனுமதிக்காதவர்', "ஆயிரக்கணக்கானவர்கள் கியூபாவிலிருந்து தப்பி வெளியேறக் காரணமாக இருந்தவர்' - இப்படி அவருக்கு எதிராகப் பல விமர்சனங்கள் உண்டு.
ஆனால், அரை நூற்றாண்டு காலம் அவரால் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது; தானாகவே பதவி விலகித் தனது 90-ஆவது வயதில் இயற்கையாக மரணமடைய முடிந்தது; அவரது இறுதி ஊர்வலத்தில் கியூபா மக்கள் கண்ணீருடனும் நன்றியுடனும் கலந்து கொண்டனர் - இவையே அந்த விமர்சனங்களுக்கு அவரது பதில்.
ஜோசப் ஸ்டாலின், மாசேதுங், ஹோசிமின், சேகுவேரா ஆகியோர்களுடன் ஃபிடல் காஸ்ட்ரோவும் இருபதாம் நூற்றாண்டின் பொதுவுடமை சித்தாந்தத் தூண்களில் ஒருவராக சரித்திரத்தில் இடம் பெறுகிறார். இடதுசாரி இயக்கத்தின் மாட்சிக்கும் வீழ்ச்சிக்கும் சாட்சியாக இருந்து மறைந்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com