பாவம் குழந்தைகள்!

கடந்த சில ஆண்டுகளாக, வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக, வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வேலை பார்க்கும் பெண்களிலேயேகூட, மகப்பேறுக்குப் பிறகு பலர் வேலைக்குப் போவதை நிறுத்தி விடுவதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நகர்ப்புறங்களில் வேலைக்குப் போகும் பெண்டிர், பிரசவத்திற்குப் பிறகு வேலையிலிருந்து நின்று விடுவதற்கு மிகவும் முக்கியமான காரணம் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வீட்டில் யாரும் இல்லாமல் இருப்பது. பகல்நேரக் குழந்தைகள் காப்பகம் அதிகமாக இல்லாமல் இருப்பதால்தான் அவர்கள் தங்கள் வேலையை விட்டுவிட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பண வசதி இருந்தாலும்கூட, முறையான பாதுகாப்புடனும், கவனமாகக் குழந்தைகளைப் பேணும் ஊழியர்களுடனும் நடத்தப்படும் பகல்நேரக் குழந்தைகள் காப்பகம் போதுமான அளவு இல்லாமல் இருக்கிறது.
கடந்த மாதம் நவி மும்பையில் ஓர் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்திருக்கிறது. அங்கே இருக்கும் பகல்நேரக் குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டிருந்த ஒன்பது மாதக் குழந்தை தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
அந்தக் காப்பகத்திலுள்ள தாதி குழந்தையைப் பலமாகத் தாக்கி வீசி எறிந்ததால் தலையில் காயம் பட்டதாகத் தெரிகிறது.
அங்கே இருந்த கண்காணிப்புக் காமிராவில், குறும்பு செய்யும் குழந்தையை அந்தப் பணிப்பெண் தாக்குவதும், அந்தக் குழந்தை தூக்கி எறியப்படுவதும், தலை சுவரில் மோதி ரத்த வெள்ளத்தில் குழந்தை விழுவதும் தெளிவாகப் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில், பகல்நேரக் குழந்தைகள் காப்பகத்தின் உரிமையாளரும், அந்தப் பெண் ஊழியரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 325, 34, 23 ஆகியவற்றின்கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
மருத்துவமனையில் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதாகவும், சிறிய கீறல் காணப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். அந்தக் குழந்தை வாழ்நாள் முழுவதும் இதனால் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. காப்பகத்தில் ஊழியர் ஆத்திரத்தில் செய்த தவறு குழந்தையின் வாழ்க்கையையே பாதித்திருக்கிறது.
இந்த நிகழ்வு வெளி உலகத்துக்குத் தெரிந்ததால் பரபரப்பாகி இருக்கிறது. இதேபோல, எத்தனை எத்தனை குழந்தைகள் காப்பகங்களில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறுகின்றன என்பது தெரியாது. மனிதாபிமானம் இல்லாமலும், முரட்டுத்தனமாகவும் மூன்று வயதுக்குக் கீழேயுள்ள குழந்தைகள் நடத்தப்படும்போது, அவையெல்லாம் வெளியில் தெரியாமல் போய்விடும். குழந்தைகள் பெற்றோரிடம் சொல்லத் தெரியாத நிலையில், அவை மறக்கவோ, மறைக்கவோ பட்டுவிடும்.
இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, நவிமும்பை காவல்துறை ஆணையர், தனது தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, எல்லா பகல்நேரக் குழந்தைகள் காப்பகங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அந்தக் கேமராவைக் கணினியுடனும் குழந்தைகளின் பெற்றோரின் இணையத் தொடர்புடனும் இணைப்பதையும் உறுதிப்படுத்த முற்பட்டிருக்கிறார். அதுபோல, காப்பகங்களில் பணிபுரிபவர்கள் குறித்த விவரங்களை காப்பகத்தின் அருகிலுள்ள காவல்நிலையத்தில் பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒரு அசம்பாவிதம் நிகழும்போது, இதுபோல நடவடிக்கைகளை மேற்கொள்வதும் பிறகு படிப்படியாக எல்லாவற்றையும் மறந்து போவதும் இந்தியாவில் வழக்கமாகி விட்டிருக்கிறது. தொடர்ந்து கண்காணிப்பை நடைமுறைப்படுத்துவதில்தான் வெற்றி இருக்கிறதே தவிர, விதிமுறைகளை ஏற்படுத்துவதில் அல்ல. சில மாதங்களுக்கு முன்னால், பெங்களூருவில் ஒரு சிறுமி பள்ளிக்கூடத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளானபோது, பள்ளிக்கூடங்களைப் பாதுகாப்பானவையாக நடத்துவதற்கு பல யோசனைகள் கூறப்பட்டன. ஆனால், அவற்றில் ஒன்றுகூட நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இன்றைய நிலையில், பகல்நேரக் காப்பகங்களில் விடப்படும் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது பெண்கள் வேலைக்குப் போவது என்பது இன்றியமையாததாக மாறிவிட்டிருக்கும் சூழலில் பாதுகாப்பான பகல்நேரக் குழந்தைகள் காப்பகங்களை அதிக அளவில் ஏற்படுத்தியாக வேண்டும்.
முதலாவதாக, பகல்நேரக் குழந்தைகள் காப்பகம் குறித்து அரசு எந்தவிதக் கட்டுப்பாடுகளையோ, விதிமுறைகளையோ இதுவரை வகுக்கவில்லை. இங்கே பணிபுரியும் ஊழியர்கள், அதாவது, குழந்தை காப்பாளர்கள், தாதிகள் ஆகியோர் எந்தவிதப் பயிற்சியும் பெற்றவர்கள் அல்ல. இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகளில் மழலையர் காப்பகத்தில் பணிபுரிவதற்கான பயிற்சி வகுப்புகள் உள்ளன. அவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு, கையாளுதல் குறித்துக் கற்றுத் தரப்பட்டு, அதற்குப் பிறகுதான் காப்பகங்களில் பணிபுரிய அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் எந்தவித அனுமதியும் பெறாமல் யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பகல்நேரக் குழந்தைகள் காப்பகத்தைத் தொடங்கலாம் என்கிற நிலைமை உள்ளது. இது சரியல்ல.
குழந்தைகள் காப்பகம் அமைப்பதற்கு அரசின் உரிமம் வழங்குவது, விதிமுறைகள் வகுப்பது, ஊழியர்களுக்குப் பயிற்சியளிப்பது போன்றவற்றை அரசு உறுதிப்படுத்தியாக வேண்டும். மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் உடனடியாக கவனம் செலுத்தி, பகல்நேரக் குழந்தைகள் காப்பகங்களைப் பாதுகாப்பானதாக்குவது என்பது இன்றியமையாத தேவை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com