பூனைக்கு மணி!

இடதுசாரிக் கட்சிகள் திங்கள்கிழமை அறிவித்திருந்த நாடுதழுவிய முழு அடைப்பு, அக்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் கேரளம், திரிபுரா மாநிலங்களைத் தவிர வேறு எங்கும்

இடதுசாரிக் கட்சிகள் திங்கள்கிழமை அறிவித்திருந்த நாடு தழுவிய முழு அடைப்பு, அக்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் கேரளம், திரிபுரா மாநிலங்களைத் தவிர வேறு எங்கும் எந்தவிதத் தாக்கத்தையோ பாதிப்பையோ ஏற்படுத்தவில்லை. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், சிரமத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்றாலும், கருப்புப் பணத்துக்கும் கள்ள நோட்டுக்கும் எதிரான மோடி அரசின் நடவடிக்கையை மக்கள் மனதிற்குள் வரவேற்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களில் நடந்த உள்ளாட்சி, நகராட்சித் தேர்தல்களில் பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை, மக்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாதவகையில் கணக்கில் காட்டப்படாத பணத்துக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுபோன்ற கருத்துகள் விவரமில்லாத பேச்சு. இந்தியா போன்ற ஊழலில் திளைத்த ஒரு நாட்டில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டால், ரகசியம் வெளியாகி அத்தனை பணமும் கணக்கு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருக்கும். ரகசியம் காக்கப்பட்டிருக்கிறது என்பதும், இப்படியொரு அதிரடி முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்பதும்தான் இந்திய வரலாற்றில் இடம்பெறும் நிகழ்வு.
பா.ஜ.க. பல மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறது. மத்தியிலும் ஆட்சியில் இருக்கிறது. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் என்று பலரும் கருப்புப் பணம் வைத்திருப்பார்கள். அவர்களிடம் உள்ள கணக்கில் இல்லாத பணமெல்லாம் வெற்றுக் காகிதமாகப் போகிறது என்று பிரதமர் மோடிக்குத் தெரியாமலா இருக்கும்? அவர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தால் ரகசியம் காக்கப்பட்டிருக்குமா?
தனது கட்சிக்காரர்களில் பலரை மட்டுமல்ல, பா.ஜ.க.விற்கு ஆதரவாக இருந்த, இருந்துவரும் வணிகர்கள் அனைவரையும்கூட இந்த முடிவு பாதிக்கும் என்பது பிரதமருக்குத் தெரியாமல் இருக்குமா? இந்தியாவைப் பொருத்தவரை, அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், வணிகர்கள் மட்டுமல்ல, அரசு அதிகாரிகள், நீதித்துறையினர் என்று அங்கிங்கெனாதபடி எங்கும் ஊழல் பரவி இருக்கிறது என்பதும், கருப்புப் பணம் பெரிய அளவிலோ, சிறிய அளவிலோ அவர்கள் அனைவரிடமும் இருக்கிறது என்பதும் ஊரறிந்த உண்மை. தனது முடிவுகளால் அவர்களையும் பகைத்துக் கொண்டிருக்கிறார் பிரதமர்.
இத்தனை பேரைப் பகைத்துக் கொண்டு, கருப்புப் பணத்துக்கு எதிராகத் துணிந்து நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடியால் முடிந்திருக்கிறது என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. எந்தவொரு அரசியல்வாதியும் இதற்குத் துணியமாட்டார்கள்.
இந்த முடிவைப் பாராட்ட வேண்டிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதியமைச்சர்கள் இதைக் குறை கூறுகிறார்கள் என்பதுதான் வேடிக்கை. 2004-இல் வெறும் 3% முதல் 5% வரை இருந்த கணக்கில் காட்டப்படாத பணத்தின் அளவு இப்போது 23% முதல் 25% வரை இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த அளவுக்கு அதிகரித்த காலகட்டத்தில் பிரதமராக இருந்தவர் பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங்; நிதியமைச்சராக இருந்தவர் ப. சிதம்பரம். கருப்புப் பணம் அதிகரிக்காமல் தடுத்திருக்க வேண்டியவர்கள், கணக்கில் இல்லாத பணம் அதிகரிப்பதை வேடிக்கை பார்த்த குற்றவாளிகள் அவர்கள் இருவரும்தான்.
"ரூபாய் நோட்டு வாபஸ் மாபெரும் நிர்வாகத் தோல்வி' என்கிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். நிர்வாகத் தோல்வி என்றுகூறும் மன்மோகன் சிங், வெற்றிகரமாக இந்தப் பிரச்னையை அவருக்குத் தெரிந்த நிர்வாக உத்திகளை மேற்கொண்டு ஆட்சியில் இருந்தபோது ஏன் எதிர்கொள்ளவில்லை? இந்தப் பிரச்னையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று மாற்று யோசனை சொல்
கிறாரா என்றால் இல்லை. கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கையே கூடாது என்று கருதுகிறாரா?
தான் நிதியமைச்சராக இருந்து இப்படியொரு முடிவைப் பிரதமர் எடுக்க முற்பட்டிருந்தால் பதவி விலகியிருப்பேன் என்கிறார் ப. சிதம்பரம். அப்படியானால், கருப்புப் பணத்துக்கும், கள்ள நோட்டுக்கும் எதிராக எந்தவித நடவடிக்கையும் தேவையில்லை என்று அவர் கருதுகிறாரா? அதனால்தான், அவர் நிதியமைச்சராக இருந்தபோது, கருப்புப் பணப் புழக்கம் அதிகரிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாரா?
 புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டின் எண்ணிக்கை ரூ.5,000 கோடி முதல் ரூ.6,000 கோடி வரை என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது வெறும் ரூ.400 கோடி அளவுதான் இருக்கும் என்று கள்ள நோட்டுக்கு வக்காலத்து வாங்குகிறார், முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம். அவர் உள்துறை அமைச்சராகவும் இருந்தவர்.
மும்பைத் தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் மொத்தமாகச் செலவழித்தது வெறும் ரூ.25 லட்சம் மட்டுமே. அவை அனைத்துமே பாகிஸ்தானில் அச்சிடப்பட்ட கள்ள நோட்டுகள். ஆனால் அதனால் ஏற்பட்ட பாதிப்பு 164 பேரின் உயிரிழப்பு, 300-க்கும் அதிகமானோர் உடலூனமுற்றது, எல்லாவற்றிற்கும் மேலாக பங்குச் சந்தைச் சரிவு, வெளிநாட்டுப் பயணிகள் வருவது நிறுத்தம், உற்பத்தி முடக்கம், மும்பை மாநகரமே ஒருவாரம் ஸ்தம்பித்தது என்று ரூ.6.6 லட்சம் கோடிக்கு மேல்! ப. சிதம்பரம் கூறுவது போலவே ரூ.400 கோடிதான் கள்ள நோட்டு என்றாலும், அதனால் பயங்கரவாதிகள் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
என்றாவது ஒருநாள், யாராவது ஒருவர் கருப்புப் பணம் என்கிற பூனைக்கு மணி கட்டித்தான் தீர வேண்டும். பிரதமர் மோடி துணிந்து அந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com