தாக்குதலல்ல, பதிலடி!

கடந்த 15 ஆண்டுகளில், பாகிஸ்தானால் தூண்டிவிடப்பட்ட பயங்கரவாதிகள்

கடந்த 15 ஆண்டுகளில், பாகிஸ்தானால் தூண்டிவிடப்பட்ட பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்கெல்லாம், பதிலடி கொடுக்காமல் இந்தியா பொறுமை காத்து வந்திருக்கிறது. ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவை, இந்திய நாடாளுமன்றம், மும்பை என்று வரிசையாக நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருந்தது என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா திருப்பித் தாக்காமல் இருந்ததால், இந்தியா கூச்சலிடுமே தவிர துப்பாக்கியை எடுக்காது என்கிற நினைப்பு பாகிஸ்தானுக்கு ஏற்பட்டதில் வியப்பில்லை.
கடந்த வியாழனன்று அதிகாலையில் நிகழ்த்திய பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதல் இந்தியாவின் அணுகுமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. ராணுவ வீரர்கள் இந்திய எல்லையைத் தாண்டிச் சென்று பாகிஸ்தானிலுள்ள பயங்
கரவாதிகளின் முகாம்களை அழித்திருக்கிறார்கள் என்று கூறுவதைவிட, பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் இருக்கும் நமது காஷ்மீரத்திற்குள் உள்ள பயங்கரவாத முகாம்களைத் தகர்த்திருக்கிறார்கள் என்றுதான் இதைக் கூற வேண்டும். நமது ராணுவ முகாம்களைத் தாக்க முற்படுவோரை நாம் முன்னெச்சரிக்கையாகத் தாக்கி அழிப்பது என்பது அத்துமீறலாகாது; முன்னெச்சரிக்கை நடவடிக்கையே!
உரி தாக்குதலுக்குப் பிறகு நரேந்திர மோடி அரசு பயங்கரவாதத்திற்குத் துணைபோகும் பாகிஸ்தானைக் கட்டுக்குள் கொண்டுவர ஒன்றன் பின் ஒன்றாகப் பல நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. முதலில் சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யும் ஆலோசனையை மேற்கொண்டது. அடுத்தாற்போல, பாகிஸ்தானுக்கு நாம் அளித்துவரும் சிறப்பு வர்த்தக சலுகைகளை மறுபரிசீலனை செய்ய முற்பட்டது. அடுத்ததாக, சார்க் மாநாட்டைப் புறக்கணித்தது. இத்தனைக்குப் பிறகும்கூட, உரி தாக்குதல் குறித்து வருத்தம் தெரிவிக்கவோ, பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்தி வைப்பதாக உறுதி அளிக்கவோ பாகிஸ்தான் தயாராக இல்லை என்பதால்தான் இந்தியா நடத்திய இந்தத் தாக்குதலை சர்வதேச நாடுகள்கூடத் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.
உரி ராணுவ முகாம் தாக்குதலில் 19 வீரர்களின் உயிர்த் தியாகம், வீணாகப்போய்விடாது என்று பிரதமர் மோடி உறுதியளித்தபடியே இந்திய ராணுவம் திடீரெனத் துல்லியத் தாக்குதலை (சர்ஜிகல் ஸ்டிரைக்) நடத்தி, 56 பயங்கரவாதிகளைக் கொன்றிருக்கிறது. கட்டுப்பாட்டு எல்லைப்பகுதியில் நான்கு பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை ஏவியவர்கள் மீது இந்தியா ராணுவம் நிகழ்த்தியுள்ள துல்லியத் தாக்குதல் இந்திய எதிர்க்கட்சிகள் அனைத்தாலும் ஏகமனதாக ஏற்கப்பட்டிருப்பதே, முதல் வெற்றி.
இந்தத் தாக்குதல் குறித்த எதிர்வினையில், இந்தியா பொய் சொல்கிறது என்று முதலில் சொன்ன பாகிஸ்தான், இப்போது இது அப்பட்டமாக அத்துமீறல் என்கிறது. ஆனாலும் வேறு கருத்துகளை முன்வைக்கத் தயங்குகிறது. காரணம், உலக நாடுகள் எதுவுமே நேரடியாக பாகிஸ்தானுக்கு துணை நிற்கவில்லை.
இந்திய மக்களிடையே, இந்தத் துல்லியத் தாக்குதல் நம் கெளரவத்தைக் காப்பாற்றத் தேவையான நடவடிக்கையே என்ற கருத்து முழுமையாக இருக்கிறது. இருப்பினும் இரண்டு கவலைகளை சமூக வலைதளங்கள் உருவாக்கியுள்ளன. உலக நாடுகள் ஒதுக்கிவைக்கும் ஆத்திரத்தில் இன்னும் அராஜகத்தின் உச்சமாய் பாகிஸ்தான் செயல்பட்டால் அணுஆயுதப் போர் ஏற்படுமா என்பது முதலாவது கவலை. பாகிஸ்தான் மேலும் பயங்கரவாதிகளை இறக்கிவிட்டு, இந்திய நகரங்கள் அனைத்திலும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினால் என்ன செய்வது என்பது இரண்டாவது கவலை.
முதல் கேள்வியில் எஞ்சி நிற்கும் அச்சம் தேவையற்றது. காரணம், அணுஆயுதப் போர் ஏற்பட்டால், இந்தியாவுக்குப் பெரும் சேதம் ஏற்படும் என்றாலும், பாகிஸ்தான் என்ற நாடு உருக்குலைந்துவிடும். அது மட்டுமல்ல, ஆத்திரம் கொள்வதற்கு இத்தகைய துல்லியத் தாக்குதல் பாகிஸ்தானுக்குப் புதிதுமல்ல.
செப்டம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதலில் தொடர்புடைய காலித் ஷேக் முகமதுவைக் கைது செய்ய அமெரிக்க படையினர் 2003-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் துல்லியத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இரண்டாவது முறையாக, 2011-ஆம் ஆண்டு ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த வீட்டின் மீது, அமெரிக்க கடற்படை வீரர்கள் துல்லியத் தாக்குதல் நிகழ்த்தியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் ஏற்படாத அவமானம்,ஆத்திரம் இப்போது, கட்டுப்பாட்டு எல்லையில் நடைபெற்ற தாக்குதலுக்காக ஏற்படாது. ஆகவே அணுஆயுதப் போர், அல்லது போர் என்கின்ற தவறான முடிவுகளை பாகிஸ்தான் மேற்கொள்ள முன்வராது.
இரண்டாவது கேள்வியில் இருக்கும் அச்சம் மட்டுமே நடைமுறை உண்மை. தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், உலக நாடுகளின் முன்பாக அம்பலப்பட்டு நிற்கும் நிலையில், அதன் கோபம் எல்லையற்றதாக இருக்கும். பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் பல முனைகளிலும் இறக்கிவிடுவதற்கான அனைத்து ஆதரவான சூழ்நிலைகளையும் உருவாக்குவார்கள்.
இப்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் காட்டியுள்ள ஒற்றுமையை இனி பயங்கரவாதத் தடுப்புக்காக மத்திய அரசு உள்நாட்டில் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளிலும் காட்ட வேண்டும். பயங்கரவாதிகளுக்கு உடந்தையாக இருப்போரைக் கைது செய்யும்போது அதனை வாக்குவங்கி அரசியலாக மாற்றக்கூடாது. பயங்கரவாதிகளுக்கு நிதியைத் திருப்பிவிடும் தன்னார்வ அமைப்புகளின் கணக்கை முடக்கினால் அதனை மனித உரிமை மீறலாகசித்திரிக்கக்கூடாது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். இந்தியா வெகுண்டால் பாகிஸ்தான் என்கிற நாடு தாங்காது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com