நெருக்கம் தொடரவேண்டும்!

இன்று கோவா மாநிலத் தலைநகர் பனாஜியில், பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா,

இன்று கோவா மாநிலத் தலைநகர் பனாஜியில், பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான "பிரிக்ஸ்' கூட இருக்கிறது. இந்த மூன்று நாள் மாநாட்டில் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படப்போவதும், முக்கியத்துவம் வாய்ந்ததும் இந்தியப் பிரதமரும் ரஷிய அதிபர் புதினும் கலந்துகொள்ள இருக்கும் இருதரப்பு சந்திப்பாகத்தான் இருக்கும்.
சமீபகாலமாக இந்திய - ரஷிய உறவு தளர்ந்து வருவது போன்ற தோற்றம் காணப்படுகிறது. ரஷியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நெருக்கம், பாகிஸ்தானுடன் ரஷியா ஏற்படுத்திக்கொண்டிருக்கும் திடீர் சகவாசம், இந்தியா அமெரிக்காவுடன் நடத்திக் கொண்டிருக்கும் ராணுவக் கூட்டுப் பயிற்சி மற்றும் கடற்படைத் தளங்களை பயன்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தம் போன்றவை இருதரப்பிலும் பரஸ்பர அவநம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்தப் பின்னணியில்தான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், ரஷிய அதிபர் விளாதிமிர் புதினும் இன்று கோவாவில் நேருக்கு நேர் சந்தித்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவு குறித்துக் கலந்து பேச இருக்கிறார்கள்.
மாறிவிட்டிருக்கும் உலகச் சூழலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது, நிரந்தரப் பகைவர்களும் கிடையாது என்கிற சர்வதேச ராஜதந்திரம் நியாயம்தான் என்றாலும், இந்தியா சில சரித்திர உண்மைகளை மறந்துவிட முடியாது. சுதந்திர இந்தியாவின் ராணுவ பலத்தையும், தொழில் வளத்தையும் அடித்தளமிட்டு பலப்படுத்திக் கொடுத்தது சோவியத் யூனியன்தான் என்பதை நாம் நன்றியுடன் நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கிறோம்.
ஐ.நா. சபையில் இந்தியாவுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தும் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டபோதெல்லாம், நமக்கு ஆதரவாகவும் பக்கபலமாகவும் சோவியத் யூனியன் மட்டுமே இருந்திருக்கிறது. ஆறு முறை ஐ.நா. பாதுகாப்பு சபையில் தனது "வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியாவைக் காப்பாற்றி இருக்கிறது. 1957, 1962 இருமுறை ஜம்மு - காஷ்மீர் விவகாரம், 1961-இல் கோவாவில் இந்தியத் துருப்புகள் நுழைந்த பிரச்னை, 1971-இல் நடந்த இந்திய - பாகிஸ்தான் யுத்தத்தில் மூன்று முறை என்று ஆறுதடவை இந்தியாவுக்காகத் தனது "வீட்டோ' அதிகாரத்தை சோவியத் யூனியன் பயன்படுத்திப் பாதுகாத்திருக்கிறது.
காஷ்மீர் பிரச்னை ஐ.நா. சபையில் விவாதிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை பலமாக எழுந்தபோதெல்லாம், இந்தியாவுக்கு சாதகமாக இருந்து அதை அனுமதிக்காமல் தடுத்தது மாஸ்கோவின் நட்புறவுதான். அதேபோல, 2001 நாடாளுமன்றத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, எல்லையில் நமது படைகளைத் தயார் நிலையில் குவித்து "ஆபரேஷன் பராக்ரம்' தாக்குதலை மேற்கொள்ள இருந்த நேரத்தில், அதில் ஐ.நா. சபை தலையிட்டு மோதலைத் தவிர்க்கும் திட்டத்தை முறியடித்ததிலும் ரஷியாவுக்குப் பங்குண்டு.
இப்போதும்கூட, நமது ராணுவத்திடம் இருக்கும் தளவாடங்களில் 70% ரஷியாவில் தயாரிக்கப்பட்டவைதான். அவற்றின் பேணுகை, பழுதுபார்த்தல், தரமுயர்த்துதல் ஆகியவற்றிற்கு இந்திய - ரஷியக் கூட்டுறவு இன்றியமையாதது. "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின்படியும்கூட, ரஷியா தவிர்க்க முடியாத கூட்டாளி. குறித்த நேரத்தில் தளவாடங்கள் தரப்படுவதில்லை. உதிரி பாகங்களின் விலையில் வெளிப்படைத்தன்மை இல்லை போன்ற சில குறைகள் இருந்தாலும்கூட, இரு நாடுகளுக்கிடையே உள்ள பந்தம் மிகவும் இறுக்கமானது.
இந்தியா இப்போது உலகெங்கிலும் இருந்து ராணுவ தளவாடங்களை வாங்குகிறது. ஆனாலும்கூட 2011-15 காலகட்டத்தில் ரஷியாவிலிருந்துதான் 70% தளவாடங்களை வாங்கி இருக்கிறோம். அமெரிக்காவின் பங்கு வெறும் 14% மட்டுமே. இப்போது நாம் செய்து கொண்டிருக்கும் ராணுவக் கொள்முதல் ஒப்பந்தங்களின்படி பார்த்தாலும், வேறு எந்த நாடும் ரஷியாவின் அருகில் நெருங்கக்கூட முடியாது. ராணுவ தளவாடமானாலும், போர் விமானமானாலும், ஏவுகணைகளானாலும், இந்தியா நாடும் முதல் சந்தை ரஷியாவாகத்தான் தொடர்கிறது.
அணு மின்சக்தி நிலையங்களையே எடுத்துக்கொண்டாலும், இந்தியாவில் அணு மின்சக்தியை உற்பத்தி செய்யும் நாடு ரஷியா மட்டும்தான். ஏனைய நாடுகள் இன்னும் மூலதனம் குறித்தும், சட்டச் சிக்கல்கள் குறித்தும் விவாதித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அவர்களது உதவியுடன் ஒரு அணு மின்நிலையம்கூட இன்னும் அமைக்கப்படவில்லை.
ரஷியா பாகிஸ்தானுடன் செய்து கொண்டிருக்கும் ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்தியாவை எரிச்சலூட்டியிருப்பது நிஜம். அதிலும், உரி தாக்குதலுக்குப் பிறகும்கூட ரஷியா பாகிஸ்தானுடன் நட்புறவை வலுப்படுத்த முயற்சித்திருப்பது, இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான நட்புறவை பலவீனப்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவுடன் நாம் சில பிரச்னைகளில் நெருங்குவதுபோல, பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் தனது நட்புறவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் ரஷியாவுக்கும் இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும், தன்னை வல்லரசாக்கிக் கொள்ளத் துடிக்கும் சீனா என்கிற அண்டை நாட்டை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இரு நட்பு நாடுகளுக்கு இடையேயான உறவு என்பது பிரச்னையே இல்லாததாக இருந்துவிட முடியாது. அந்தப் பிரச்னைகளை இரு நாடுகளும் எப்படி புரிந்து கொண்டு தீர்வு காண்கின்றன என்பதில்தான், நட்புறவின் வெற்றி அடங்கி இருக்கிறது.
இன்றைய நரேந்திர மோடி, விளாதிமிர் புதின் சந்திப்பு இந்திய - ரஷிய நட்புறவை பலப்படுத்தி, கருத்து வேற்றுமைகளை அகற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com