சொல்வது எளிது!

ருவாண்டாவில் நடைபெற்ற புவிவெப்ப மாநாட்டில், சீர்வளிக் கருவி...

ருவாண்டாவில் நடைபெற்ற புவிவெப்ப மாநாட்டில், சீர்வளிக் கருவி (ஏர் கண்டீஷனர்), குளிர்பதனப் பெட்டி (ரெப்ரிஜிரேட்டர்) ஆகியவற்றிலிருந்து வெளியாகும் நீர்ம கரியமில வாயுவை (ஹைட்ரோஃபுளோரோ கார்பன்) கட்டுப்படுத்தி, புவிவெப்பத்தை 0.5 செல்ஸியஸ் குறைப்பதென 200 நாடுகள் ஒருமனதாக முடிவு செய்துள்ளன. இதில் இந்தியாவும் ஒன்று.
பாரீஸ் புவிவெப்ப ஒப்பந்தத்துக்கு இந்தியா இம்மாதம் 2-ஆம் தேதி ஏற்புறுதி அளித்தது. இந்த ஒப்பந்தத்தின் அடிக்கருத்து
உலகப் புவி வெப்பத்தை 2 செல்ஸியஸ் அதிகரிக்காதபடி, கட்டுக்குள் வைக்கும் முயற்சிகளுக்கு துணை நிற்பதுதான். தற்போது புவிவெப்பம் குறைப்பதில் தனது உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
சீர்வளிக் கருவியும், குளிர்பதனப் பெட்டியும் இல்லாத வீடுகளே இல்லை என்றாகிவிட்டது. சாதாரண தேநீர் கடையில்கூட, மென்பானங்களை குளிர்பதனப் பெட்டியில் வைத்திருக்கிறார்கள். சீர்வளிக் கருவி என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல என்றாகிவிட்டது. சாதாரண சம்பளம் வாங்குவோரும்கூட, ஒரு அறையையாவது குளிரூட்டு வசதிப்படுத்துகிறார்கள். இதற்குக் காரணம் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டது என்பதல்ல. இந்தியாவில் வெப்பமும் புழுக்கமும் அதிகரித்துவிட்டது என்பதுதான்.
அடுத்ததாக மகிழுந்துகள் (கார்கள்). ஏறக்குறைய அனைத்து
மகிழுந்துகளுமே குளிரூட்டு வசதி பெற்றவை. குளிர்பதனப்
பெட்டியின் தொழில்நுட்பம்தான் இதிலும்.
மேலைநாடுகளில் மக்கள் தொகை குறைவு. வீடுகள், மகிழுந்துகள் இரண்டுமே இந்தியாவைவிடக் குறைவு. மேலும் அவற்றின் தொழில்நுட்பத்தின் சிறப்பினால் மாசு அளவும் குறைவு. ஆனால் இந்தியா அப்படியல்ல. இங்கே குடும்பங்கள் மிகமிக அதிகம். தொழில்நுட்பத்திலும் பின்தங்கியிருக்கிறோம்.
பாரீஸ் ஒப்பந்தத்துக்கு ஏற்புறுதி அளித்த நிலையில், அமெரிக்க தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, "உலக நாடுகள், நிதியும் தொழில்நுட்பமும் வழங்கினால் இந்தியா தூய எரி
சக்திக்கு மாறுவது உறுதி' என்று குறிப்பிட்டிருந்தார்.
புதிய, உயரிய தொழில்நுட்பம் கிடைப்பதில் சிக்கல் இருக்காது. ஆனால் தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்தும்போது,
எடுத்துக்காட்டாக சீர்வளிக் கருவி, குளிர்பதனப் பெட்டி ஆகியவற்றில் புகுத்தும்போது அதன் விலை உயரும். அதனால் விற்பனை குறையும், தங்களது நிறுவனம் நட்டத்தில் இயங்க நேரிடும் என்று தொழில் நிறுவனங்கள் கண்ணீர்க்குரல் எழுப்பும்.
இந்தியாவின் 70% மின்உற்பத்தி அனல்மின்நிலையத்தின் மூலமாகத்தான் கிடைக்கிறது. பாரீஸ் ஒப்பந்தப்படி, நாம் இதனை 40% அளவுக்கு குறைத்தாக வேண்டும். புதிய அனல் மின்நிலையங்களை அனுமதிக்கக்கூடாது. செயல்படும் அனல்மின்நிலையங்
களையும் தரம் உயர்த்த வேண்டும். இதற்குப் பெருஞ்செலவு ஆகும். தனியார் அனல்மின்நிலையங்கள் வட்டியில்லா கடன்
அல்லது மானியம் கோரும். இதற்காக, பல ஆயிரம் கோடி ரூபாய் இந்திய அரசுக்குக் கூடுதல் செலவு ஏற்படும்.
இந்தக் கூடுதல் செலவுகளை வளர்ந்த நாடுகள், வளரும் நாடு
களுக்கு வழங்க வேண்டும் என்று பாரீஸ் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2020 வரை ஆண்டுதோறும் 100 பில்லியன் டாலர் நிதியுதவியை அளிக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிதியுதவி வளர்ந்த நாடுகளின் கடப்பாடு என்பதாக கட்டாயப்படுத்தப்படவில்லை. மேலும், இதனை எந்தெந்த நாடு
களுக்கு எவ்வகையில் பிரித்துக்கொடுப்பது என்பது குறித்தும் முடிவு காணப்படவில்லை. இந்நிலையில் இந்தியாவுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பது தெரியாது.
அண்மையில், புவிவெப்பம் தொடர்பாக புத்தகம் எழுதிய நாவலாசிரியர் அமிதாப் கோஷ் குறிப்பிடுகையில், "புவிவெப்பத்துக்கான மூலகாரணங்கள் பற்றிப் பேசாமல், அதற்கு தீர்வு காணாமல், இந்த விவகாரத்துக்கு (புவிவெப்பம்) தனியாகத் தீர்வு காண
முடியாது. இந்தியா தொடர்வளர்ச்சி எனும் பொருளாதார மேம்பாட்டை நோக்கி நகரும்போது இந்த விவகாரம் அத்தனை
எளிதல்ல' என்று குறிப்பிட்டுள்ளார்.
"இந்தியாவில் உருவாக்குவோம்' திட்டத்தின் கீழ் பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவுக்கு வரவழைத்துவிட்டு, அன்னிய நேரடி முதலீட்டை பெருமளவு அனுமதித்துவிட்டு, அவர்களுக்கு மின்சாரம் வழங்காமல் தொடர்வளர்ச்சி சாத்தியமில்லை. இப்போதைய நிலையில் மின்சாரத்துக்கு அனல் மின்நிலையங்களையே அதிகமாக சார்ந்திருக்கும் நிலைமை. இந்தியாவில் கிடைக்கும் பழுப்பு நிலக்கரி தரம் குறைந்தது. சாம்பல் அதிகம். ஆகவே இறக்குமதி செய்வதும் அதனை இந்தியா முழுவதுக்கும் அதிகபட்சம் 500 கிமீ தொலைவுக்கு கொண்டுபோய் சேர்ப்பதும் பெருஞ்செலவை ஏற்படுத்துகிறது. அனல் மின்சக்தி தொடர்பாக ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் இதைச் சார்ந்த தொழிலாளர்களை பாதிக்கும்.
மரபுசாரா எரிசக்தி மட்டுமே நம்பிக்கை தருவது. அதுவும் இந்தியாவின் தேவையை ஈடுசெய்ய இயலாது. ஆண்டுதோறும் ஐந்து விழுக்காடு மின்தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது. சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை ஆகிய இரண்டிலும் அடுத்த 20
ஆண்டுகளில் நாம் பெறப்போகும் மின்சாரத்தின் அளவு மொத்த தேவையில் 14 விழுக்காடாக இருக்கும் என்கிறார்கள். அணு உலைகளும் மின்உற்பத்திக்கு உதவும்.
என்ன முயற்சி செய்தாலும், இந்திய மக்கள் பங்கேற்பு இல்லாமல் புவிவெப்பத்தை குறைப்பது என்பது மிகமிக அரிது. இதை அரசு மட்டுமே செய்துவிட முடியாது. ஒவ்வொரு தனி நபரும் சேமிக்கும் ஒவ்வொரு யூனிட் மின்சாரமும் இந்தியாவுக்கு உதவும். மின்சிக்கனம் புவிவெப்பத்தைக் கட்டுப்படுத்தும். மக்கள் மனது வைத்து
ஒத்துழைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com