பூனை கண்ணை மூடினால்...

கோவா மாநிலத் தலைநகர் பனாஜியில் கூடிய "பிரிக்ஸ்' மாநாட்டின் தீர்மானங்களைவிட

கோவா மாநிலத் தலைநகர் பனாஜியில் கூடிய "பிரிக்ஸ்' மாநாட்டின் தீர்மானங்களைவிட, ரஷியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்புப் பேச்சுவார்த்தைகள்தான் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டன. பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக பாகிஸ்தான் செயல்படுகிறது என்கிற குற்றச்சாட்டை சர்வதேச அளவில் எடுத்துச் செல்ல இந்தியாவுக்கு இந்த மாநாடு உதவி இருக்கிறது என்பதில் ஐயமில்லை.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய - ரஷிய உறவில் அதிகரித்து வந்த கருத்து வேறுபாடுகளை ஓரளவு அகற்ற அதிபர் புதினுடனான பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பு உதவி இருக்கிறது.
பாகிஸ்தானுடன் ரஷியா செய்து கொண்டிருக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு முயற்சி ஒப்பந்தம் இந்தியாவை அதிருப்திக்குள்ளாக்கி இருந்த நிலையில், "பிரிக்ஸ்' மாநாட்டிற்கு நடுவில் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடந்தது. ஒரு வழியாக கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு, இந்தியாவும் ரஷியாவும் 16 ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டிருக்கின்றன. 10.5 பில்லியன் டாலருக்கான (சுமார் ரூ.70,120 கோடி) ராணுவ தளவாட ஒப்பந்தம் ரஷியாவுடன் செய்துகொள்ளப்பட்டிருக்கிறது. உரி தாக்குதலைக் கண்டித்திருப்பதுடன், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுக்கும், எடுத்த நடவடிக்கைகளுக்குத் தனது முழு ஆதரவையும் ரஷியா அளித்திருக்கிறது.
ரஷியாவுடனான பிரச்னையை சுமுகமாகப் பேசித் தீர்த்துக் கொண்டது மட்டுமல்லாமல், தனது பழைய நட்பையும், உறவையும் இந்தியா மீண்டும் வலுப்படுத்திக் கொண்டதுபோல, சீனாவின் விஷயத்தில் நமக்கு வெற்றி கிட்டவில்லை என்பதுதான் நிதர்சன நிஜம். சீன அதிபர் ஜீ ஜின்பிங்குக்கு இந்திய உடையை அணிவித்து அழகு பார்க்க நம்மால் முடிந்ததே தவிர, சீனர்களிடமிருந்து பெரிய அளவில் எந்தவித சலுகைகளையோ, அவர்களது அணுகுமுறையில் மாற்றத்தையோ "பிரிக்ஸ்' மாநாட்டின் போதான இருதரப்புப் பேச்சுவார்த்தை மூலம் நம்மால் ஏற்படுத்திவிட முடியவில்லை.
பிரம்மபுத்திரா நதிநீர் பிரச்னை குறித்து நாம் பேசவே இல்லை. பாகிஸ்தானிலிருந்து இயங்கும் ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டுமென்கிற இந்தியக் கோரிக்கையைக்கூட சீனா ஏற்றுக்கொள்ளவில்லை. பாகிஸ்தானுடனான தனது உறவில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவும் சீனா தயாராக இல்லை.
அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் இந்தியாவையும் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்வது, இந்தியாவில் கூடுதல் முதலீடு செய்வதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க முயல்வது என்கிற இந்தியாவின் இரண்டு கோரிக்கைகளையும் சீனா பரிசீலிப்பதாக கூறி இருக்கிறதே தவிர, எந்தவித உறுதியும் அளிக்கவில்லை.
சீனாவின் இந்த நிலைப்பாடு எதிர்பார்த்ததுதான். சர்வதேச அரசியலில் எல்லா நாடுகளும் நமது கண்ணோட்டத்தையும், நிலைப்பாட்டையும் ஆதரிக்கும், அனுசரிக்கும் என்று எதிர்பார்ப்பது தவறு. சீனாவைப் பொருத்தவரை, ஆதிகாலம் தொட்டே, அது இந்தியாவைவிடப் பாகிஸ்தானிடம்தான் நெருக்கமாக இருந்து வந்திருக்கிறது. அந்த நெருக்கத்தின் மூலம் இந்தியாவை ஒரு வல்லரசாக மாறிவிடாமல் தடுக்க முடியும், தனக்குப் போட்டியாக உருவாகாமல் முடக்க முடியும் என்று சீனா கருதுகிறது.
சீனா நமக்கு சாதகமாக இல்லை என்பதால்,பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் அந்நியப் பொருள்களைப் பகிஷ்கரித்ததுபோல, இப்போது சீனப் பொருள்களை பகிஷ்கரிக்க வேண்டும், அதுதான் தேசபக்தி என்பதுபோன்ற ஒரு கருத்து பரப்பப்படுகிறது. இதைவிட அபத்தமான அணுகுமுறை வேறு எதுவும் இருக்க முடியாது. இதனால் சீனா பாதிக்கப்படும் என்றோ கவலைப்படும் என்றோ நாம் நினைத்தால் அது அதைவிட முட்டாள்தனம்.
வேறு எந்தவொரு நாட்டை விடவும் சீனாவிலிருந்துதான் இந்தியா மிக அதிகமாக இறக்குமதி செய்கிறது. இந்தியாவிலிருந்து சீனா 9 பில்லியன் டாலர் (சுமார் ரூ.60,100 கோடி) அளவிற்கு இறக்குமதி செய்கிறது என்றால், சீனாவிலிருந்து நமது இறக்குமதியின் அளவு 61 பில்லியன் டாலர் (சுமார் ரூ.4,07,360 கோடி). அமெரிக்கா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இந்தியாவின் அடுத்த மூன்று பெரிய இறக்குமதி நாடுகளின் மொத்த இறக்கு
மதியை விடவும் இது அதிகம். சீனாவின் மொத்த ஏற்றுமதி அளவு 2.15 ட்ரில்லியன் டாலர் (சுமார் ரூ.143 லட்சத்து 58 ஆயிரம் கோடி). அதில் இந்தியாவுக்கான ஏற்றுமதி என்பது வெறும் 3 சதவீதம் மட்டுமே. அதனால் நாம் சீனப் பொருள்களைப் பகிஷ்கரிப்பதால் சீனா கவலைப்படப் போவதில்லை.
அதுமட்டுமல்ல, இந்தியா ஏதோ விளையாட்டு பொம்மைகளும், பட்டாசுகளும், செல்லிடப்பேசிகளும் மட்டும்தான் சீனா
விலிருந்து இறக்குமதி செய்கிறது என்று எண்ணிவிட வேண்டாம். மின்னணுப் பொருள்கள் தொடர்பாக சீனாவிலிருந்தான நமது இறக்குமதியின் அளவு 19.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1,31,557 கோடி). அணு உலைகள், இயந்திரங்கள் 10.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.70,120 கோடி). ரசாயனப் பொருள்கள் 6 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40,070 கோடி). உரம் 3.2 பில்லியன் டாலர் (சுமார் ரூ.21,370 கோடி). இரும்பு உருக்கு 2.3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.15,360 கோடி).
சீனப் பொருள்களைப் பகிஷ்கரிப்பது என்பது சிறுபிள்ளைத்தனம். அதற்கு பதிலாக சீனாவைப் போல நாம் நமது உற்பத்தியைப் பெருக்கி ஏற்றுமதிகளை அதிகரிப்பதுதான் புத்திசாலித்தனம். ஒரு நாடு வல்லரசாக மாறுவதற்கு ராணுவ பலம் இருந்தால் மட்டும் போதாது, பொருளாதாரத்திலும் வலிமை பெற்றாக வேண்டும். இந்தப் பாடத்தை உலகுக்கு அமெரிக்காவும் சீனாவும் கற்றுக்கொடுத்திருக்கின்றன. அதை நாம் புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலம்தான் சீனாவை எதிர்கொள்ள முடியும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com