தேவையற்ற சுமை!

நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகிக்க

நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகிக்க மத்திய அரசு தொகுப்பிலிருந்து வழங்கப்படும் அரிசியின் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியும், பா.ம.க. நிறுவனர் ராமதாஸூம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் இந்த விலை உயர்வு முடிவு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, கேரளத்துக்கும்தான்.
2013 செப்டம்பரில் நிறைவேறிய தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவுக்கு ஏற்புறுதி வழங்காத இரண்டு மாநிலங்கள் தமிழ்நாடும், கேரளமும்தான். ஆகவே, மத்திய அரசு இந்த இரு மாநிலங்களுக்கு மட்டும், பொதுவிநியோகத்தில் வழங்கப்படும் அரிசி மற்றும் உணவு தானியங்களை குறைந்தபட்ச ஆதரவு விலையிலேயே வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த ஆதரவு விலை அல்லது மானிய விலை என்றால் என்ன என்பது குறித்து மத்திய அரசு தெளிவாக விளக்கம் அளிக்காமல் மெளனம் காப்பது இந்தப் பிரச்னையை சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறது.
உணவுப் பாதுகாப்பு சட்டம் 10.9.2013 தேதியிட்ட அரசிதழில் வெளியானது. அதற்கு முன்பு வரை இலக்கு சார்ந்த பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்கு மேல் இருப்போருக்கு கிலோ அரிசி ரூ.7.85 (சன்ன ரகம் ரூ.8.30) வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்போருக்கு கிலோ அரிசி ரூ.5.65, அந்தியோதயா திட்டத்தில் வயதானவர்களுக்கு கிலோ ரூ.3 என்ற விலையில் மத்திய அரசு மாநில அரசுக்கு அரிசி விநியோகித்தது. மாதம்தோறும் குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ள ஒரு நபருக்கு 4 கிலோ அரிசி, சிறுவர் ஒருவருக்கு 2 கிலோ அரிசியை இந்த விலையில் வழங்க வேண்டும். பொதுவிநியோக அட்டையில் உள்ளபடி எத்தனை நபர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கிறார்கள், மேலே இருக்கிறார்கள் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு அரிசியை மட்டுமே மேற்சொன்ன விலையில் மாநில அரசுக்கு வழங்கும்.
இருப்பினும், தமிழக அரசு கடந்த 2011, ஜூன் 1}ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 2 கோடி குடும்ப அட்டைகளுக்கும் 20 கிலோ அரிசியை இலவசமாக வழங்க உத்தரவிட்டது. மாநில அரசின் நிலைப்பாடு எதுவானபோதிலும், மத்திய அரசு, பொதுவிநியோகத் திட்டத்துக்கு வழங்கும் அரிசியை வறுமைக்கோட்டுக்கு மேலே இருப்போர், கீழே இருப்போர், வயதானோர் ஆகிய புள்ளிவிவரங்களுக்கு ஏற்ப, உரிய அளவு அரிசி தானியத்தை, நிர்ணயித்த விலையில் வழங்கியது. கூடுதல் செலவு ரூ.500 கோடியை தமிழக அரசு ஏற்றது.
உணவுப் பாதுகாப்பு சட்டம் இந்த பொது விநியோகத்தில் சில மாறுதல்களைச் செய்துள்ளது. இதன்படி, கிராமப்புறங்களில் 75% குடும்ப அட்டைகளுக்கும் நகர்ப்புறங்களில் 50% அட்டைகளுக்கும் அதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு நபருக்கும் 5 கிலோ தானியம், அதாவது ஒரு கிலோ அரிசி ரூ.3, கோதுமை ரூ.2, மோட்டா ரக தானியம் கிலோ ரூ.1-க்கு விற்பனை செய்யப்படும். அதாவது, இதுதான் மத்திய அரசு பொதுவிநியோக அரிசிக்கு நிர்ணயித்துள்ள விலை.
நகர்ப்புறங்களில் 50%, கிராமப்புறங்களில் 75% அட்டை
களுக்கு மட்டுமே மத்திய அரசு தான் நிர்ணயித்த விலையில் அரிசி, கோதுமை வழங்கும். இதற்கான அளவுகோலை எவ்வாறு தீர்மானிப்பது என்பது ஒரு பிரச்னைதான் என்றாலும், வழக்கம்போல அனைவருக்கும் 20 கிலோ அரிசியை தமிழக அரசு தொடர்ந்து வழங்கினால், ஒவ்வொரு கிலோ அரிசிக்கும், ரூ.5.30 கூடுதலாக விலை கொடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
ஆனால், தி.மு.க. தலைவர், அப்படி ஏற்றுக்கொண்டால் அரிசிக்கு கிலோ ரூ.22.54 விலை கொடுத்தாக வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது பொதுச்சந்தை விலைக்கே அரிசியை மத்திய அரசு விற்கவுள்ளது என்கிறார். இப்போது மத்திய அரசு விளக்க வேண்டியது ஒன்றுண்டு. உணவுப் பாதுகாப்பு சட்டத்தை ஏற்காத தமிழ்நாட்டுக்கு அரிசி கிலோ ரூ3, கோதுமை கிலோ ரூ.2-க்கு வழங்க முடியாது என்பதால், பழைய பொதுவிநியோகத் திட்டத்தின்படி, இதுவரை வழங்கப்பட்டுவரும் விலையில், அதாவது அரிசி ரூ.8.30-க்கும் ஒரு கிலோ கோதுமை ரூ.6.10-க்கு வழங்கப்படுமா? அல்லது தி.மு.க. தலைவர் சொல்வதைப்போல சந்தை விலையில்தான் வழங்கப்படுமா என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.
சந்தை விலைக்குத்தான் மத்திய அரசிடம் வாங்கவேண்டும் என்றால், தமிழக அரசு மத்திய அரசிடம் அரிசி, கோதுமை வாங்க வேண்டியத் தேவையே இல்லை. வெளிச்சந்தையிலேயே வாங்கிக்கொள்ள முடியும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு மெளனம் காப்பதுதான் இப்பிரச்னையை குழப்புகிறது.
தமிழக அரசு அனைத்து அட்டைகளுக்கும் 20 கிலோ அரிசி வழங்குவது என்பது பெரும்பாலும் வெளியில் விற்கவும், கடத்தலுக்குமே வழி வகுக்கிறது என்பதே உண்மை. பசிக்கிறவனுக்கு இலவசமாக அரிசி கொடுப்பதில் தவறில்லை. ரேஷன் அரிசியைக் கேவலமாக நினைத்து, பொதுச்சந்தையில் கிலோ ரூ.50 கொடுத்து வாங்கும் வசதி படைத்தோருக்கும் எதற்காக இலவச அரிசியை அளிக்க வேண்டும்?
பொதுவிநியோகத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்பதில் சந்தேகமில்லை. தற்போது குடும்ப அட்டைகளுடன் ஆதார் எண் இணைக்கும் பணி முடிந்து ஸ்மார்ட் கார்டு அளிக்கப்பட்டால் ஒருவர் அட்டைக்கு வேறுஒருவர் வந்து அரிசி வாங்கும் நிலைமை குறையும். இந்த நிலையில், உணவுப் பாதுகாப்பு சட்டத்தை ஏற்பது குறித்து தமிழகம் பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகம், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டால் அரசுக்கு பெரிதாக நஷ்டம் இருக்காது என்றுதான் தோன்றுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com