விழிப்புணர்வுதான் தீர்வு!

பூபேந்திர வீராவின் வயது 78. சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்கு எதிராகத் துணிந்து குரல் எழுப்பியவர் அவர்.

பூபேந்திர வீராவின் வயது 78. சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்கு எதிராகத் துணிந்து குரல் எழுப்பியவர் அவர்.
அக்டோபர் 15-ஆம் தேதி மும்பை சாண்டாக்ரூஸ் பகுதியிலுள்ள தனது வீட்டில், குடும்பத்தினருடன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார் பூபேந்திர வீரா. அப்போது அவரது வீட்டில் அத்துமீறி நுழைந்த அடுக்குமாடிக் குடியிருப்பு நிறுவன அதிபரும், முன்னாள் மாநகராட்சி உறுப்பினருமான ரசாக் கானும் அவரது மகன் அம்ஜத் கானும் ஈவு இரக்கமில்லாமல் அவரைச் சுட்டுக் கொன்று விட்டு அங்கிருந்து அகன்றனர்.
அனுமதி இல்லாமல் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி விற்பது, அரசு நிலத்தையும், அப்பாவிகளின் இடங்களையும் ஆக்கிரமிப்பது என்று ஒரு தாதா ராஜ்யத்தையே நடத்தி வந்திருக்கிறார்கள் ரசாக் கான் குடும்பத்தினர். இவர்களுக்கு எதிராக, தகவலறியும்உரிமைச் சட்டத்தின்கீழ் நூற்றுக்கும் அதிகமான கேள்விகளை எழுப்பி பதிலும் பெற்றிருக்கிறார் பூபேந்திர வீரா. கொலை நடந்த தினத்தன்று காலையில் வீராவின் புகாரின் அடிப்படையில் ரசாக் கான் மீது நடவடிக்கை எடுக்க "லோக் ஆயுக்தா' கட்டளை பிறப்பித்திருந்தது. அதுதான் ரசாக் கானையும் அவரது மகனையும் அவரைக் கொலை செய்யத் தூண்டியதாகத் தெரிகிறது.
பூபேந்திர வீராவின் மரணம் வியப்பை ஏற்படுத்தவில்லை.
தகவலறியும் உரிமைச் சட்டம் 2005-இல் அமலுக்கு வந்தது முதல், இப்போதைய பூபேந்திர வீராவின் படுகொலையையும் சேர்த்து இதுவரை மரணமடைந்திருக்கும் இடித்துரைப்பாளர்களின் எண்ணிக்கை 56. ஏறத்தாழ 300-க்கும் அதிகமான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், நெருக்கடி கொடுத்தல் என்று அதிகாரபூர்வப்பதிவுகள் உள்ளன. வெளியில் சொல்லாத, தெரியாத எத்தனை தாக்குதல்கள் நடந்திருக்கின்றன என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
2005 முதல் 2016 அக்டோபர் வரை இதுவரை 51 கொலைகளும் 5 தற்கொலைகளும் பதிவாகி இருக்கின்றன. மகாராஷ்டிரத்தில் மட்டும் 10 கொலைகளும் 2 தற்கொலைகளும் நிகழ்ந்திருக்கின்றன. அதைத் தொடர்ந்து குஜராத்தும், உத்தரப் பிரதேசமும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் கேள்வி கேட்போர் மீதான தாக்குதல் நடத்தும் பட்டியலில் இடம்பெறுகின்றன.
மரணப் பட்டியலில் மட்டுமல்ல, இடித்துரைப்பாளர்கள் தாக்கப்படுவதிலும் மகாராஷ்டிரம்தான் முதலிடம் வகிக்கிறது. அதைத் தொடர்ந்து குஜராத் (15), தில்லி (12), கர்நாடகம் (10), ஒடிஸா (9), உத்தரப் பிரதேசம் (9) என அந்தப் பட்டியல் நீள்கிறது. தகவலறியும் உரிமைக்கான மக்கள் இயக்கம் என்கிற தன்னார்வ அமைப்பு, இதுபோன்ற கொலை, தாக்குதல், அச்சுறுத்தல் நடைபெறும் போது, அது தொடர்பான இடித்துரைப்பாளர் அதற்கு முந்தைய ஆறு மாதங்களில் கோரியிருக்கும் தகவல்களை இணையத்தில் அனைவரும் படிக்கும் விதத்தில் வெளியிட வேண்டும் என்று கோரியிருக்கிறது.
தகவலறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி எழுப்பப்படும் கேள்விகளில், மனை வணிகப் பரிமாற்றங்கள், மணல் கொள்ளை, டீசல், பெட்ரோல் திருட்டு ஆகியவை குறித்த விவரங்கள் கேட்பதுதான் பெரும்பாலும் பிரச்னையை ஏற்படுத்துகின்றன. இதில் அதிகாரிகள், அரசியல்வாதிகள், காவல் துறையினர் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதால், சமூக விரோதிகளுக்குப் பாதுகாப்புக் கிடைக்கிறது. இடித்துரைப்பாளர்களின் மீது தாக்குதல் நடத்தினால் தங்களை அதிகார வர்க்கம் காப்பாற்றும் என்கிற நம்பிக்கையில்தான், கொலை செய்யும் அளவுக்கு அவர்கள் துணிகிறார்கள் என்கிறது தகவலறியும் உரிமைக்கான மக்கள் இயக்கம்.
தகவலறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்த முந்தைய மன்மோகன் சிங் அரசு, இந்தச் சட்டத்தின் மூலம் ஆட்சிக்கே சிலதர்மசங்கடங்கள் ஏற்படுவதை உணர்ந்து அதைத் திருத்த முற்பட்டது. நாடு தழுவிய எதிர்ப்பின் விளைவாக அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. இப்போதும்கூட, பல மாநிலங்களில் தகவல் ஆணையர் நியமிக்கப்படாமலும், முறையாகத் தகவல்கள் தரப்படாமலும் அந்தச் சட்டத்தை நீர்த்துப் போக வைக்கும் முயற்சிகள் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கின்றன.
2014 பிப்ரவரியில் முந்தைய மன்மோகன் சிங் அரசு "இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்ட'த்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலமும், நேரிடையாகவும் அரசின் முடிவுகளையும் சமூக விரோதிகளின் செயல்பாடுகளையும் தட்டிக் கேட்டு, வெளிச்சம் போடும் இடித்துரைப்பாளர்களைப் பாதுகாப்பதற்கு நிறைவேற்றப்பட்ட சட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை; அரசாணையாகவில்லை.
நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, இடித்துரைப்பாளர் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவரப் போவதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. அதை நிலைக்குழுவுக்கு விவாதத்திற்கு அனுப்பியிருப்பதாக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் எந்த நிலைக்குழுவுக்கும் அது விவாதத்திற்கு அனுப்பப்பட்டதாகத் தெரியவில்லை. இடித்துரைப்பாளர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதில் ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு அக்கறையுடன் செயல்படுகிறார்கள் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
இந்திய ஜனநாயகம் வலுவடைய வேண்டுமானால், தகவலறியும் உரிமைச் சட்டம் பலப்படுத்தப்பட்டு, இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த ஊடகங்களால் மட்டுமே முடியும். ஆனால், ஊடகங்களும் இதில் அக்கறை காட்டுவதில்லை என்பதுதான் மிகப் பெரிய சோகம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com