வேண்டாம் மெத்தனம்!

இந்தியாவின் 19 வங்கிகளின் வாடிக்கையாளர் வைத்திருக்கும் 'பற்று அட்டை'

இந்தியாவின் 19 வங்கிகளின் வாடிக்கையாளர் வைத்திருக்கும் "பற்று அட்டை' (டெபிட் கார்டு) தகவல்களைத் திருடி, அவர்களின் கணக்கிலிருந்து அவர்களுக்கே தெரியாமல் ரூ.1.24 கோடி வரை பணம் திருடப்பட்ட புகார்கள் பலரையும் மனம் கலங்கவைத்தன. இத்தகைய தகவல் திருட்டு குறித்து வங்கிகளிடம் விளக்கம் கேட்டுள்ளதாக, மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஈரானிய அணு ஆயுத சோதனையை குலைக்க பயன்படுத்தப்பட்ட ஸ்டக்ஸ்நெட் என்கிற வைரசைப் போல, சக்தி வாய்ந்ததாக இல்லாததால் பாதிப்பு இத்துடன் நின்றது என்பது ஆறுதல். ஆனால், சில ஏ.டி.எம். மையங்களை வைரஸ் தாக்கியிருக்கும் தகவலை மறைத்து, மெளனம் காத்து வங்கிகள் அவரவர் தரப்பு இழப்பைக் குறைப்பதில் மட்டுமே அக்கறை காட்டினார்களே, அதுதான் தவறு.
எந்தவொரு வாடிக்கையாளரும் எந்தவொரு வங்கியின் ஏ.டி.எம். மையத்தையும் பயன்படுத்தலாம் என்ற நிலைப்பாட்டின் காரணமாக, ஒரு வாடிக்கையாளரின் தகவல் சார்ந்த மென்பொருளை அனைத்து வங்கிகளுக்கும் வழங்க வேண்டியதாகிறது. ஆகவே இந்த தகவல் திருட்டு இந்த இடத்தில்தான் நடந்தது என்று எந்தவொரு வங்கியையும் பொறுப்பாக்குதல் மிகமிகக் கடினம்.
இந்த விவகாரத்தில் முதல் குற்றவாளிகள் பற்று அட்டை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள்தான். பற்று அட்டையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், எப்படி பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும், எந்தெந்த இடங்களில் எச்சரிக்கையுடன் அதைக் கையாள வேண்டும் என்கின்ற விவரங்களை அவ்வப்போது வங்கிகள் குறுந்தகவல்கள் மூலம் தெரிவிக்கின்றன. ஆனாலும், அதை வாடிக்கையாளர்கள் படித்து, பின்பற்றுவதில்லை. தங்கள் பற்று அட்டையில் உள்ள 16 எண் தகவல்களை யாராவது வங்கியின் பெயரைச் சொல்லிக் கேட்டால் சொல்லக் கூடாது. வங்கிகள் அவ்வாறு கேட்பதில்லை என்று அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் குறுந்தகவல் வரவே செய்கின்றன. ரகசிய எண்களை மாற்றிக்கொண்டே இருங்கள் என்று அடிக்கடி குறுந்தகவல் வருகின்றன. ஆனால் யாரும் அதைப் பொருட்படுத்துவதே இல்லை.
பற்று அட்டை தொலைந்துபோனால் அல்லது வேறு யாரோ பயன்படுத்துவதாக சந்தேகம் இருந்தால் உடனடியாக அதை செயலிழக்கச் செய்ய ஒவ்வொரு வங்கியும் ஒரு செல்லிடப்பேசி எண்ணை அறிவித்துள்ளது. இதற்கான அலுவலர்கள் வாடிக்கை
யாளரிடம் பேசி, அட்டையை செயலிழக்கச் செய்கிறார்கள். ஆனால் எத்தனை வாடிக்கையாளர்களுக்கு அந்த செல்லிடப்பேசி எண் தெரியும்? அல்லது தனது டைரியில் / செல்லிடப்பேசியில் அதை பதிவு செய்திருப்போர் எத்தனை பேர்?
இரண்டாவது குற்றவாளிகள் வங்கிகள். ஒரு வாடிக்கையாளர் தனது பற்று அட்டை தொலைந்துபோனால் அல்லது யாரோ தவறாகப் பயன்படுத்துவதாக தெரியவந்தால், மிக எளிதாக நினைவுகொள்ளும் நான்கு இலக்க எண் ஒன்றை ஏன் வங்கிகள் அறிமுகம் செய்யவில்லை? ஒரு பற்று அட்டையைக் கொண்டு எந்த வங்கியின் ஏ.டி.எம்.மிலும் பணம் எடுக்க முடியும் என்றால், ஒரேயொரு நான்கு இலக்க தொலைபேசி எண்ணைக் கொண்டு, அனைத்து வங்கிகளின் கார்டுகளையும் முடக்கும் சேவையை ஏன் அறிமுகம் செய்யக்கூடாது?
இத்தகைய தகவல் திருட்டுகள் மூலம் பணம் திருடுவது இரண்டு இடங்களில் மட்டுமே சாத்தியமாக இருக்கிறது. ஒன்று ஏ.டி.எம். மையங்கள், இரண்டாவது பொருள் வாங்கும் இடங்கள் (பி.ஓ.எஸ்.). இந்த இரு இடங்களிலும் பற்று அட்டையின் காந்தப்பட்டை தகவல்களை நகல் எடுக்கவும் நான்கு இலக்க ரகசிய எண்களைத் தெரிந்து கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம்.
ஏ.டி.எம். மையங்களில் இதைச் செய்வது கடினம். ஆனால் பொருள் வாங்கும் இடங்களில் வாடிக்கையாளருக்கு தெரியாமல் மற்றொரு இயந்திரத்தில் பற்று அட்டையைத் தேய்த்து நகல் எடுப்பது மிக எளிது. ரகசிய எண்ணை மேசையில் வைத்து அழுத்தும்போது மனதில் பதிய வைப்பதும் எளிது. அட்டையைக் கண்ணெதிரில் தேய்க்கச் சொல்லுங்கள் என்று வங்கிகள் சொல்கின்றன. ஆனால் வாடிக்கையாளர்கள் அதை கவனிப்பதே இல்லை.
சைபர் குற்றம் என்பது மிகப்பெரிய மோசடி வியாபாரமாக மாறியிருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் சைபர் குற்றத்தின் அளவு சுமார் 600 பில்லியன் டாலராக (ரூ. சுமார் 40 லட்சம் கோடி) அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. சைபர் குற்றங்களில் ஈடுபடுவோரின் முதல் இலக்கு வங்கிகள்தான். சைபர் குற்றத்தை எதிர்கொள்ள ரிசர்வ் வங்கி முன்மொழிந்திருக்கும் திட்டத்தை வங்கிகள் பின்பற்றுகின்றனவா என்பது வாடிக்கையாளர்களுக்குத் தெரியாது. அதுகுறித்து, ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்த வேண்டும்.
இந்தியாவில் 60 கோடிக்கும் அதிகமான பற்று அட்டை உபயோகிப்பாளர் உள்ளனர். ஏ.டி.எம். மையங்களில் முறைகேடாகப் பணம் எடுக்கப்படும் தகவலை அவர்களிடமிருந்து வங்கிகள் மறைத்தது மிகப்பெரிய தவறு. ஊடகங்களில் இது வெளியாகாமல் போயிருந்தால், பணம் இழந்தவர்களுக்கு மட்டுமே இந்த மோசடி குறித்துத் தெரிந்திருக்கும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க இந்த சைபர் குற்றம் குறித்து முழு விவரத்தையும் தெரியப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.
சைபர் குற்றங்கள் பொருளாதார லாபத்துக்காக மட்டும்தான் நடத்தப்பட வேண்டும் என்பதில்லை. இது பாதுகாப்பு அச்சுறுத்தலாகவும் இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. இதன்மூலம் மின்சாரத் தடை ஏற்படுத்தலாம். ரயில்களைத் தடம்புரள வைக்கலாம். குடிதண்ணீரில் விஷத்தைக்கூடக் கலக்கலாம். மிகப்பெரிய ஆபத்தை சைபர் குற்றங்கள் மூலம் செய்துவிட முடியும். எனவே இதை மெத்தனமாக விட்டுவிடக்கூடாது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com