விவசாயிக்கு பாதுகாப்பு!

தேசிய வேளாண் விளைபொருள் விற்பனை இணையதளம்

தேசிய வேளாண் விளைபொருள் விற்பனை இணையதளம் (e-NAM)   கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக நாட்டில் உள்ள 250 வேளாண் சந்தைகளை இணைக்க திட்டமிடப்பட்டு, இந்த மாதம் 6-ஆம் தேதி அதைச் சாதித்தும் காட்டியுள்ளது மத்திய அரசு. அதுமட்டுமல்லாமல், இந்த வேளாண் சந்தைக்கான செயலியையும் அதே நாளில் தொடங்கி வைத்தது.
தற்போது இந்த இணையதளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள 250 வேளாண் விளைபொருள் விற்பனைச் சந்தைகளும் 10 மாநிலங்களைச் சேர்ந்தவை. குஜராத் 40, சத்தீஸ்கர் 5, ஆந்திரம் 12, ஹரியாணா 36, இமாச்சல பிரதேசம் 7, ஜார்க்கண்ட் 8, மத்திய பிரதேசம் 20, ராஜஸ்தான் 11, தெலங்கானா 44, உத்தரப் பிரதேசம் 67 ஆகிய 10 மாநில விவசாயிகளும் இந்த செயலி மூலம் வேளாண் விளைபொருள்களின் விற்பனை மற்றும் விலை விவரங்களைக் காண முடியும்.
இந்த இணையதளச் சந்தையில் 1,60,229 விவசாயிகள், 46,688 வியாபாரிகள், 25,970 தரகர்கள் இணைந்துள்ளனர். இதுவரை ரூ.421 கோடி மதிப்புக்கான 1,53,992 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாகியுள்ளன. தற்போது அரிசி, கோதுமை, காய்கறிகள், பழங்கள், தானியங்கள், எண்ணெய் வித்துகள் என
69 வேளாண் விளைபொருள்கள் இந்த இணையச் சந்தை மூலம் வர்த்தகம் செய்யப்படுகிறது. இதில் தோட்டக்கலைப் பயிர்களான பூக்களும் அடங்கும்.
மேலும் நான்கு மாநிலங்களின் 149 வேளாண் விற்பனை மையங்கள் இதில் இணையவுள்ளன. இன்னும் தமிழ்நாடு இதில் இணையவில்லை. இந்த இணையதளத்தில் (இ-நாம்) சேர்ந்து பயன்பெற வேண்டுமெனில், மாநில அரசு தனது வேளாண் விளைபொருள் விற்பனை மையத்தின் சட்டங்களில் சில திருத்தங்களைச் செய்தாக வேண்டும். இ-நாம் எதிர்பார்க்கும் திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு, அஸ்ஸாம், புதுச்சேரி மூன்று மாநிலங்களும் ஒப்புக்கொண்டுள்ளன. ஆனால் இன்னும் அதைச் செய்யவில்லை. அதனால்தான் இந்த இணையச் சந்தையில் நாம் சேராமல் இருக்கின்றோம்.
2018 மார்ச்சுக்குள்ளாக இந்தியா முழுவதிலும் 585 வேளாண் விளைபொருள் விற்பனை மையங்களை இந்த இணையச் சந்தையில் சேர்த்துவிட வேண்டும் என்று மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது. 2017 மார்ச்சுக்குள் குறைந்தது 400 விற்பனை மையங்களை இணைத்துவிடக்கூடும். வியாபாரிகள், தரகர்கள் வாங்கும் பொருள்களுக்கு நேரடியாக விவசாயியின் வங்கிக் கணக்கிலேயே பணத்தைச் செலுத்தவும், அதன் தகவல், மையத்துக்கு கிடைக்கவுமான வசதிகள் இந்த இணையச்சந்தையில் உள்ளன.
விவசாயிகளுக்கு இந்த இ-நாம் செயலியும் இணையச் சந்தையும் மிகப்பெரும் வாய்ப்பாக அமையப்போகிறது. விவசாயிகளுக்கு இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு வேளாண் விளைபொருளும் என்ன விலைக்குப் போகிறது என்பதை அறியவும், பொருள்களின் போக்குவரத்துச் செலவைக் கூட்டிப்பார்த்து, தங்கள் பொருளுக்கான விலையை நிர்ணயிக்கவும், யாருக்கு வேண்டுமானாலும் விற்கவுமான வாய்ப்பை இந்த இணைய தளம் வழங்குகிறது.
பொருள்களின் விலை குறித்த நிலவரத்தை தெளிவாகக் காட்டினாலும், இந்த இணையச் சந்தை மூலம் விளைபொருளின் தரத்தை நிர்ணயிப்பது சற்று கடினமானவேலை. முதல் தரமான தானியம் என்று விலைபேசி, இரண்டாந்தர தானியத்தை அனுப்பினால் இந்தச் சந்தையின் நோக்கம் முற்றிலும் பாழாகிப்போகும். இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டின் வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் வேளாண் விற்பனைமையத்தின் ஊழியர்களின் பங்கும், அக்கறையும் இன்றியமையாதது.
தரத்தில் வேறுபாடுகள் இருந்தாலும்கூட, இ-நாம் இணையச்சந்தையில் பதிவுபெற்ற தரகர்கள் மூலமாகவே பிற மாநிலத்தவர் அல்லது மாவட்டத்தினர், இந்த விளைபொருள்களைக் கொள்முதல் செய்வார்கள் என்பது உறுதி. இந்த வணிகத்தில் தரகர்கள் அனுமதிக்கப்பட்டாலும், விலையைத் தீர்மானிக்கும் நபராக விவசாயி இருப்பதும், பணம் நேரடியாக விவசாயியின் கணக்குக்கு வந்து சேரும் என்பதும் மகிழ்வு தரும் செய்திகள்.
இ-நாம் இணையச் சந்தையில் தமிழக வேளாண் பொருள் விற்பனை மையங்களையும் சேர்ப்பதற்கு ஏதுவாக தமிழக அரசு உரிய சட்டத்திருத்தங்களை உடனடியாக அமலுக்குக் கொண்டு வருவது அவசியம். புதிதாக சேர்க்கப்படும் சட்ட விதிமுறைகள் என்பவை, இணையத்தின் வழியாக வணிகம் செய்வதற்கான ஏற்புறுதி வழங்குவதும், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக கொள்முதல் பணம் செலுத்தப்பட வேண்டும் என்கின்ற கட்டாயங்களும் மட்டுமே. வேறு பெரிய திருத்தங்கள் இருக்கப்போவதில்லை. இதை உடனடியாகச் செய்தாக வேண்டும்.
இ-நாம் இணையச் சந்தை வந்துவிட்டதாலேயே தனியார் மண்டிகள் காணாமல் போய்விடாது. அவர்களும் தங்களை இந்த இணையத்தில் பதிவு செய்துகொண்டு விளைபொருள்களை வாங்கலாம். வழக்கம்போல, விவசாயிகளுக்கு கடன் கொடுத்து, உரம் கொடுத்து, தங்களிடமே அவர்கள் பொருள்களை விற்பனைச் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கும் உள்ளாக்கலாம். எதுவாக இருந்தாலும் தனது விற்பனைப் பொருளுக்கு இந்திய அளவில் ஒவ்வொரு தரத்துக்கும் விலை என்னவாக இருக்கிறது என்பதை விவசாயி அறிந்திருப்பார் என்பதால் அவரைத் தொடர்ந்து ஏமாற்றி விடவோ, சுரண்டவோ முடியாது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கூடுமானவரை விவசாயிகளின் உற்பத்திப் பொருளுக்கு நியாயமான விலை கிடைப்பதையும், இடைத்தரகர்களின் சுரண்டலிலிருந்து பாதுகாப்பையும் தரக்கூடிய இந்த முயற்சி வரவேற்புக்குரியது. தமிழகம் இனியும் தாமதிக்கலாகாது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com