என்னே இந்த ஜீவகாருண்யம்!

ஜல்லிக்கட்டில் இதுவரை ஒரு காளைகூடக் கொல்லப்பட்டதாக

ஜல்லிக்கட்டில் இதுவரை ஒரு காளைகூடக் கொல்லப்பட்டதாக வரலாறு கிடையாது. காட்சிப்படுத்தும் விலங்குகள் தடைப் பட்டியலில் இருந்து காளையை நீக்கக்கூடாது என பலரும் வரிந்துகட்டுகிறார்கள், வழக்கு தொடுக்கிறார்கள். ஆனால், கேரளத்தில் கொல்லப்படும் நாய்கள் குறித்து மத்திய அரசும், விலங்குகள் நல விரும்பிகளும் கவலைபடுவதில்லை. அப்படியே கவலைப்பட்டாலும் கேரள அரசும் மக்களும் அதனைப் பொருட்படுத்துவதாக இல்லை. நாய்களைக் கொன்று குவிக்கிறார்கள்.
கேரள மாநிலம் கோட்டயத்தில், செப்டம்பர் மாத இறுதியில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் 10 தெரு நாய்களை அடித்துக்கொன்றார். அப்படி அடித்துக்கொன்ற நாய்களை ஊர்வலமாக அஞ்சலகத்துக்கு கொண்டு சென்று மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு அனுப்பும் முயற்சியிலும் இறங்கினார் என்று செய்திகள் வெளியாகின.
இம்மாதத் தொடக்கத்தில் எர்ணாகுளத்தில் 24 நாய்கள் ஒரே நாளில் அடித்துக் கொல்லப்பட்டன. இதை உள்ளாட்சி நிர்வாகம் மறுக்கவில்லை. இவை அனைத்தும் மனிதருக்கு ஆபத்தான தெரு நாய்கள் என்பதால் இவற்றைக் கொல்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று வெளிப்படையாக சொல்கிறது நிர்வாகம். இந்தப் பணியை நிர்வாகம் செய்யவில்லை என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.
இப்போது கேரளத்தில் "தெரு நாய் ஒழிப்பு குழு' (Street dogs
eradication groups) ஆங்காங்கே உருவாகியிருக்கிறது. இவர்கள் தெரு நாய்களைக் கொல்லும் மக்கள் நலப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மீது பெயரளவுக்கு வழக்கு பதிவு செய்யப்படுகிறது, அவ்வளவே.
ஆபத்தான தெரு நாய்களைக் கொல்வது என கேரள அமைச்சரவையே முடிவு எடுத்ததுதான் இந்த அளவுக்கு அவர்களுக்கு தைரியம் கொடுத்திருக்கிறது. அந்த முடிவு கேரளத்தில் மக்களால் வரவேற்கப்பட்டு, ஆங்காங்கே அவர்கள் செயலிலும் காட்டத் தொடங்கிவிட்டனர். தெரு நாய்களைக் கொல்வதற்காக ஏர்-கன் எனப்படும் சிறுரவை துப்பாக்கிகள் கேரளத்தில் அதிகமாக விற்பனையாகின்றன.
கேரளத்தில் 2.5 லட்சம் தெரு நாய்கள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்த நாய்கள் சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிழவியை உயிரோடு கடித்துத் தின்றன என்பதும், ஒரு வீட்டுக்குள் புகுந்து ஒரு குழந்தையைக் கடித்துக் குதறின என்பதும், ஊடகங்களில் பரப்பரப்பான செய்தியாக வெளியாகின. நாய்க்கடி பிரச்னை மிகப்பெரிதாக மாறியதால், தெரு நாய்களைக் கொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.
2013-ஆம் ஆண்டில் கேரள மாநிலத்தில் நாய் கடித்ததால் தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு மருத்துவமனைக்கு வந்தவர்கள் 14,698 பேர். 2015-இல் இந்த எண்ணிக்கை 29,020 ஆக அதிகரித்தது. நிகழாண்டில் இது மேலும் அதிகரித்திருக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றிருப்போர் எண்ணிக்கையையும் சேர்த்தால் ஒரு லட்சம் நபர்களுக்கும் அதிகமாகிவிட்டது. ஆகவேதான், அங்கு மக்களே களத்தில் இறங்கி, தெரு நாய்களைக் கொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.
மத்திய அமைச்சர் மேனகா காந்தி, கேரள அமைச்சரவையின் முடிவைக் கடுமையாக சாடினார். "இவர்களுக்கு வழங்கப்பட்ட நாய்கள் கருத்தடை நிதி என்னவாயிற்று?' என கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கு கேரள அரசு பதில் அளிக்கவில்லை.
தில்லியில் தெரு நாய்கள் பிரச்னை இருந்தபோது கருத்தடை மூலம், 5 லட்சமாக இருந்த தெரு நாய்களின் எண்ணிக்கை சில ஆண்டுகளில் 70 ஆயிரமாக குறைந்துவிட்டது என்று புள்ளிவிவரம் தெரிவித்திருக்கிறார் மேனகா காந்தி. "இந்த நாய்களுக்கு கருத்தடை செய்தால், நாய்கள் எண்ணிக்கை பெருகாது என்பது உண்மையே. ஆனால், இந்த கருத்தடை செய்யப்பட்ட நாய்கள் தொடர்ந்து கடிக்காமல் இருக்குமா?' என்று பதில் கேள்வி எழுப்புகிறார்கள் தெரு நாய்கள் ஒழிப்பு குழுவினர்.
தெரு நாய்கள் ஒழிப்பு குழுக்கள், மிகத்தெளிவான கொள்கை வைத்திருக்கின்றன. ஆபத்தான தெரு நாய்களை மட்டுமே கொல்கிறோம். உரிமம் பெற்று நாய்களை வளர்ப்பதை ஆதரிக்கிறோம் என்கிறார்கள்.
இது தொன்றுதொட்டுவரும் பழக்கம் என்பதற்காக தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்ற கட்டாயம் என்ன என்று ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் கேட்கிறது. ஆனால் கேரளத்தில் இதுதொடர்பாக, விலங்குகள் நல ஆர்வலர் தொடுத்த வழக்கில், உயர்நீதிமன்றம், "ஏன் கேரளத்தில் தெரு நாய்கள் அதிகமாக இருக்கின்றன' என ஒரு கேள்வியை எழுப்பி, வழக்கை ஒத்திவைத்துவிட்டது.
தெரு நாய்கள் அதிகரிக்க முதல் காரணம், அதற்கான உணவு தெருவில் கிடைக்கின்றது என்பதுதான். ஆகவே தெருக்களில் உணவுக் கழிவுகள் இல்லாமல் செய்துவிட்டால், தெரு நாய்கள் தானே மறைந்துபோகும் என்கின்ற ஆலோசனையை தெரு நாய்கள் ஒழிப்பு குழுவினர் ஏற்க மறுக்கின்றனர். "தெருவில் உணவு கிடைக்கவில்லை என்பதால்தான் மனிதரை உயிரோடு கடித்துத் தின்றுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. தெரு நாய்கள் எண்ணிக்கையை குறைக்காமல், தெருக்களில் உணவு மிச்சங்கள் இல்லாமல் செய்வது மேலும் பிரச்னையை அதிகமாக்கும்' என்கிறார்கள்.
காளைக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல், மனிதர்கள் தங்களை மட்டுமே துன்புறுத்திக்கொள்ள தயாராக இருக்கும் ஒரு வீரவிளையாட்டுக்கு தடை விதிக்க வலியுறுத்தி ஜீவகாருண்யம் பேசுகிறார்கள். ஆனால் கேரளத்தில் நாய்களைக் கொல்லும் நடவடிக்கையை நியாயப்படுத்த முன்வருகிறார்கள்.
அப்படியானால் ஜீவகாருண்யம் என்பதுதான் என்ன?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com