அணுகுமுறை தவறு!

பொது விநியோகத்தைக் கணினிமயம் ஆக்கவும், மானியத்தை வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தும் நடைமுறையை அமலுக்கு கொண்டுவரவும் மத்திய அரசு மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

பொது விநியோகத்தைக் கணினிமயம் ஆக்கவும், மானியத்தை வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தும் நடைமுறையை அமலுக்கு கொண்டுவரவும் மத்திய அரசு மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கான வேலைகளில் பெரும்பகுதி முடிந்துவிட்டது என்றே சொல்லலாம்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளும், அதாவது 24.27 கோடி குடும்ப அட்டைகள் மின்மயப் பட்டியலுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டன. எந்த ஒரு குடும்ப அட்டை குறித்த தகவலையும் மாநில அரசு உடனே கணினியில் பார்த்துத் தெரிந்துகொள்ள முடியும் என்கின்ற அளவுக்கு முதல் முறையாக ஒரு வெளிப்படைத்தன்மை உருவாக்கப்பட்டுள்ளது.
அடுத்த நிலையில், இந்த 24.27 கோடி குடும்ப அட்டைகளில், 69% அட்டைகளுக்கான பயனாளிகளின் (15.74 கோடி பேர்) ஆதார் எண் இணைப்புப் பணிகள் முடிவடைந்துவிட்டன. இனி புதிதாகக் குடும்ப அட்டை வாங்குபவர் தனது ஆதார் எண்ணைத் தெரிவித்தாக வேண்டும். அந்த எண்ணைக் கணினியில் அழுத்தினால், அவரது எண் ஏற்கெனவே இடம்பெற்று இருப்பின், அது எந்தக் குடும்ப அட்டையில் உள்ளது என்பது தெரிந்துவிடும். அவர் மணமாகித் தனிக்குடும்பம் செல்கிறாரா அல்லது போலியாகக் குடும்ப அட்டை பெறுகிறாரா என்பதைத் தீர்மானிப்பது எளிது. அடுத்த ஆண்டு முதல் தமிழகத்தில் குடும்ப அட்டை "ஸ்மார்ட் கார்டா'க, ஒரு ஏ.டி.எம். கார்டு போல வழங்கப்படும் வாய்ப்பும் உள்ளது.
நாடு முழுவதும் உள்ள மொத்தம் 5.28 லட்சம் நியாயவிலைக் கடைகளில் 1.52 லட்சம் கடைகள் கணினிமயமாக்கப்பட்டு
விட்டன. இதில் ஆந்திரம் முதலிடம் பெறுகிறது. அடுத்ததாக மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சிறப்பாக இப்பணியைச் செய்துவிட்டன.
இந்த நடவடிக்கைகளின் விளைவாக, நாடு முழுவதிலும் 2.33 கோடி போலி குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட்டு, அரசுக்கு ரூ.14,000 கோடி மானியம் மிச்சமாகியிருக்கிறது என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் குறிப்பிட்டுள்ளார். ஆதார் எண் இணைப்புப் பணிகள் முழுமையாக முடியும்போது, மேலும் சில கோடி போலி குடும்ப அட்டைகள் ஒழிக்கப்படலாம். மேலும் பல ஆயிரம் கோடி மானியம் மிச்சப்படும்.
மிக விரைவில் அனைத்து நியாயவிலைக் கடைகளையும் மின்மய வர்த்தக வளையத்துக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்தின் உணவுப் பொருள்களின் தேவை அளவைக் கணினியில் பார்த்து, கொடுக்கப்பட்ட அளவு, மீதமுள்ள அளவு, அந்த மாதத்துக்கு தேவையான அளவு எனக் கணினியிலேயே துல்லியமாகக் கணக்கிட்டு மத்திய அரசு ஒதுக்கீடு செய்வது மிகவும் எளிதாகும் என்பதே இந்தத் தீவிரத்துக்குக் காரணம்.
28 மாநிலங்களுக்கு இத்தகைய இணையவழி ஒதுக்கீடு சாத்தியமாக்கப்பட்டுவிட்டது. இதில் எந்த மாநிலமும் கூடுதலாக எத்தகைய பொருளையும் பெறுவது சாத்தியமில்லை. உதாரணமாக, 2015 ஜூன் மாதம் மண்ணெண்ணெய் பயன்பாட்டு அளவு 566 ஆயிரம் டன். ஆனால் இந்த மாதம் 533 ஆயிரம் டன். அதாவது 33 ஆயிரம் டன் மண்ணெண்ணெய் பயன்பாடு குறைந்துள்ளது.
இதுபோல இன்னும் பல இனங்களில், பல வகைப் பொருள்களில் மிகத் துல்லியமாக அளந்து, மிச்சப்படுத்த முடியும். மாநிலங்களும்கூட, அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் உணவுப் பொருள் இருப்பு குறித்து உடனடியாகக் கணக்கெடுத்து, தேவை இருப்பின் உடனே அவர்களுக்கு வழங்கிட முடியும்.
சண்டீகர், புதுச்சேரி, தாத்ரா நகர் ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்களில் மானியத்தை நேரடியாக வங்கிகளில் செலுத்தும் நடைமுறை அமலுக்கு வந்துவிட்டது. புதுச்சேரியில் உள்ள 6.15 லட்சம் குடும்ப அட்டைகளுக்காக ரூ.8.45 கோடி மானியம் நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த நடைமுறை அனைத்து மாநிலங்களுக்கும் வந்துவிடும் என்று உறுதியாகச் சொல்லலாம். அதுமட்டுமல்ல, நாட்டின் நலன் கருதி, மானியத்தை விட்டுக்கொடுங்கள் என்று, சமையல் எரிவாயு விவகாரத்தில் நுகர்வோர் கேட்டுக் கொள்ளப்பட்டதுபோல, குடும்ப அட்டை விவ
காரத்திலும் கடைபிடிக்கப்படலாம்.
பொது விநியோகத்தில் நடைபெறும் ஊழலைத் தடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் அதற்காக, உணவுப்பொருளுக்கான மானியத்தை நேரடியாக வங்கியில் செலுத்துவது என்பது சரியான தீர்வாக இருக்காது. பொது விநியோக முறையில் உணவுப் பொருள்களை மானிய விலையில் வழங்குவது என்பது, சாமானிய, வறுமைக் கோட்டுக்குக் கீழேயுள்ள மக்கள், சந்தை விலையில் பொருள்களை வாங்க முடியாது என்பதால்தான். மேலும், சந்தை விலையில் பொருள்களை வாங்கும் அளவுக்கு அவர்களுக்கு வருமானம் இல்லை என்பதும் காரணம்.
நீங்கள் சந்தை விலையில் வாங்கிக் கொள்ளுங்கள், நாங்கள் மானியத்தை வங்கியில் போட்டு விடுகிறோம் என்பது அடித்தட்டு மக்களின் உண்மை நிலையை ஆட்சியாளர்கள் அறியவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. மேலும், வங்கிக் கணக்கில் போடப்படும் மானியத்தை குடும்பத் தலைவர்கள் உணவுப் பொருள்கள் வாங்கத்தான் பயன்படுத்துவார்கள் என்பது என்ன நிச்சயம்? இந்தத்
திட்டத்தால் பல அடித்தட்டுப் பிரிவு குடும்பங்கள் பட்டினி கிடக்க நேரிட்டால் வியப்படையத் தேவையில்லை. சமையல் எரிவாயு போன்றதல்ல உணவுப் பொருள்களுக்கான மானியம்.
அடுத்த கட்டமாக, மானியத்தை நிறுத்திவிட்டு அனைவரும் சந்தை விலையிலேயே வாங்கிக் கொள்ளப் பழக்கப்படுத்த எடுக்கப்படும் மக்கள் விரோத நடவடிக்கை இது. தேவை குறைந்த விலையில் உணவுப் பொருள்களே; உணவு மானியம் அல்ல!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com