கோஷங்கள் தீர்வாகாது!

கடந்த வாரம் தில்லியில் 30 வயது இளைஞர் ஒருவர் மலேரியா காய்ச்சலால் இறந்தபோது, சுகாதாரத் துறையும் அரசு நிர்வாகமும் திடுக்கிட்டு விழித்துக் கொண்டது.

கடந்த வாரம் தில்லியில் 30 வயது இளைஞர் ஒருவர் மலேரியா காய்ச்சலால் இறந்தபோது, சுகாதாரத் துறையும் அரசு நிர்வாகமும் திடுக்கிட்டு விழித்துக் கொண்டது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்திருக்கும் முதல் மலேரியா மரணம் இது. முற்றிலுமாக மலேரியாவை ஒழித்து விட்டோம் என்கிற பெருமிதத்தில் இருந்த நிர்வாகம் திகைத்துப் போய் நிற்கிறது.
உயிர்க்கொல்லி அல்ல என்று இதுவரை கருதப்பட்ட சிக்குன்
குனியாவால் இந்தியத் தலைநகரில் பத்து பேர் மரணமடைந்திருக்கிறார்கள் என்பது அடுத்த அதிர்ச்சி. தில்லியில் இந்த ஆண்டு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் 10-ஆம் தேதி வரையிலான புள்ளிவிவரப்படி, தில்லியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 400-க்கும் அதிகம். அடுத்த மாதம் இந்த நோய் மேலும் பரவக் கூடும்.
இது ஏதோ தலைநகர் தில்லியில் மட்டுமே என்று எண்ணிவிட வேண்டாம். சிக்குன்குனியாவும் டெங்குவும், மலேரியாவுடன் கைகோத்து ஒட்டுமொத்த இந்தியாவையே பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. பல்வேறு மாநிலங்களில் சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகளும் மருத்துவர்களும் இந்த மூன்று நோய்களின் அசுரவேகப் பாய்ச்சலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுகிறார்கள் என்பதுதான் உண்மை.
அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்கள் மரணம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்காவிட்டாலும், 2014-ஐ ஒப்பிடும்போது 2015-இல் சிக்குன்குனியா பாதிப்பு திடீர் வளர்ச்சி கண்டிருக்கிறது. அதேபோல, டெங்கு காய்ச்சலும் 2013-இல் 75,808-ஆக இருந்தது, 2015-இல் 99,913-ஆக அதிகரித்திருக்கிறது. இதே காலகட்டத்தில், டெங்கு காய்ச்சலால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 193-லிருந்து 220-ஆக அதிகரித்திருக்கிறது.
மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. 2015-இல் மட்டும் 11 லட்சம் பேருக்கும் அதிகமானோர் மலேரியாவால் பாதிக்கப்பட்டிருக்
கிறார்கள். மலேரியாவால் யாரும் மரணமடைந்ததாக அரசுப் புள்ளிவிவரம் குறிப்பிடாவிட்டாலும், மலேரியா குறித்த முழுமையான விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றுதான் தோன்றுகிறது.
சிக்குன்குனியா என்பது, மலேரியா போலவோ, டெங்கு காய்ச்சல் போலவே அல்ல. இது நோயாளிகளை வாழ்நாள் முழுவதும் முடக்கிப் போட்டுவிடும். தற்போது இது இந்தியா முழுவதும் பரவி பீதியைக் கிளப்பி இருக்கிறது. 1963-இல்தான் முதல்முதலில் கொல்கத்தாவில் சிக்குன்குனியா தனது வரவைப் பதிவு செய்தது. அந்த ஆண்டு, இந்தியாவில் கிழக்கு மாநிலங்கள் சிலவற்றில் கடுமையான சிக்குன்குனியா பாதிப்பு காணப்பட்டது என்றாலும், ஏனைய பகுதிகள் பாதிக்கப்படவில்லை.
தொடர்ந்து எட்டு ஆண்டுகளுக்கு ஆங்காங்கே சிக்குன்குனியாவால் பாதிப்புகள் காணப்பட்டாலும் 1971-ஆம் ஆண்டுக்குப் பிறகு, சிக்குன்குனியா என்கிற நோய் இந்தியாவில் அறவே இல்லாமல் இருந்தது. ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்குப் பிறகு, 2005-இல் ஆந்திரப் பிரதேசத்தில் சிக்குன்குனியா மீண்டும் திடீர் பிரவேசம் செய்தது என்பது மட்டுமல்ல, புயல் வேகத்தில் பரவவும் தொடங்
கியது. இந்த நோய் அடுத்த சில மாதங்களிலேயே அண்டை மாநிலங்களான மகாராஷ்டிரம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகியவற்றில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. அடுத்த ஐந்து ஆண்டு
களில், இந்தியா முழுவதும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டியது.
சிக்குன்குனியாவைக் கட்டுப்படுத்துவதும், அதன் போக்கைக் கண்காணித்துத் தடுப்பதும் மிகவும் கடினம். இந்த நோயை ஏற்படுத்தும் தொற்று அசுர வேகத்தில் பரவும் தன்மையுடையது. தேங்கிய
நீரில் அதிவேகமாக இனப்பெருக்கம் செய்யும் "ஏடிஸ் ஏஜிப்டி' என்கிற கொசுவின் மூலம் பரவும் நோய் இந்த "சிக்குன்குனியா'.
நகரின் பல பகுதிகளிலும், வீடுகளிலும்கூட நகராட்சி நிர்வாகங்கள் அவ்வப்போது கொசுக்களை அழிப்பதற்குப் பூச்சி மருந்து அடிக்கிறார்கள். தேங்கிய குட்டைகள், சாக்கடைகள் ஆகியவற்றிலும் மருந்து தெளிக்கிறார்கள். ஆனால், இவையெல்லாம் போதுமானதாக இல்லை. காரணம், இந்த நோயைப் பரப்பும் கொசுக்கள் அதிவேகமாக இனப்பெருக்கம் செய்கின்றன என்பதும், அவ்வப்போது நகராட்சி நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளால் இவற்றைக் கட்டுப்படுத்த முடியாது என்பதும்தான்.
சிக்குன்குனியா, மலேரியா, டெங்கு காய்ச்சல் போன்ற கொசு உள்ளிட்ட பூச்சிகளால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு, முதலில் தெருவில் குப்பைகள் இல்லாத அளவுக்கு நகராட்சி, உள்ளாட்சி நிர்வாகம் செயல்பட்டாக வேண்டும். எந்த இடத்திலும் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு நிர்வாகத்துடன் பொதுமக்களும் இணைந்து செயல்படும் நிலைமை உறுதி செய்யப்பட வேண்டும். அப்படி இல்லாவிட்டால், இந்த நோய்களால் இந்தியா மிகக் கடுமையாகப் பழிவாங்கப்படும்.
இதனால் தனிநபர்கள் மட்டும்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்று நினைத்தால் அது தவறு. மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சி காணத் துடிக்கும் நாட்டில் பலர் முடங்கிப் போய் அதனால் உற்பத்தி பாதிக்கப்படும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்த நோயைக் கட்டுப்படுத்த அரசிடம் நிதியாதாரம் இல்லை என்று சாக்குப்போக்குச் சொல்லவும் முடியாது. "தூய்மை இந்தியா' திட்டத்திற்காக "செஸ்' வசூலிக்கிறதே, அது எதற்காக?
"தூய்மை இந்தியா' என்று கோஷங்கள் எழுப்புவதால் பயனில்லை. லட்சக்கணக்கான இந்தியர்களை முடக்கிப் போட முற்பட்டிருக்கும் பூச்சித் தொற்றுக்களைத் தடுக்காவிட்டால், நாம் பேராபத்தை எதிர்கொள்ள நேரும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com