உரிமைக்குரல் எழுப்புவோம்!

தமிழகத்துக்கு செப்டம்பர் 27 வரை 6,000 கன அடி காவிரி நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை வாரியத்தை

தமிழகத்துக்கு செப்டம்பர் 27 வரை 6,000 கன அடி காவிரி நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை வாரியத்தை அடுத்த நான்கு வாரங்களில் அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது தமிழக விவசாயிகளிடையே மிகப்பெரும் புத்துணர்வை, புத்துயிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி மேற்பார்வைக் குழு, இரு மாநில அதிகாரிகளும் முன்வைத்த கருத்துகளைக் கேட்ட பின்னர், தமிழ்நாட்டுக்கு அடுத்த பத்து நாள்களுக்கு தினமும் 3,000 கன அடி தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று கூறியதைக் கேட்டது முதல் தமிழகத்தில் தமிழக விவசாயிகளிடையே தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டதான உணர்வு மேலோங்கியிருந்தது. தற்போது நீதிமன்றம் அதனை 6,000 கன அடியாக உயர்த்தியிருப்பதில் விவசாயிகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர்.
காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல், தமிழ்நாட்டுக்கு சொட்டு நீர்கூட தர மாட்டோம் என்று பேட்டி அளித்திருப்பதும், அதே நாளில் வாட்டாள் நாகராஜ், மாநில எல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்தி, அதே பாணியில் சொட்டு நீர்கூட தர மாட்டோம் என்று கூறியிருப்பதும் கர்நாடகத்தின் அராஜகப் போக்கினை வெளிப்படுத்துகின்றன. ஏற்கெனவே, கர்நாடகத்தில் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளை நீதிமன்றம் கண்டித்துள்ள நிலையில், இத்தகைய வன்முறைப் பேச்சுகளை அமைச்சரும் மொழி அமைப்புகளின் தலைவர்களும் பேசுவதும், அதை அரசு அனுமதிப்பதும் எவ்வாறு என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பி, கண்டித்திருந்தால் மேலும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
இரு மாநிலங்களிலும் வன்முறை கூடாது என்று, தமிழகத்தையும் சேர்த்து சில அரசியல் தலைவர்கள் அறிக்கை விடுவது விசித்
திரமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் கர்நாடகப் பேருந்துகள் விரல்விட்டு எண்ணும் அளவிலேயே கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன. கர்நாடகத்தைப்போல 50 பேருந்துகள், 40 லாரிகள் எரிக்கப்படவில்லை. கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கும் காவிரி நீர் திறப்புக்கும் நடத்தப்பட்ட போராட்டத்தில் ஒரு இளைஞர் தன்னை எரித்துக்கொண்டாரே தவிர, இங்கு எந்த வாகனமும் எரிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் அமைதியான முறையில், அரசும் ஆளும்கட்சியும் பங்கேற்காத வகையில் கடையடைப்பு நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் எந்தவொரு இடத்திலும் வன்முறை வெடிக்கவில்லை.
உயிர்த் தாகத்தில் இருப்பவன் கட்டுப்பாட்டுடனும், தண்ணீர் வைத்துக்கொண்டிருப்பவன் நியாயம் பேசி, தர மறுப்பதோடு, வன்முறை நடத்துவதுமான நிலைமை உலகின் வேறு எந்தப் பகுதி
யிலும் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. தமிழர்களின் இத்தகைய அமைதிக்குப் பிறகும் கர்நாடகம், சொட்டு நீர் தர மாட்டோம் என்று சொன்னால் அது அரசியல் நாடகம் மட்டுமல்ல, மனிதாபிமானமே இல்லாத செயல்.
தேசியக் கட்சிகளான பா.ஜ.க.வும், காங்கிரஸும் காவிரிப் பிரச்னையில் இரட்டை வேடம் போடுகின்றன என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்கிற இந்தக் கட்சிகளின் நிலைப்பாட்டுக்குக் காரணம், தமிழகத்தில் தங்களுக்கு எந்தவித அரசியல் ஆதாயமோ, அதிகரித்த ஆதரவோ இதனால் ஏற்பட்டு விடப் போவதில்லை என்பதுதான்.
இந்தப் பிரச்னை இந்த அளவுக்குக் கடுமையான பிரச்னையாக மாறியிருக்க வேண்டியதே இல்லை. காவிரி நதிநீர் தீர்ப்பாயம் 2007-இல் கர்நாடகமும், தமிழகமும் காவிரி நீரைப் பங்கு போட்டுக் கொள்ள வழிவகை செய்யும் தீர்ப்பை அளித்தது. இதை நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படியும், கண்காணிப்பு ஆணையம் நதிநீரைப் பங்கீடுவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறியது. ஆனால் அன்றைய மன்
மோகன் சிங் அரசு, தி.மு.க.வின் தயவில் ஆட்சியில் இருந்தும்கூட, ஆறு ஆண்டுகள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை வெளியிடாமல் காலம் தாழ்த்தியது. அதற்கு பதிலாக காவிரி மேற்பார்வைக் குழுவை ஏற்படுத்தியது. 2013-இல் காவிரி மேலாண்மை வாரியம் அரசிதழில் அறிவிக்கப்பட்டும், அது நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
இத்தனை ஆண்டுகளாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதைக் காலம் தாழ்த்திய நடுவண் அரசு, இனி நீதிமன்ற உத்தரவை ஏற்று, நான்கு வாரங்களில் அமைத்தாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. "கேட்டிலும் உண்டோர் உறுதி' என்பதாக, நமக்குக் கிடைத்துள்ள நியாயம் இது.
இனி தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் முன்பு உள்ள இன்றியமையாப் பணி என்னவென்றால், இந்த காவிரி மேலாண்மை வாரியம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்துத் தெளிவான கருத்துகளை முன்வைத்து, அவை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்துவதுதான். நடுவர் மன்றம் கூறியுள்ள விதி முறைகள் என்ன?, இந்த வாரிய உறுப்பினர்கள் எத்தகையவர்களாக இருக்க வேண்டும்?, அணையிலிருந்து நீரை வெளியேற்றும் கட்டுப்பாடு அரசின் வசம் இல்லாமல் மேலாண்மை வாரியத்திடமே முழுமையாக ஒப்படைக்கப்பட வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தவும், அதற்கான அழுத்தம் தரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும்தான் இன்றைய உடனடித் தேவை.
இப்போது நீதிமன்றத்தின் உத்தரவால் தமிழகத்துக்கு தண்ணீரும், மேலாண்மை வாரியமும் கிடைக்கவிருக்கும் நிலையில், நாம் நமது உரிமைக் குரலை பலமாக எழுப்பலாம்; எழுப்ப வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால் பெங்களூருவில் வாழும் தமிழர்கள் நலனுக்கு ஆபத்து என்கின்ற வழக்கமான வாதமும், அதற்காகக் கொஞ்சம் தாழ்ந்துபோவதுமான நடவடிக்கையும் அர்த்தமற்றவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com