சரிதான், ஆனால்...!

நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி முதல் வாரத்திலேயே தாக்கல் செய்வது என்றும், ரயில்வேக்கு என்று தனியாகத் தாக்கல் செய்யப்படும்

நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி முதல் வாரத்திலேயே தாக்கல் செய்வது என்றும், ரயில்வேக்கு என்று தனியாகத் தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையைப் பொது நிதிநிலை அறிக்கையில் இணைத்துவிடுவது என்றும் முடிவெடுத்திருக்கிறது. இரண்டு மாற்றங்களுமே, வல்லுநர் குழுவால் பரிந்துரைக்கப்பட்டு மத்திய அமைச்சரவையால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், 1853-ஆம் ஆண்டில் இந்திய ரயில்வே தொடங்கப்பட்டது. 1924-ஆம் ஆண்டிலிருந்து ரயில்வேக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. அப்போது இந்தியாவின் ஒட்டுமொத்தச் செலவினங்களைவிட, ரயில்வேக்கான ஒதுக்கீடு அதிகமாக இருந்ததால் அதற்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது ஏற்புடையதாக இருந்தது. தற்போது அத்தகைய நிலைமை இல்லை.
பொது நிதிநிலை அறிக்கையில் முன்வைக்கப்படும் மொத்த ஒதுக்கீட்டில் 6 சதவீத அளவுக்குத்தான் ரயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதேநேரத்தில், ராணுவத்துக்கு ரூ.2.5 லட்சம் கோடி அளவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், அதற்கெனத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதில்லை. பொது நிதிநிலை அறிக்கையிலும் ராணுவத்துக்கான ஒதுக்கீடு குறித்து மிக விரிவாகக் குறிப்பிடப்படுவதில்லை. அதனால், ரயில்வேக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் வழக்கத்தைக் கைவிடுவது என்பதில் தவறு காண முடியாது.
உலகின் மிகப் பெரிய அரசுத் துறை நிறுவனமான இந்திய ரயில்வேயில் தற்போது சுமார் 13.34 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த ஊழியர்களுக்கு ஆண்டுக்கு மொத்தம் ரூ.70,125 கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது. பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக ஆண்டுக்கு ரூ.45,500 கோடி அளவுக்கு வழங்கப்படுகிறது. மேலும், 2016-17ஆம் நிதியாண்டில் ரயில்வே பங்கு ஈவுத் தொகையாக (டிவிடெண்ட்) நிதி அமைச்சகத்துக்கு மொத்தம் ரூ.9,731 கோடி தர வேண்டும். இதில், நஷ்டத்தில் இயக்கப்படும் வழித்தடங்களுக்காக ரயில்வேக்கு மத்திய அரசு தர வேண்டிய ரூ.4,301 கோடியைக் கழித்துக் கொண்டு, எஞ்சியுள்ள ரூ.5,430 கோடியை பங்கு ஈவுத் தொகையாக நிதி அமைச்சகத்துக்கு தர வேண்டும்.
அடுத்த நிதியாண்டிலிருந்து ரயில்வேக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படமாட்டாது என்பதால், இனி வரும் ஆண்டுகளில் இந்தப் பங்கு ஈவுத் தொகையை நிதி அமைச்சகத்துக்கு தர வேண்டியதில்லை. மத்திய அரசின் இந்த முடிவால் ரயில்வேக்கு கிடைக்கவிருக்கும் சாதகமான பலன் இது.
ரயில்வேயைப் பொது நிதிநிலை அறிக்கையில் இணைப்பதற்கு வேறு சில முக்கியமான காரணங்களும்கூட இருக்கின்றன. ரயில்வேயின் மொத்த செலவினங்களில் ஏறத்தாழ 50% ஊழியர்கள் ஊதியத்திற்கே செலவாகி விடுகிறது. பயணிகள் கட்டணத்தின் மூலம் மொத்த வருவாயில் 25% மட்டுமே கிடைக்கிறது. இதனால், ரயில்வேயை நவீனப்படுத்துவது, தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது, புதிய முதலீடுகள் செய்வது என்று எதையுமே செய்ய முடியவில்லை என்கிற நிலைமை கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்கிறது.
தனியாக நிதிநிலை அறிக்கை இல்லை எனும்போது, பொதுமக்களைத் திருப்திப்படுத்துவதற்காக புதுப்புது ரயில்களை அறிவிக்கும் தேவை இல்லாமல் போகிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு நிறைவேறாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் தடங்களில் ரயில்களை இயக்கவோ அல்லது தேவையில்லாத, நஷ்டத்தில் இயங்கக் கூடிய தடங்களாக இருந்தால் அந்தத் திட்டங்களைக் கைவிடவோ முடியும்.
ரயில்வேயின் வரவு - செலவுக் கணக்குகள் குறித்துத் தொடர்ந்து விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. ஒவ்வொரு தடத்திலும் இயக்கப்படும் பயண, சரக்கு ரயில்களின் உண்மையான அடக்கச் செலவு என்ன என்பதை நிர்ணயிக்கக்கூட முடியாத நிலையில்தான் ரயில்வேயில் கணக்குகள் இருக்கின்றன என்பது வெளியுலகத்திற்குத் தெரியாது. இனிமேல் அது சாத்தியமில்லை.
பொது நிதிநிலை அறிக்கையுடன் ரயில்வேயை இணைப்பதால், அந்நிய முதலீடுகளை ஈர்ப்பது சாத்தியம். ரயில்வே நிதி நிறுவனத்திற்கு அந்நிய முதலீடு கோரும்போது, அதன் நிர்வாகச் சீர்கேடுகளும், நிதி நிர்வாகக் குளறுபடிகளும் முதலீட்டாளர்களை விரட்டி விடுகின்றன. அரசு நிதிநிலை அறிக்கையில் ரயில்வே இணைக்கப்படும்போது உலக வங்கியிலிருந்து ரூ.4 லட்சம் கோடி முதலீடு பெறுவது சாத்தியம் என்பதால்கூட இந்த முடிவு எட்டப்பட்டிருக்கக்கூடும்.
இந்த நடவடிக்கையால் ரயில்வேயின் தன்னாட்சிக்கு முடிவு கட்டப்பட்டு, அது விரைவில் தனியார்மயமாகிவிடும் என்று முன்னாள் ரயில்வே அமைச்சர்களான நிதீஷ் குமாரும், தினேஷ் திரிவேதியும் கவலை தெரிவித்திருக்கின்றனர். ஏனெனில், ஏற்கெனவே சதாப்தி உள்ளிட்ட அதிவிரைவு ரயில்களில் வளர்வீத கட்டண முறையை அறிமுகப்படுத்தி, தனியார் விமான நிறுவனங்களைப் போல கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாக ரயில்வே மீது பரவலாக விமர்சனம் எழுந்துள்ளது.
ரயில்வேயை வெறும் லாபம் ஈட்டும் தனியார் நிறுவனம் போலக் கருதாமல் சாதாரண, நடுத்தர மக்களுக்கு சேவையளிக்கும் அமைப்பாக தொடர்ந்து செயல்படுவதற்கு வழிவகை செய்ய வேண்டும். அதே நேரத்தில், இந்திய ரயில்வே பயணிகளுக்கான வசதிகளை அதிகரித்து, சாலைப் போக்குவரத்தைவிட சரக்குகள் கையாள்வதில் தன்னை மேம்படுத்தி நவீனமயமாக்கப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com