தூய்மை இந்தியாவும் கழிப்பறைகளும்

மத்திய நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் இரு நாள்களுக்கு முன்பு கங்கை நதியோரக் கழிப்பறைகள் திட்டத்துக்கான நிகழாண்டு நிதியாக ரூ.315 கோடியை விடுவித்துள்ளது.

மத்திய நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் இரு நாள்களுக்கு முன்பு கங்கை நதியோரக் கழிப்பறைகள் திட்டத்துக்கான நிகழாண்டு நிதியாக ரூ.315 கோடியை விடுவித்துள்ளது. இந்த அமைச்சகம் சென்ற ஆண்டும் ரூ.263 கோடியை கழிப்பறைத் திட்டத்துக்காக ஒதுக்கியது. அந்த நிதியில் 14,500 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. தற்போதைய நிதியில் மேலும் 20,000 கழிப்பறைகள் கட்டப்படவுள்ளன.
கங்கை நதித் தூய்மைக்காக கழிப்பறைகள் கட்டுவதற்கு ஏற்கெனவே சென்ற ஆண்டு மாதா அமிர்தானந்தமயி 15 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கியிருந்தார். "தூய்மை இந்தியா' என்பது கங்கை நதி தூய்மையோ கழிப்பறைகள் கட்டுவதோ மட்டும் அல்ல; நாடு முழுவதும் கழிப்பறைகள் கட்டுவதால் மட்டுமே தூய்மை இந்தியாவை உருவாக்கிவிட முடியாது.
கங்கை நதிக்காக மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் பல்வேறு திட்டங்களின் கீழ் கழிப்பறைகள் கட்டப்படுகின்றன. 2019 அக்டோபர் 2-ஆம் தேதி, மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தின விழா கொண்டாடப்படும் நேரத்தில் இந்தியாவில் திறந்தவெளியில் மலம் கழிப்போர் இல்லை என்ற நிலையை உருவாக்க அனைத்துவித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன; இதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
திறந்தவெளியில் மலம் கழிப்பதால் இந்திய நதிகளின் தூய்மை கெடும் அளவைக் காட்டிலும் பல நூறு மடங்கு அதிகமான கேடு, சுத்திகரிக்கப்படாத நகரின் சாக்கடைகள் நதியில் கலப்பதால்தான் ஏற்படுகிறது. மேலும், கழிப்பறைகள் கட்டுவதால் மட்டுமே இந்தியர்கள் அனைவரும் திறந்தவெளியில் மலம் கழிக்க மாட்டார்கள் என்பதும் உறுதியல்ல.
தற்போது பல்வேறு திட்டங்கள், நுண்கடன்கள் மூலம் கழிப்பறைகள் கட்டும் திட்டம் ஊக்குவிக்கப்படுவதைப் போன்று, 1999-ஆம் ஆண்டு முதலாகவே பல்வேறு திட்டங்களின்கீழ் 9.5 கோடி கழிப்பறைகள் நகர்ப்புறம், ஊரகப் பகுதிகளில் கட்டப்பட்டன. பொதுக் கழிப்பிடங்கள் மற்றும் வீட்டுக் கழிப்பறைகள் என கட்டப்பட்டிருந்த போதிலும், 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுக்கின்படி, ஊரகப் பகுதிகளில் திறந்தவெளி மலம் கழித்தல் 11% மட்டுமே குறைந்திருந்தது. வீட்டில் கழிப்பறை இருந்தபோதிலும், அந்த வீட்டின் உறுப்பினர்கள் சிலர், குறைந்தபட்சம் ஒருவராகிலும், நதியோரம், ஏரி குளக்கரைகளில் மலம் கழிப்பதை வழக்கமாக கொண்டிருப்பதையும் இந்தக் கணக்கெடுப்பு உணர்த்தியது.
ஊரகப் பகுதியில், வீட்டில் கழிப்பறை இருந்தும் பயன்படுத்தாத நிலைமை இருக்கிறது என்றால், நகர்ப்புற வீடுகளில் கழிப்பறையைத் தூய்மையாக வைத்துக்கொள்ள தண்ணீர் வசதி இல்லை. கழிப்பறைத் தூய்மை குறித்த விழிப்புணர்வும் இல்லை.
கழிப்பறைத் தொட்டியை (செப்டிக் டேங்க்) சுத்தம் செய்ய பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் தனி வாகன வசதி இல்லை. அவை சாக்கடையில் அல்லது புதைசாக்கடையில் நேரடியாகச் சேர்க்கப்படுகின்றன. தனியார் சிலர் லாரிகள் மூலம் இந்த கழிப்பறைத் தொட்டியை சுத்தம் செய்தாலும், அந்த லாரிகள் அக்கழிவைக் கொண்டுபோய் கொட்டும் இடம் நதிக்கரை அல்லது ஏரி குளங்களாகவே இருக்கின்றன. குறைந்தபட்சம், அவை உரமாகப் பயன்படுத்தும் நடைமுறைகூட நகர்ப்புறங்களில் இல்லை.
உலக அளவில் கணக்கிடும்போது இந்தியாவில் திறந்தவெளி மலம் கழிப்போர் 60%-ஆக இருக்கின்றனர். (அடுத்தநிலையில் 23% பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது பாகிஸ்தான்.) ஆகவே, கழிப்பறை கட்டுவது மட்டுமே தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாக வெற்றிபெறச் செய்யாது. கழிப்பறைத் தொட்டிக் கழிவுகளை அகற்றும் நடைமுறை, அவற்றை சுத்திகரித்தல் அல்லது வேளாண் உரமாக்கும் நடைமுறை, கழிப்பறைத் தூய்மை விழிப்புணர்வு மற்றும் திறந்தவெளி மலம் கழித்தலை அவமானமாகக் கருதும் மனநிலையும் உருவாக வேண்டும்.
பல நூறுகோடி ரூபாய் செலவில் கட்டப்படும் பொதுக் கழிப்பறைகள் போதுமான தண்ணீர் வசதி இல்லாததால் சுகாதாரமற்றவையாக மாறி, அதனைத் தொடர்ந்து முற்றிலும் புறக்கணிக்கப்படும் நிலையும் உருவாகிறது. இந்தியாவில் உள்ள எல்லா நகரங்களின் பேருந்து நிலையம் மற்றும் ரயில்நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் இதற்கு சாட்சிகளாக நிற்கின்றன. பேருந்து நிலையங்களில் உள்ள கட்டணக் கழிப்பறைகள் "மறைப்பு' தரும் இடங்களாக இருக்கின்றனவே தவிர, தூய்மையாகப் பராமரிக்கப்படும் கழிப்பறைகளாக இல்லை. இது குறித்து அந்த ஒப்பந்ததாரர்களை உள்ளாட்சிகள் கேள்வியே கேட்பதில்லை.
கழிப்பறைத் தூய்மை விழிப்புணர்வை தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் ஏற்படுத்துவதைவிட, பொது இடங்களில் சுகாதாரமான கழிப்பறைகளை மக்கள் இலவசமாக பயன்படுத்தும் நிலைமையை உருவாக்கினால் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். குறிப்பாக, பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பறைகளையும், பள்ளி, கல்லூரிகளில் உள்ள கழிப்பறைகளையும் தூய்மை இடங்களாக மாற்றுவதன் மூலம் மிகப்பெரும் விழிப்புணர்வை அவர்தம் வீடுகளுக்குக் கொண்டு சேர்க்க முடியும்.
பொது இடங்களில், பேருந்து, ரயில் நிலையங்களில் உள்ள கழிப்பறைகளையும், பள்ளி கல்லூரிகளில் உள்ள கழிப்பறைகளையும் எந்த நேரத்திலும் தூய்மையானதாக, தண்ணீர் வசதி உள்ளதாகச் செய்வதற்கும், மக்கள் இலவசமாக பயன்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே இன்றைய தேவை. இலவசமாக உணவு, உடை, ஆடு, மாடு, பேருந்து பயணம், மடிக்கணினி என எல்லாமும் கிடைக்கிறது. ஆனால் கழிப்பறை மட்டும் கட்டணம் இல்லாவிடில் இயலாது என்பது வேடிக்கையாக இல்லை?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com