தேவை நிதானம்!

கடந்த 56 ஆண்டு கால சிந்து நதியின் அமைதி ஓட்டத்துக்கு சற்றே அணை போடப்படுகிறது.

கடந்த 56 ஆண்டு கால சிந்து நதியின் அமைதி ஓட்டத்துக்கு சற்றே அணை போடப்படுகிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் கடுமையாக சாடிக்கொண்ட காலத்திலும், போர் நடந்த காலத்திலும், பயங்கரவாதத் தாக்குதல் நடந்த காலங்களிலும் பலமுறை இந்த யோசனை எழுப்பப்பட்டாலும் இந்தியா அவசரப்படாமல் நிதானம் காத்து வந்திருக்கிறது.
1960-ஆம் ஆண்டு சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் அன்றைய இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் அயூப் கான் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. இதன்படி, பியாஸ், ரவி, சட்லஜ் ஆகிய மூன்று நதிகள் இந்தியாவுக்கும், சிந்து, செனாப், ஜீலம் ஆகிய மூன்று நதிகள் பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக்கும் என முடிவானது.
பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட மூன்று நதிகளிலும்கூட இந்தியாவுக்கு நீர் உரிமை அளிக்கப்பட்டிருந்தது. இந்திய அரசு அணை கட்டலாம், பாசனத்துக்கு நீரைப் பயன்படுத்தலாம், புனல்நீர்மின் நிலையம் அமைக்கலாம். இருப்பினும்கூட, அந்த நீரைப் பயன் படுத்தும் திட்டம் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை. இப்போது, சிந்து நதியில் இந்தியாவுக்கான பங்கினை முழுமையாகப் பயன்படுத்துதல், ஜீலம், செனாப் நதிகளின் குறுக்கே அணை கட்டும் திட்டம் தீட்டப்பட்டு கிடப்பில் போடப்பட்டதை மீண்டும் கையில் எடுத்தல் ஆகிய பணிகளில் இறங்குவது என இந்திய அரசு தீர்மானித்துள்ளது.
சிந்து நதியும் சட்லஜ் நதியும் சீனாவில் உருவாகி இந்தியா வழியாகப் பாய்ந்து பாகிஸ்தான் வழியாகக் கடலில் கலக்கின்றன. ஏனைய நான்கு நதிகளும் இந்தியாவில் உருவாகி பாகிஸ்தானுக்குள் நுழைகின்றன. இந்த நதிநீரை பங்கிட்டு கொள்வதற்கு 1960-இல் இரண்டு நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டதைத் தொடர்ந்து நிரந்தர சிந்து நதிநீர் ஆணையம் ஒன்று ஒப்பந்தத்தை கண்காணிப்பதற்கு ஏற்படுத்தப்பட்டது.
இரண்டு நாடுகளிலும் சிந்து நதிநீர் ஆணையர் ஒருவர் இருக்கிறார். அவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சந்தித்து தகவல்கள், விவரங்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்கிறார்கள். சிறிய கருத்து வேறுபாடுகள் இருந்தால் அவை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளப்படுகின்றன. எத்தனையோ பிரச்னைகளுக்கு நடுவிலும்கூட இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மாறி மாறி நூற்றுக்கும் அதிகமான கூட்டங்கள் நடந்து வந்திருக்கின்றன.
சிந்து நதிநீரைத்தான் பாகிஸ்தானின் பலமான பஞ்சாப் பகுதி நம்பியிருக்கிறது. பாகிஸ்தானில் 90 விழுக்காடு பாசனம் இதன் மூலம்தான் நடைபெறுகிறது. மூன்று பெரிய அணைகள், நூற்றுக்கணக்கான தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் புனல் மின்சாரம், நீர்ப்பாசனம், குடிநீர் தேவை ஆகியவை சிந்து நதிநீரிலிருந்துதான் பெறப்படுகிறது.
சிந்து நதிநீரை முழுமையாக பயன்படுத்துவதும், ஜீலம், செனாப் நதிகளின் மீது அணை கட்டுவதும் ஒப்பந்தத்துக்கு உட்பட்ட நடவடிக்கைதான். பாகிஸ்தானுக்கு நீர் மறுக்கப்படாமல் அவர்களுக்கு ஒப்பந்தத்தின்படியான நீர் தொடர்ந்து கிடைக்கும். அதனால் இந்த விவகாரத்தை பாகிஸ்தான் சர்வதேச அரங்கில் பிரச்னையாக மாற்ற முடியாது. பாகிஸ்தானுக்கு ஒப்பந்தத்தை விட அதிகமான நீரை வழங்குவது குறித்து இந்தியா மறு சிந்தனையை மேற்கொண்டிருப்பது, பாகிஸ்தானுக்கு இனிமேலும் சலுகைகள் வழங்கப்படாது என்பதை உணர்த்துவதுதான்.
இந்தியாவின் தற்போதைய முடிவினால், ஜம்மு - காஷ்மீரில் ஆறு லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும். அந்த மாநிலத்தில் வேளாண்மை தழைக்கும். இது புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து இளைய சமுதாயத்தை வயல்வெளிக்கு கொண்டு செல்லும்.
பாகிஸ்தான் அண்மையில் ஐ.நா. பொதுக்குழுவில் இந்தியாவுக்கு எதிராக முன்வைத்த எதிர்ப்புப் பிரசாரமும், உரி ராணுவத் தாக்குதலில் 18 வீரர்கள் பலியானதும், காஷ்மீரில் 80 நாள்களுக்கும் மேலாக அமைதியின்மை ஏற்பட பாகிஸ்தான் பின்னணியில் இருந்து பயங்கரவாதிகளை இயக்கியதும் இந்தியாவுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தின. இதற்கு எதிர்வினை புரியாவிட்டால் உலக நாடுகளின் முன்னால் நாம் பரிகாசத்துக்கு ஆளாவோம் என்ற நிலையில், இத்தகைய முடிவை இந்தியா எடுத்திருக்கிறது. மூன்று நதிகளிலும் நமக்கு உண்டான உரிமையை நிலைநாட்டுதல்; பாகிஸ்தான் வர்த்தகத்துக்கு ஆதரவான நாடு என்று அளிக்கப்பட்டுள்ள தகுதியை விலக்கிக் கொள்வது என்று போர் செய்யாமல் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்கும் இரண்டு நிலைப்பாட்டை பிரதமர் எடுத்திருக்கிறார்.
ஏற்கெனவே இந்தியாவின் கட்டுப்பாட்டில் சிந்து நதி இருப்பது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பொறாமையாக இருந்து வருகிறது. காஷ்மீரை எப்படியாவது தங்களுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்கிற பாகிஸ்தானின் ஆசைக்கு காரணமே இந்த நதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதுதான். இந்தியா ஒப்பந்தத்தை மீறாமல் இருந்தும்கூட ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுவதன் பின்னணியே இதுதான். இந்தியா இந்த நதிகளில் அணை கட்டும்போது சீனாவில் உற்பத்தியாகும் சிந்து, சட்லஜ் நதிகளில் சீனா அணை கட்டும் ஆபத்தும் இருக்கிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் இந்தியா செயல்பட்டு விட முடியாது.
மேலும் இன்றைய சூழலில் முடிந்தவரையில் போர் தொடுக்கும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதுதான் இரண்டு நாடுகளுக்குமே நல்லது. ஏனென்றால் அணு ஆயுதப் போரில் யாருக்கும் வெற்றி கிடைக்காது. இருதரப்பினரையுமே தோல்விதான் எதிர்கொள்ளும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com