புறக்கணிப்பு தவறல்ல!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 19-ஆவது சார்க் (தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு) மாநாட்டில் இந்தியா பங்குகொள்ளாமல் புறக்கணிப்பது என்று முடிவு எடுத்திருக்கிறது. இந்தியாவின் இந்த ராஜதந்திர நடவடிக்கைக்கு ஆதரவு பெருகும் விதமாக, வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் சார்க் மாநாட்டைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இந்திய வெளியுறவு அமைச்சகம் மிகத் தெளிவாக அறிக்கை வெளியிட்டு, "இந்தியப் பிரதமர் மோடி 19-ஆவது சார்க் மாநாட்டில் பங்கேற்க மாட்டார்' என்று அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகும்கூட, பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் தனது அறிவிப்பில், இந்தியா இதுவரை எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும், இந்த மாநாட்டை நடத்த விடாமல் கெடுக்கும் விதமாக இந்தியா செயல்படுகிறது என்றும் குறைகூறியுள்ளார்.
உரி ராணுவ முகாம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானுடன் உள்ள தொடர்பு, அங்கு அளிக்கப்பட்ட பயிற்சி என எல்லாவற்றையும் ஆதாரங்களுடன் அளித்த பிறகும், அதை ஒப்புக்கொள்ளாமல், உரி தாக்குதல், இந்தியாவே அரங்கேற்றிய சதி என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறி வருகிறார். பாகிஸ்தான் ஊடகங்களில் பேசிய ராணுவ அதிகாரிகள், உரி தாக்குதல் இந்திய ராணுவத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீரிகளின் எதிர்த்தாக்குதல் என்று விவகாரத்தை திசை திருப்ப முயல்கிறார்கள். இவற்றால் ஏற்பட்ட அதிருப்தியின் வெளிப்பாடுதான் இந்தியாவின் புறக்கணிப்பு முடிவு.
உரி தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, ஆயுதங்கள் அனைத்திலும் பாகிஸ்தான் முத்திரை இருப்பது உறுதி செய்யப்பட்டு ஆவணங்கள் அனைத்தும் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகும் பாகிஸ்தான் அதை ஒப்புக்கொள்ளாமல் இருப்பதால் வேதனையுடன் இந்தியாவால் எடுக்கப்பட்டிருக்கும் முடிவு இது. இந்தியர்கள் மட்டுமன்றி, உலக நாடுகளாளும் இதைப் புரிந்துகொள்ள முடியும்.
இந்தியா மட்டுமல்லாமல் பூடான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் இத்தகைய புறக்கணிப்பில் ஏன் ஈடுபட வேண்டும் என்ற கேள்வி எழக்கூடும். பூடானுக்கு இந்தியாவின் பொருளாதார உதவி தேவை என்பதாலும், வங்கதேசம் எனும் நாடு உருவாக இந்தியா காரணமாக இருந்ததால் அந்த நட்புக்காக இந்த மாநாட்டை அது புறக்கணிப்பதாகவும் பாகிஸ்தான் கூறக்கூடும். ஆனால், ஆப்கானிஸ்தானும் புறக்கணிக்கிறதே, அது ஏன்?
ஆப்கானிஸ்தானில் 1979-இல் ரஷிய ஆக்கிரமிப்பு ஏற்பட்ட வேளையில், ஆப்கானிஸ்தானின் தலைவர்கள் பலருக்கும் பாகிஸ்தான் புகலிடமாக அமைந்தது. அதன் பின்னர் தலிபான் அரசு ஏற்பட்டபோது, பாகிஸ்தான் முழுக்க முழுக்க அதற்குத் துணை நின்றது. தொடர்ந்து தலிபான் பயங்கரவாதத்துக்கு ஆதரவாகவும், அதற்கான பல்வேறு உதவிகளை வழங்கும் களமாகவும் பாகிஸ்தான் இப்போதும் இருந்து வருகிறது.
ஆகவேதான், ஐ.நா. சபையில் பேசிய ஆப்கானிஸ்தான் பிரதிநிதி, பாகிஸ்தான் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆப்கானிஸ்தானில் நடத்திக் கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினார். ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அண்மையில் இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்தித்தபோதும், ஆப்கானிஸ்தான் - இந்தியா இடையிலான வர்த்தக உறவுகளுக்கு பாகிஸ்தான் தடையாக இருந்து வருகிறது என்று குறிப்பிட்டார்.
இந்தியாவின் மீது பயங்கரவாதிகளை ஏவிவிடும் அதே வேலையை அதே அளவில் ஆப்கானிஸ்தான் மீதும் பாகிஸ்தான் நடத்திக்கொண்டிருக்கிறது. அரபு நாடுகள் தலிபான் அரசை ஆதரிக்காமல் பின்வாங்கிய காலத்திலும்கூட பாகிஸ்தான் மட்டுமே தலிபான் அரசுக்கு துணை நின்றது. இப்போதும்கூட, ஆப்கானிஸ்தானை தன்னுடைய இன்னொரு மாகாணம் போலவே கருதிக்கொண்டு, தன் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசாக ஆப்கானிஸ்தான் தலைவர்கள் ஆட்சி நடத்துவதையே விரும்புகிறது பாகிஸ்தான். இந்தச் செயல்களால் மூச்சுத்திணறிப்போன ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு எதிராக, பயங்கரவாதிகளை வளர்க்கும் நாடு என்கின்ற குற்றச்சாட்டை வெளிப்படையாக உலக அரங்கில் முன்வைத்திருக்கிறது.
தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு என்பது 1985-இல் வங்கதேச தலைநகர் டாக்காவில் தொடங்கப்பட்டது. அதன் தலைமையகம் நேபாளத்தின் தலைநகரம் காத்மாண்டுவில் இருந்து செயல்படுகிறது. இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு, பாகிஸ்தான், இலங்கை ஆகியவை இதன் உறுப்பு நாடுகள். பார்வையாளர்களாக சார்க் மாநாட்டுக்கு ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய கூட்டமைப்பு, ஈரான், ஜப்பான், மோரிஷஸ், மியான்மர், தென் கொரியா ஆகிய நாடுகள் அழைக்கப்படுகின்றன. உலகின் மொத்த நிலப்பரப்பில் 3 விழுக்காடு, மொத்த மக்கள்தொகையில் 21 விழுக்காடு சார்க் எல்லைக்குள் அமைகிறது. தெற்காசிய நாடுகளுக்கிடையே ஒற்றுமையையும் பொருளாதார முன்னேற்றத்தையும் வளர்ப்பதுதான் சார்க்கின் குறிக்கோள்.
இந்தியா, ஆப்கானிஸ்தான், பூடான், வங்கதேசம் ஆகிய நான்கு நாடுகள் புறக்கணித்த பின்னர், இந்த மாநாட்டை எப்படி நடத்த முடியும் என்பது பாகிஸ்தானுக்கே வெளிச்சம். முக்கிய முடிவுகளை மேற்கொள்ள, பாதி பேர் இல்லாத நிலையில் என்ன தீர்மானங்களை நிறைவேற்ற முடியும்? சார்க் என்கிற அமைப்பு உடைந்து போகுமானால் அதற்குக் காரணம் இந்தியா அல்ல. பாகிஸ்தானின் தவறான செயல்பாடுகளும் அணுகுமுறையும்தான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com