மாசுபட்ட காற்று!

உலக மக்கள்தொகையில் 90 விழுக்காட்டினர் மாசுபட்ட காற்றைச் சுவாசிக்கிறார்கள் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது

உலக மக்கள்தொகையில் 90 விழுக்காட்டினர் மாசுபட்ட காற்றைச் சுவாசிக்கிறார்கள் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது உலக சுகாதார நிறுவனம் (WHO). இந்த பாதிப்புகளால் ஏற்படும் பல்வேறு நோய்கள் காரணமாக ஆசியாவில்தான் அதிகமானோர் மரணமடைகின்றனர். இதில் இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 6.21 லட்சம் பேர் இறக்கின்றனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் மக்கள்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பிரிவின் தலைவர் மரியா நீரா இந்த அறிக்கை பற்றிக் குறிப்பிடுகையில், நகரங்களில் காற்று மாசு அதிகமாக உள்ளது என்பது உண்மையே. ஆனால், கிராமங்களிலும்கூட நாம் நினைத்துக் கொண்டிருப்பதுபோல, காற்று தூய்மையானதாக இல்லை. வளரும் நாடுகளில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. காற்று மாசு, எல்லா நகரங்களையும், எல்லா மக்களையும் பாதித்துள்ளது என்கிறார்.
காற்று மாசினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளாக நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா, இதயநோய், பக்கவாதம் போன்றவற்றைச் சொல்லலாம். காற்று மாசு காரணமாக ஏற்படும் நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கையை வைத்துத்தான் இந்தியாவில் ஆண்டுக்கு 6 லட்சம் பேர் காற்று மாசினால் இறக்கிறார்கள் என்று இந்த புள்ளிவிவரம் கணக்கிடுகிறது. இருப்பினும், கணக்கில் வராத மரணங்கள் குறித்த தகவல்களையும் கூட்டிப் பார்த்தால், காற்று மாசினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மிக அதிகமாகவே இருக்கும்.
காற்று மாசுக்கு முக்கிய காரணங்கள், கட்டற்ற போக்குவரத்து, வாகனப் பெருக்கம், பழைய பொருள்களை எரித்தல், அனல் மின்நிலையங்கள், தொழிற்பேட்டைகள் ஆகியவைதான். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தொழில்வளர்ச்சியை தவிர்க்க முடியாது என்பதுதான் பிரச்னை.
காற்று மாசை நம் கட்டுப்பாட்டுக்குள், அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் வைத்துக்கொள்ளுதல் என்பது இயலாத ஒன்று அல்ல. ஆனால் மக்களிடம் விழிப்புணர்வு இல்லாதது மிகப்பெரிய குறை. அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழில்துறையினர் ஆகியோரின் கூட்டணி காற்று மாசை கட்டுப்படுத்துவது குறித்து கவலைப்படுவதில்லை. அவர்களுக்கு வியாபாரம் தான் முக்கியம்.
இந்தியாவில் சாலை வசதிகளே இல்லாத நிலையில், கார்களின் எண்ணிக்கை மட்டும் பெருகிக்கொண்டே போகின்றன. குளிரூட்டு அறைகள் இல்லாத வீடுகளே இல்லாத நிலைமை உருவாகிவிட்டது. 10 ஆண்டுகள் பழைமையான வாகனங்களின் உரிமத்தை ரத்து செய்ய மக்களிடையே பெரும் எதிர்ப்பு உள்ளது. 15 ஆண்டுகள் பழமையான கனரக வாகனங்களின் உரிமத்தை ரத்து செய்யும் சட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
பொது போக்குவரத்தை குறைந்த கட்டணமும் சிறந்த வசதியும் தூய்மையானதுமாக மாற்றினால் அனைவரும் அதனை பயன்படுத்தும் நிலை உருவாகும். வாகனப் போக்குவரத்தினால் ஏற்படும் மாசு குறையும். ஆனால் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை. மெட்ரோ ரயில்கள், மின்ரயில்களின் சேவை அதிகரிக்கும்போது நகரங்களில் நிச்சயமாகக் காற்று மாசு குறையும்.
மேலும், வாகனங்களின் புகை அளவு குறித்த கட்டுப்பாடுகள் நடைமுறையில் இல்லை. மேலை நாடுகளில் ஒவ்வொரு வாகனமும் குறிப்பிட்ட அளவுக்கு மேலாக புகையை வெளியேற்றாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
நகரங்களில் சேகரிக்கப்படும் குப்பையை எரிக்கும் வழக்கத்தை உள்ளாட்சிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. நகர் முழு
வதும் சேகரிக்கப்படும் குப்பையை ஊருக்கு வெளியே ஒரு பொது இடத்தில் கொட்டி அவ்வப்போது எரிக்கிறார்கள். அதற்கு அந்தப் பகுதி மக்களிடமிருந்து மிகப்பெரும் எதிர்ப்பு, போராட்டம், மறியல் எல்லாமும் வெளிப்படுகிறது. ஆனாலும் அவை அடக்கப்படுகின்றன. தொடர்ந்து குப்பைகள் அங்கே எரிக்கப்படுகின்றன.
மாநகரத்தின் மற்ற பகுதியினர் இது குறித்து கவலைப்படுவதில்லை. எரிக்கப்படும் குப்பைகள் அந்தப் பகுதி மக்களுக்கு மட்டுமே மூச்சுத்திணறலை ஏற்படுத்துவதாக எண்ணினால் அது தவறு. காற்று மாசு நகரம் முழுவதையும் நிறைக்கிறது என்பதையும், அவர்களும் அந்தக் காற்றை சுவாசிக்கவே செய்கிறார்கள் என்பதையும் உணர்வதில்லை. இது குறித்த விழிப்புணர்வை ஊடகங்கள் ஏற்படுத்துவதுமில்லை.
தொழிற்பேட்டைகள் மற்றும் அனல் மின்நிலையங்கள் வெளியேற்றும் புகையின் அளவு மிகமிக அதிகம். இதனால் காற்றின் தூய்மை கெடுகிறது. இந்த மாசு காற்றின் வேகத்தில் அடித்துச் சென்றுவிடும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. அது உண்மையல்ல. இந்த மாசு, வானத்தில் பரவி நிற்கிறது. மெல்ல கீழே இறங்குகிறது. அதை நம்மையும் அறியாமல் நாம் சுவாசிக்கின்றோம்.
ஆலைகள் வெளியேற்றும் கரி அளவைக் கட்டுப்படுத்தும் நவீன தொழில்நுட்பங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால் அவற்றை யாரும் கடைப்பிடிப்பதில்லை. அதிகாரிகளும் அக்கறை காட்டுவதில்லை. நிறுவனங்களும் ஆர்வம் காட்டுவதில்லை.
இந்தியாவின் காற்று மாசுக்கு மிகப்பெரும் காரணிகள் போக்குவரத்து வாகனங்களும், அனல் மின்நிலையங்களும்தான். இரண்டையும் கட்டுப்படுத்த வேண்டுமானால், இந்திய மக்கள் தங்கள் வசதிகளைக் கொஞ்சம் சுருக்கிக் கொண்டால்தான் முடியும். தனிநபர் சேமிக்கும் ஒவ்வொரு யூனிட் மின்சாரமும் அனல் மின்நிலையத்தின் மாசைக் கட்டுப்படுத்த துணை நிற்கும். தனிநபர் தன் வாகனத்தைப் பயன்படுத்தாமல் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பயணமும் வாகனப் புகையை குறைக்கத் துணை நிற்கும். குப்பையை எரிக்காமல் உரமாக மாற்றும்
ஒவ்வொரு நிகழ்வும் மிகப்பெரும் தூய்மை வேள்விக்கு துணை நிற்கும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com