உழவினார் கைம்மடங்கின்...

உத்தரப் பிரதேசத் தேர்தலின்போது

உத்தரப் பிரதேசத் தேர்தலின்போது, அந்த மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் கடன் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. பிரசாரத்தின்போதும் இந்த வாக்குறுதி பிரதமராலும் மற்றவர்களாலும் உறுதிப்படுத்தப்பட்டதால்தான், ஜாதிமத வித்தியாசம் இல்லாமல் விவசாயிகள் பலர் பா.ஜ.க.வுக்கு வாக்களித்துப் பெரும் வெற்றியை அளித்தனர். மக்களவையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங், உத்தரப் பிரதேச விவசாயிகளுக்குக் கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
தற்போது கிடைத்திருக்கும் புள்ளிவிவரப்படி, உத்தரப் பிரதேசத்தில் 2016 நிதியாண்டின்போது, விவசாயிகளின் மொத்தக் கடன் தொகை ரூ.86,241.2 கோடி. இந்தக் கடன் தொகையை ரத்து செய்து, தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஆனால், வங்கிகளும், நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் மத்திய வேளாண் துறை அமைச்சரின் அறிவிப்பை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுகின்றன. பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா இப்படி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்து அரசு அறிவிப்பது, விவசாயிகள் மத்தியில் கடன் வாங்கித் திருப்பிக் கொடுக்கும் பழக்கத்தை சீர்குலைக்கும் என்று தனது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்.
ஒரு நூற்றாண்டு காலத்திற்குப் பிறகு வரலாறு காணாத வறட்சி நிலவும் இந்த வேளையில், விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வதுடன் நின்றுவிடாமல் அவர்களுக்கு நிவாரணமும் இழப்பீடும் அளிக்க வேண்டிய வேளையில், அப்படிச் செய்வது அவர்களது ஒழுக்கத்தைக் கெடுத்துவிடும் என்று வங்கிகள் வியாக்கியானம் செய்வது வேடிக்கையாக இருக்கிறது. விவசாயிகளின் கடன் தொகையைத் தள்ளுபடி செய்வது என்பது புதிதொன்றும் அல்ல. 2008-இல் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுகூட விவசாயிகளின் கடன்களை ரத்து செய்து அறிவித்திருக்கிறது. 2016 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் அன்றைய முதல்வர் ஜெயலலிதா தமிழக விவசாயிகளின் ரூ.5,780 கோடி கடனை ரத்து செய்து முதல் கையொப்பம் இட்டார்.
49 அரசு மற்றும் தனியார் வங்கிகளின் மொத்த வாராக் கடன் அளவு கடந்த ஜூன் 2016 நிலவரப்படி ரூ.6 லட்சம் கோடி. இதில் முதல் 20 வாராக் கடன் கணக்குகளின் தொகை மட்டும் ரூ.1.54 லட்சம் கோடி. விரல் விட்டு எண்ணக் கூடிய பெரு முதலாளிகள் சிலர் மலையளவு வாராக் கடன் நிலுவை வைத்துக் கொண்டிருப்பதைப் பற்றிக் கவலைப்படாத ரிசர்வ் வங்கியும், நிதியமைச்சகமும், வங்கிகளும் விவசாயிகள் கடன் தள்ளுபடி என்று வரும்போது மட்டும் கடனை திருப்பிச் செலுத்துவதில் ஒழுக்கம் குறித்து அறிவுரை கூறுகின்றன.
தாங்கள் வாங்கிய கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்து பல ஆண்டுகளுக்குப் பிறகு அசலைத் திருப்பிக் கொடுப்பது என்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் ஏராளம் ஏராளம். அப்படியிருக்கும்போது, பருவமழை பொய்த்து விட்டதால் லட்சக்கணக்கான விவசாயிகள் பட்டினி கிடக்கும் அவலம் தொடரும்போது, அவர்களது கடனை ரத்து செய்வது, இழப்பீடு தருவது போன்றவை தவறு என்று வங்கிகள் கூறத் துணிந்திருப்பது கண்டனத்துக்கு உரியது.
கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ 5 கோடி விவசாயிகள், விவசாயத்தை விட்டுவிட்டு வேறு தொழிலுக்குப் போயிருப்பதாகத் தெரிகிறது. கடந்த 20 ஆண்டுகளில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். பெருநகரங்களில் சாலையோரம் உறங்கும் பலர் கிராமங்களில் விவசாயக் கூலிகளாக இருந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, நாளொன்றுக்கு விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் 2,500 பேர், விவசாயத்தைக் கைவிடுகிறார்கள். கிராமப்புறங்களிலிருந்து விவசாயம், விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் 50,000 பேர் இந்தியாவில் நகரங்களுக்குக் குடிபெயர்கிறார்கள். இதுதான் யதார்த்த நிலைமை.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன், விவசாயத்திலிருந்து மக்களை வேறு பிழைப்புக்கு நகர்த்துவதுதான் வளர்ச்சியின் இலக்கு என்று ஒருமுறை குறிப்பிட்டார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 70% விவசாயிகள் தேவையில்லை என்றும் அவர்கள் வேறு தொழிலில் ஈடுபட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். உலக வங்கியின் எதிர்பார்ப்புப்படி 40 கோடி மக்கள் இந்தியாவில் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு நகர்த்தப்பட வேண்டும். இதன் மூலம் கிராமப் புறங்களில் கார்ப்பரேட் விவசாயத்துக்கு வழிகோலுவதும், நகர்ப்புறங்களில் குறைந்த கூலிக்கு மனைவணிகத் துறையிலும், கட்டடத் தொழிலிலும், தொழில் நிறுவனங்களிலும் வேலைபார்க்கக் கூடுதலான தொழிலாளர்களை உருவாக்குவதும்தான் அவர்களின் இலக்கு.
ஏறத்தாழ 5 கோடி பேருக்கு மேல் விவசாயத்தைத் துறந்திருக்கிறார்கள் எனும்போது அவர்களுக்குத் தொழில் துறை மாற்று வேலை ஏற்படுத்தி இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. உற்பத்தி குறைந்து, தொழில் துறை பின்னடைவை சந்தித்து வரும் வேளையில் விவசாயமும் பொய்த்து வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பது எப்படி வளர்ச்சியாக இருக்க முடியும் என்பது, பொருளாதார நிபுணர்களுக்குத்தான் வெளிச்சம்.
இந்தியா மிகப்பெரிய வேளாண் இடர்ப்பாட்டை எதிர்கொள்கிறது. உத்தரப் பிரதேச விவசாயிகளுக்கு அவர்களது ரூ.86,241.2 கோடி கடன் தொகை ரத்து செய்யும் நிலையில், மத்திய அரசு தமிழக சிறு, குறு விவசாயிகளின் ரூ.8,000 கோடி கடன் தொகையையும் ரத்து செய்ய வேண்டும்! தமிழகம் புறக்கணிக்கப்படக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com