மேக்ரானா? மரீன் லெபெனா?

அமெரிக்க அதிபர் தேர்தலுக்குத் தரப்படும் முக்கியத்துவமும் உலக அளவிலான எதிர்பார்ப்பும் பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கு வழக்கமாக இருப்பதில்லை.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்குத் தரப்படும் முக்கியத்துவமும் உலக அளவிலான எதிர்பார்ப்பும் பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கு வழக்கமாக இருப்பதில்லை. ஆனால், இந்த முறை நடக்கும் பிரான்ஸ் நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் ஒரு விதிவிலக்கு. மேலை நாடுகளில் காணப்படும் ஆட்சிக்கு எதிரான மனநிலை தொடர்கிறதா, இல்லையா என்பதை இந்தத் தேர்தல் வெளிப்படுத்தும் என்பதால்தான் இத்தனை முக்கியத்துவம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் நாட்டின் அதிபருக்கான தேர்தலின் முதல் சுற்று வாக்குப்பதிவு நடந்தது. மூன்று நாட்கள் முன்புதான் ஒரு காவல்துறை அதிகாரி இஸ்லாமியத் தீவிரவாதியால் தலைநகர் பாரீஸின் மையப்பகுதியில் கொல்லப்பட்டார் என்பதால் கடுமையான பாதுகாப்புக்கிடையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்தியாவையோ அமெரிக்காவையோ போலல்லாமல் மிகவும் உயர்ந்த ஜனநாயக முறை பிரான்ஸில் பின்பற்றப்படுகிறது. அங்கே ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் வாக்குகள் பெற்றால் மட்டும்தான் அதிபராக முடியும்.
பல கட்சி ஜனநாயகம் நடைமுறையிலுள்ள பிரான்ஸ் நாட்டில், குறைந்தபட்சம் ஐந்நூறு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஆதரித்து கையொப்பம் இட்டிருந்தால்தான் அதிபர் தேர்தலில் போட்டியிட, வேட்புமனுவே தாக்கல் செய்ய முடியும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அதிபர் தேர்தலின் முதல் கட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்த அனைவருமே போட்டியிடுவார்கள். அவர்
களில் ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் வாக்குகள் பெற்றவர் மட்டும்தான் வெற்றி பெற்றவராகக் கருதப்படுவார். அப்படி யாருக்குமே ஐம்பது விழுக்காடு வாக்குகள் கிடைக்காமல் போனால், அதிக வாக்குகள் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்களும் இரண்டாவது சுற்று தேர்தலுக்குத் தயாராக வேண்டும்.
அதிபர் தேர்தலில் மட்டுமல்ல, பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே முறைதான் கடைப்பிடிக்கப்படுகிறது. வரும் ஜூன் 11, 18 தேதிகளில் தேசியப் பேரவை என்று அழைக்கப்படும் பிரான்ஸ் நாட்டின் மக்களவைக்கான தேர்தலில் 577 உறுப்பினர்கள் அதிபர் தேர்தல் முறையைப்போலவே, 50 விழுக்காடு வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்படுவர்.
முதல் சுற்றுத் தேர்தலில் போட்டியிட்ட நான்கு முக்கிய வேட்பாளர்களும் தனித்துவம் பெற்றவர்கள். ஒருவர் ஐரோப்பிய யூனியன் ஆதரவாளர். இரண்டாமவர் அரசு செலவினங்களையும் மானியங்களையும் குறைக்க வேண்டும் என்று கூறும் வலதுசாரி ஆதரவாளர். மூன்றாமவர் ஐரோப்பியக் கூட்டமைப்புக்கு எதிரான இடதுசாரி சிந்தனையாளர். வலதுசாரி சிந்தனை உடைய தேசியவாதியான நான்காமவர் வெற்றி பெற்றால் பிரான்ஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக சரித்திரம் படைப்பார்.
முதல் சுற்று முடிந்தவிட்ட நிலையில் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இப்போது போட்டியில் இருக்கும் இரண்டு வேட்பாளர்கள் 39 வயது இமானுவல் மேக்ரான் என்பவரும், தேசிய முன்னணியைச் சேர்ந்த மரீன் லெபென் என்கிற பெண்மணியும். இமானுவல் மேக்ரானும், தேசிய கூட்டணி தலைவி மரீன் லெபெனும்மே 7-ஆம் தேதி நடக்க இருக்கும் இரண்டாவது சுற்று வாக்குப்பதிவில் மோதுகிறார்கள்.
இமானுவல் மேக்ரான் ஐரோப்பியக் கூட்டமைப்பில் பிரான்ஸ் தொடர வேண்டும் என்கிற கருத்தில் தீவிரமாக இருப்பவர். இவர் ஒரு வருடம் முன்னால்தான் கட்சியைத் தொடங்கினார். மேக்ரான் பள்ளி மாணவனாக இருக்கும்போதே தன்னைவிட 24 வயது மூத்த ஆசிரியையைக் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்.
அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதால் மட்டுமே முடிந்துவிடுவதில்லை. ஜூன் மாதம் நடைபெறும் தேசிய பேரவைக்கான தேர்தலிலும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவரின் கட்சி பெரும்பான்மை பலம் பெற்றால் மட்டும்தான் அவரால் சுதந்திரமாக செயல்பட முடியும். தேசிய பேரவைக்கான தேர்தலில் எதிர்க்கட்சி பெரும்பான்மை பலம் பெற்றுவிட்டால், அதன் தலைவரை பிரதமராக நியமித்து ஆட்சி நடத்த வேண்டிய கட்டாயம் அதிபருக்கு ஏற்படும்.
தனது நம்பிக்கைக்குரிய தேசிய பேரவை உறுப்பினர் ஒருவரை பிரதமராக நியமிக்கும் அதிகாரம் அதிபருக்கு இருக்கிறது என்றாலும், சட்டம் இயற்றும் அதிகாரம் தேசியப் பேரவைக்குதான் உண்டு. அதுபோன்ற சூழ்நிலையில் தேசியப் பேரவையை ஓராண்டுக்குப் பிறகு அதிபரால் கலைத்துவிட முடியும். அப்படியொரு பரிசோதனையில் இறங்குவது ஆபத்திலும் முடியலாம்.
இந்த அதிபர் தேர்தல் முடிவு பிரிட்டன் வாக்காளர்கள் ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து விலகுவது என்றும், அமெரிக்க வாக்காளர்கள் டொனால்ட் டிரம்ப்பை வெற்றிபெறச் செய்ததும்போல பிற நாட்டினரின் குடியேற்றத்திற்கு எதிரான மனநிலையை பிரதிபலிக்குமா, பிரதிபலிக்காதா என்பதை வெளிப்படுத்தும். அதேபோல பிரான்ஸ் வாக்களிக்கப்போவது இடதுசாரிக் கொள்கைக்கா, வலதுசாரிக் கொள்கைக்கா அல்லது கூட்டுப் பொருளாதாரத்திற்கா என்பதையும் தேர்தல் முடிவு வெளிச்சம்போடும்.
முக்கியமான தேர்தல் பிரச்னைகளாக இருக்கப்போவது வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார மந்தநிலை, தீவிரவாதம், ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் தொடருவதா - வேண்டாமா, இஸ்லாமிய அகதிகள் நுழைவு போன்றவை. வேட்பாளர்களின் நம்பகத்தன்மையும் ஒரு முக்கிய காரணியாக இருக்கும்.
இமானுவல் மேக்ரான் வெற்றி பெற்று பிரான்ஸ் ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடருமா? மரீன் லெபென் வெற்றி பெற்று கூட்டமைப்பில் இருந்து வெளியேறுமா? பிரான்ஸ் வாக்காளர்கள் எதற்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்பதை உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com