பா.ஜ.க. காட்டில் மழை!

தில்லியில் மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. பெரும் வெற்றியை அடைந்திருப்பதும், ஆம் ஆத்மி கட்சி தோல்வியைத் தழுவியிருப்பதும்,

தில்லியில் மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. பெரும் வெற்றியை அடைந்திருப்பதும், ஆம் ஆத்மி கட்சி தோல்வியைத் தழுவியிருப்பதும், காங்கிரஸ் ஏறத்தாழ நிராகரிக்கப்பட்டிருப்பதும் எதிர்பாராததாகவோ, வியப்பளிப்பதாகவோ இல்லை. பா.ஜ.க.வின் வெற்றிக்கு நரேந்திர மோடியின் செல்வாக்கு காரணமாக இருந்திருக்கிறது என்பதும், ஆம் ஆத்மி கட்சியின் பின்னடைவுக்கு அந்தக் கட்சியின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர் என்பதும் தெளிவு.
கடந்த பத்தாண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில், தில்லியின் மாநகராட்சிகள் செயல்பட்ட விதம் போற்றுதலுக்கு உரியதாக இல்லை. பா.ஜ.க. தலைமையிலான மூன்று மாநகராட்சிகளும் தில்லியை, குப்பைகளின் தலைநகரமாகவும், சாக்கடைத் தண்ணீரின் தலைநகரமாகவும், காற்று மாசின் தலைநகரமாகவும், டெங்கு உள்ளிட்ட நோய்த் தொற்றுகளின் தலைநகரமாகவும் மாற்றியதுதான் சாதனை என்று கூறவேண்டும். அப்படி இருந்தும்கூட, மூன்றாவது முறையாக தில்லிவாழ் மக்கள் பா.ஜ.க.வுக்கே வாக்களித்திருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம், பா.ஜ.க.வின் மீதான நம்பிக்கையால் அல்ல; ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸும் பா.ஜ.க. அளவுக்குக்கூட செயல்படாது என்கிற அவநம்பிக்கையில்தான்!
சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் உத்தரப் பிரதேசத்திலும், உத்தரகண்டிலும் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, தில்லி மாநகராட்சித் தேர்தல்களிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றிருப்பது எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு நிலைபெற்றிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இதுவரை இந்தியாவில் நடந்த எந்தவொரு மாநகராட்சித் தேர்தலிலும் இந்த அளவுக்குப் பிரதமரின் பெயரையும், சாதனைகளையும் முன்வைத்துப் பிரசாரம் நடந்ததாக சரித்திரமே இல்லை. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்படும் என்று வாக்காளர்கள் நம்பும் அளவுக்கு மோடி அலை வீசுகிறது என்பதுதான் உண்மை.
பிரதமரின் செல்வாக்கை பயன்படுத்தியதால் மட்டுமே பா.ஜ.க. மூன்று மாநகராட்சிகளையும் கைப்பற்றி விட்டது என்று சொன்னால் அது முழுமையான உண்மையாக இருக்காது. முந்தைய மாநகராட்சி உறுப்பினர்களில் பெரும்பாலானோரை மாற்றியது மட்டுமல்லாமல், ஒவ்வொரு பகுதியிலும் அதிகம் வசிக்கும் பிரிவினரையும் கணக்கில் எடுத்துக் கொண்டு திட்டமிட்டு வேட்பாளர்களை நிறுத்தியதும் வெற்றிக்கு முக்கியமான காரணம். பா.ஜ.க. தனது வாக்குகளைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதும், காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியில் ஊடுருவி இருப்பதும், மூன்று மாநகராட்சிகளையும் கைப்பற்றி வெற்றிவாகை சூட முடிந்ததற்கு இன்னொரு காரணம்.
ஆம் ஆத்மி கட்சியின் செல்வாக்குச் சரிவுதான் தில்லியில் மூன்று மாநகராட்சிகளையும் பா.ஜ.க.வால் கைப்பற்ற முடிந்ததற்கு முக்கியமான காரணம். மின்சார மானியம், தண்ணீர் கட்டணத்திற்கான மானியம் ஆகிய இரண்டு தேர்தல் வாக்குறுதிகளைத் தவிர, ஏனைய வாக்குறுதி எதையும் ஆம் ஆத்மி கட்சி நிறைவேற்றவில்லை. எதற்கெடுத்தாலும் மத்திய அரசிடம் மோதல் போக்கைக் கடைப்பிடித்ததும், தில்லியின் எல்லா பிரச்னைகளுக்கும் துணைநிலை ஆளுநரையே காரணம் காட்டித் தப்பித்ததும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலிடமும், ஆம் ஆத்மி கட்சியின் மீதும் மக்களுக்கு வெறுப்பை அதிகரித்ததே தவிர அனுதாபத்தை ஏற்படுத்தவில்லை.
2015 தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 70 இடங்களில் 67 இடங்களை வென்று சரித்திரம் படைத்த ஆம் ஆத்மி கட்சி, இரண்டே ஆண்டுகளில் இந்த அளவுக்கு செல்வாக்குச் சரிவை எதிர்கொண்டதற்கு, அந்தக் கட்சித் தலைமையின் அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பும் பேராசையும்தான் காரணம். தில்லியில் பெற்ற செல்வாக்கைத் தொடர்ந்து, தேசிய அளவில் மக்களவைத் தேர்தலில் நிற்க முற்பட்டதும், பிரதமர் நரேந்திர மோடிக்கு மாற்று என்று தன்னைக் காட்டிக் கொள்ளும் விதத்தில் வாராணசியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்டதும், சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் பஞ்சாபிலும், கோவாவிலும் போட்டியிட முற்பட்டதும் தில்லியின் மீதான கவனத்திலிருந்து முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை திசைதிருப்பிவிட்டன.
2014 மக்களவைத் தேர்தலில் 65.07% வாக்குகளும், 2015 தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 67.08% வாக்குகளும் பதிவாகின என்றால், இப்போது நடைபெற்ற தில்லியின் மூன்று மாநகராட்சிகளுக்கான தேர்தலில் வாக்களிக்க முற்பட்டவர்கள் வெறும் 54% பேர் மட்டுமே. 13% வாக்காளர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்த 13% வாக்காளர்களும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஆம் ஆத்மி கட்சியை வெற்றி பெறச் செய்தார்கள். பா.ஜ.க.வுக்கும் காங்கிரஸுக்கும் மாற்று வேண்டும் என்று அன்று விரும்பியவர்கள்.
தில்லி மாநகராட்சித் தேர்தல் முடிவுகளால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது காங்கிரஸ்தான். காங்கிரஸ் மேலிடத்தின் மீதான அதிருப்தியில், தேர்தலுக்கு முன்னால் சில தலைவர்கள் கட்சியிலிருந்தே விலகிவிட்டனர். மூன்று முறை முதல்வராக இருந்த, மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருக்கும் ஷீலா தீட்சித்தைப் பிரசாரத்துக்கே அழைக்கவில்லை. தேர்தலை எதிர்கொள்ளும் திறமைகூட இல்லாத நிலைமைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டு விட்டது தான் மிகப்பெரிய சோகம்.
தில்லி மாநகராட்சித் தேர்தல் முடிவுகள் ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் அளித்திருக்கும் எச்சரிக்கை மணி. அக்கட்சி, அடுத்த மூன்று ஆண்டுகளில் இழந்த செல்வாக்கைப் பெறப்போகிறதா, இல்லை, சரித்திரத்தில் ஒரு சுருதிபேதமாக மறையப்போகிறதா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com