தீர்வல்ல, தீர்ப்பு!

கேரள மாநில காவல்துறைத் தலைவராக இருந்த டி.பி. சென்குமார் ஐ.பி.எஸ்.-ஐ தலைமைப் பொறுப்பிலிருந்து அகற்றிய கேரள அரசின் முடிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது

கேரள மாநில காவல்துறைத் தலைவராக இருந்த டி.பி. சென்குமார் ஐ.பி.எஸ்.-ஐ தலைமைப் பொறுப்பிலிருந்து அகற்றிய கேரள அரசின் முடிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது ஆட்சியாளர்களுக்குப் போடப்பட்டிருக்கும் கடிவாளம் என்றுதான் கூற வேண்டும். காவல்துறையினரைத் தங்களது விருப்பு வெறுப்புக்கு ஏற்பப் பந்தாடும் அரசியல்வாதிகளின் செயல்பாடு இந்தத் தீர்ப்பால் கட்டுப்படுத்தப்படும். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு பதவியேற்கும் ஆட்சியாளர்கள் தங்களது நம்பிக்கையைப் பெற்ற ஒருவரைக் காவல்துறை தலைவராக நியமித்துக் கொள்ளும் உரிமையை இழப்பார்கள்.
கேரள மாநிலத்தின் காவல்துறைத் தலைவராக இருந்தவர் டி.பி. சென்குமார். இந்த மூத்த காவல்துறை அதிகாரி கேரளத்தில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசின் முழு நம்பிக்கையைப் பெற்றவராக இருந்தவர். கேரளத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இடதுசாரி முன்னணி அரசு ஆட்சிக்கு வந்தபோது, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை, காவல்துறைத் தலைவர் டி.பி. சென்குமாரைத் தலைமைப் பொறுப்பிலிருந்து மாற்றியது.
கொல்லத்தை அடுத்த புட்டிங்கல் என்கிற இடத்தில் உள்ள கோவிலில் ஏற்பட்ட வெடிவிபத்தைக் காவல்துறை கையாண்ட விதமும், 2016 ஏப்ரல் மாதம் நடந்த ஜீனா என்கிற பெண்ணின் படுகொலையும் காவல்துறை மீது மக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாகக் காரணம் காட்டி காவல்துறைத் தலைவர் டி.பி. சென்குமார் மாற்றப்பட்டார். இதை எதிர்த்து சென்குமார் தொடுத்த வழக்கில்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து அவரை மறுபடியும் அதே பதவியில் நியமனம் செய்ய உத்தரவிட்டிருக்கிறது.
முந்தைய ஆட்சியில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு பதவி ஏற்ற பினராயி விஜயன் காவல்துறைத் தலைவர் சென்குமாரை மாற்றியதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. சென்குமாரின் மாற்றத்திற்கு அரசியல்தான் காரணம் என்றும், மக்களின் அதிருப்தி போன்ற ஆதாரமில்லாத காரணங்களுக்காகக் காவல்துறை உயர் அதிகாரிகள் மாற்றப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கண்டித்திருக்கிறது.
காவல்துறை அதிகாரிகளை மாற்றம் செய்வதில் அரசியல் தலைமைக்கு இருக்கும் அதிகாரத்திற்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பு கடிவாளம் போட்டிருப்பதில் வியப்பில்லை. 2006-இல் பிரகாஷ் சிங் வழக்கில் தீர்ப்பு வழங்கிய அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால் தலைமையிலான அமர்வு, மாநில காவல்துறையின் தலைமைப் பதவியில் இருப்பவருக்கு குறைந்தது இரண்டாண்டு பதவிக்காலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பு அளித்திருக்கிறது. இருந்தும்கூட, அந்தத் தீர்ப்பு நடைமுறையில் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
1977 நவம்பர் 15-ஆம் தேதி, இந்திய அரசு தேசிய காவல்துறை ஆணையத்தை அமைத்தது. குற்றங்களைத் தடுப்பது, கட்டுப்படுத்துவது, சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவது மட்டுமல்லாமல், காவல்துறையினரின் பங்கு, கடமை, அதிகாரம், பொறுப்புகள் என்று எல்லா பிரச்னைகளையும் பகுத்தளித்து பரிந்துரை வழங்க அந்த ஆணையத்திடம் கோரப்பட்டது. மூன்றரை ஆண்டுகள் நாடுதழுவிய அளவில் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு தனது இறுதி அறிவிப்பை 1981-இல் அந்த ஆணையம் தாக்கல் செய்தது.
எட்டு பகுதிகளாக தவணை முறையில் தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையில் புதிய காவல்துறைச் சட்டத்தின் வரைவும் இணைக்கப்பட்டிருந்தது. பல்வேறு காரணங்களால், தேசியக் காவல்துறை ஆணையத்தின் பரிந்துரைகள் பெறப்பட்டனவே தவிர, வழக்கம்போல அவை கிடப்பில் போடப்பட்டுவிட்டன.
எல்லா அறிக்கைகளும், பரிந்துரைகளும் காவல்துறையில் உயர்பதவிகளுக்குக் குறிப்பிட்ட காலவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், அப்போதுதான் அரசியல் தலைமையின் நிர்வாகத் தலையீடு இல்லாமல் காவல்துறையின் தலைவரால் செயல்பட முடியும் என்றும் தெளிவுபடுத்தியிருக்கின்றன. இவற்றை எல்லாம் சுட்டிக் காட்டித்தான் கேரளாவின் பினராயி விஜயன் அரசு டி.பி. சென்குமாரை காவல்துறைத் தலைமைப் பொறுப்பிலிருந்து அகற்றியதை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.
தலைமைச் செயலர் பதவி, காவல்துறைத் தலைவர் பதவி இரண்டுமே முக்கியமானவை என்றாலும்கூட, இரண்டும் வெவ்வேறு வகையானவை என்கிறது உச்சநீதிமன்றம். 'காவல்துறையின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் குற்றங்கள், சட்டங்கள், பொது ஒழுங்கு, குற்றங்களின் புலன் விசாரணை ஆகியவற்றுடன் தொடர்புடையவர். குற்றங்களில் புலன்விசாரணையிலோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுப்பதிலோ, பதவி, பொறுப்பு உள்ளிட்டவை குறித்துக் கவலைப்படாமல் பணியாற்றியாக வேண்டும். ஆட்சியில் இருப்பவர்களின் விருப்பு வெறுப்புக்கு சட்டம் வளைந்து கொடுத்துவிடக் கூடாது. அதனால் காவல்துறை, நிர்வாகத் தலைமையின் விருப்பு வெறுப்புகளிலிருந்து அகற்றி நிறுத்தப்பட வேண்டும்' என்பதுதான் உச்சநீதிமன்றத்தின் கருத்து.
கேரளத்தில் காவல்துறைத் தலைவராக சென்குமாரின் இரண்டாண்டுப் பதவிக் காலம் வரும் மே 21 வரை தொடரும். அவர் ஜூன் மாதத்தில் பணி ஓய்வு பெறுவார். இந்தத் தீர்ப்பின் எதிரொலியாக எல்லா மாநிலங்களிலும் காவல்துறைத் தலைமைப் பதவி வகிப்பவர்கள் இனி அரசியல் மாற்றங்களால் பாதிக்கப்படாமல் இரண்டாண்டு பதவி வகிப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
எல்லாம் சரி,பெரும்பாலான காவல்துறை அதிகாரிகள் அரசியல் சார்புள்ளவர்களாக இருக்கிறார்களே அதை மாற்றுவது எப்படி என்பது குறித்தும் இந்தத் தீர்ப்புக்கு முன்னால் உச்சநீதிமன்றம் சிந்தித்திருக்க வேண்டாமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com