நீதித்துறையில் வெளிப்படைத்தன்மை!

நீதிபதி ஜே.எஸ்.கேஹர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற பிறகு நீதித்துறை பல மாற்றங்களுக்குத் தயாராகி இருக்கிறது.

நீதிபதி ஜே.எஸ்.கேஹர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற பிறகு நீதித்துறை பல மாற்றங்களுக்குத் தயாராகி இருக்கிறது. இதற்கு முன்பு நீதித்துறை குறித்த எந்த விமர்சனமும் ஏற்றுக்கொள்ளப்படாமலும், நீதித்துறையின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமலும் இருந்த நிலைமையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியிருக்கிறது.
இரு வாரங்களுக்கு முன்னர் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமித்தவா ராய் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, அரசியல் சாசன நியமனங்கள் அனைத்தையுமே தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கு இசைவு தெரிவித்திருக்கிறது. அதாவது, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, மாநில ஆளுநர்கள், தலைமைத் தேர்தல் ஆணையர், தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் போன்ற அரசியல் சாசனப் பாதுகாப்புடன் கூடிய பதவிகள் அனைத்துமே வெளிப்படைத்தன்மைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது அதன் உட்கருத்து.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஒன்று ஏற்கெனவே விவாதித்து வருகிறது. அப்படிப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவர், தலைமை நீதிபதியின் அலுவலகத்தைத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் கொண்டு வருவதற்கு ஆதரவு தெரிவித்திருப்பது என்பது மிகவும் முக்கியமான திருப்பம்.
நீதித்துறையின் சில பரிந்துரைகள் ஏற்கப்படுவதற்கும், சில பரிந்துரைகள் நிராகரிக்கப்படுவதற்கும் பொதுவெளியில் காரணங்கள் தெரிவிக்கப்படுவது என்பது சரியாக இருக்குமா என்கிற கேள்வி எழுகிறது. குறிப்பிட்ட நீதிபதி ஒருவர் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார், அல்லது ஏன் நிராகரிக்கப்பட்டார் என்பதையெல்லாம் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது அவசியம்தானா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அதேபோல ஒரு நீதிபதியின் பதவி உயர்வுக்கான காரணங்களையோ அல்லது அவருக்குப் பதவி உயர்வு தரப்படாததற்கான காரணங்களையோ தலைமை நீதிபதியின் அலுவலகம் பொதுவெளியில் தெரிவிக்க வேண்டியது அவசியம்தானா?
நீதிபதிகள், 'கொலீஜியம்' என்கிற நீதிபதிகள் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அப்படித் தேர்ந்தெடுக்கப்படும்போது குழுவிலிருக்கும் நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துகள் எழுத்து மூலம் பதிவு செய்யப்படுவதில்லை. அதற்குக் காரணம், பரிந்துரைக்கப்பட்டிருக்கும் ஒருவரை நிராகரிப்பதற்கான காரணங்களைப் பதிவு செய்து அவருக்குக் களங்கம் ஏற்படுத்தக்கூடாது என்பதுதான். கொலீஜியத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லது நிராகரிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்கள் பொதுவெளியில் தெரிவிக்கப்படும்போது தொடர்புடைய வழக்குரைஞர் அல்லது நீதிபதி தர்மசங்கடத்துக்கு உள்ளாவார். அதேபோல கொலீஜியத்தில் உள்ள உறுப்பினர்களும் தங்களது விமர்சனங்களை எழுத்து மூலம் பதிவு செய்யத் தயங்குவார்கள்.
நீதிபதிகள் நியமனத்துக்கு இப்போது கையாளப்படும் கொலீஜியம் முறை குறித்து விமர்சனங்கள் இருக்கின்றன. நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதுதான் பரவலாக வைக்கப்படும் கோரிக்கை. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் அலுவலகத்தை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் கொண்டு வருவது இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலாக அமையும்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமித்தவா ராய் ஆகியோரின் கருத்து. அரசியல் சாசனப் பதவியில் இருப்பவர்கள் மிகவும் முக்கியமான பொறுப்பில் இருப்பதால் அவர்களுக்குத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் முன்வைத்த கருத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் அலுவலகத்தைப் போலவே மாநில ஆளுநர்களின் அலுவலகங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவற்றையும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் கொண்டு வர வேண்டும் என்பதுதான் நீதிபதிகள் மிஸ்ரா மற்றும் ராய் ஆகியோரின் கருத்து. அப்படிச் செய்யும்போது மாநில ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் அன்றாட நடவடிக்கைகளில் தேவையில்லாமல் தலையிட்டுக் குழப்பம் ஏற்படுத்தமாட்டார்கள்.
அதேபோல ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பும்போது, ஆளுநர்கள் அதற்குத் தகுந்த காரணங்களைக் கூற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவார்கள். இல்லையென்றால் அவர்கள் அனுப்பிய அறிக்கை விவரம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்டு மாநில ஆளுநர்கள் பொதுவெளியில் கேலிக்கு ஆளாவார்கள்.
உச்சநீதிமன்ற அமர்வு மாநில ஆளுநர்களின் அலுவலகத்தைத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் கொண்டு வருவதற்கு ஆதரவு தெரிவித்திருப்பது மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு வலு சேர்க்கிறது. கடந்த 2007-ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கோவா மாநிலத்தில் காணப்பட்ட அரசியல் சூழல் குறித்து மத்திய அரசுக்கு, அம்மாநில ஆளுநர் அனுப்பிய அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று கோவா ஆளுநர் மாளிகைக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
மத்திய தகவல் ஆணையம், உச்சநீதிமன்றத் தலைமை அலுவலகத்தை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் கொண்டுவரப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருக்கிறது. இப்போது உச்சநீதிமன்ற அமர்வும் அதற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்ற நிலையில் நீதித்துறையில் வெளிப்படைத்தன்மை என்பது பொதுவிவாதத்திற்கு வந்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com