மானியம் தேவைதான்!

சமையல் எரிவாயு உருளைகளுக்கு வழங்கப்பட்டு வரும்

சமையல் எரிவாயு உருளைகளுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து மானியங்களையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ரத்து செய்வது என்று மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக, மக்களவையில் திங்கள்கிழமையன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்து மூலம் பதிலளித்திருக்கிறார். அதுமட்டுமல்ல, இதுவரை மாதந்தோறும் ரூ.2 வீதம் உயர்த்தப்பட்டு வந்த மானிய விலை சமையல் எரிவாயு உருளைகளின் விலையை கடந்த ஜூன் மாதம் முதல் மாதந்தோறும் ரூ.4 வீதம் உயர்த்திக் கொள்ளவும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளித்திருக்கிறது.
நேற்று மாநிலங்களவையில் இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டபோது, 'மானியத்தை முற்றிலுமாக நிறுத்தும் நோக்கில் சமையல் எரிவாயு விலையை மாதந்தோறும் சிறிது சிறிதாக உயர்த்துவது என்று கடந்த 2011-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காலத்திலேயே முடிவெடுக்கப்பட்டது' என்பதுதான் அமைச்சரின் பதில்.மானியங்களுக்காக மத்திய அரசு 2017 - 18 நிதியாண்டில் மட்டும் ரூ.2.40 லட்சம் கோடி செலவிடுகிறது. இதில் உணவுப் பொருள்கள் மானியத்திற்கு ரூ.1.45.338 கோடியும், உர மானியத்திற்கு ரூ.70,000 கோடியும், பெட்ரோல் மானியத்திற்கு ரூ.25,000 கோடியும் ஒதுக்கியிருக்கிறது. இதில் ரூ.16,076 கோடி சமையல் எரிவாயு உருளைக்கான மானியம். மீதம் மண்ணெண்ணைக்கான மானியம்.
வசதிபடைத்தவர்கள் மானியங்கள் பெறுவது என்பது தேவையில்லைதான். ரூ.10 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் இருப்பவர்களுக்கு மானியங்களை ரத்து செய்வதில் குறைகாணவே முடியாது. அதே நேரத்தில் அனைத்து மானியங்களும் முற்றிலுமாக அகற்றப்பட்டு, சந்தையே விலையை நிர்ணயித்துக் கொள்வதும், அனைவரும் சந்தை விலையில் பொருள்களை வாங்கிக் கொள்வதும் என்பது, இந்தியா போன்று ஏறத்தாழ 35% பேருக்கும் மேல் மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் நிலையில் சரியான முடிவாக இருக்காது.
ஆட்சியாளர்கள் இப்படியொரு முடிவை நோக்கி நகர்கிறார்கள் என்பதை நாம் நமது 5.12.2014-இல் வெளிவந்த 'தினமணி' தலையங்கத்திலேயே குறிப்பிட்டிருந்தோம்.
'மத்தியில் ஆள்வது எந்த அரசாக இருந்தாலும், அவற்றின் ஒரே நோக்கம் சமையல் எரிவாயு உருளைக்கு மானியம் இல்லாமல் செய்வதே! ஆனால், அதைச் செய்யும்போது வாக்குவங்கிக்கு குந்தகம் ஏற்படாமல், ஒட்டகத்தின் மீது சுமையை ஏற்றி, ஒட்டகத்தின் திருப்திக்காக அதன் கண் எதிரில் ஒரு சிறு மூட்டையை கீழே வீசுவதைப்போன்று, சில கபட நாடகங்களை நடத்துகிறார்கள்.
வங்கியில் மானியத் தொகையை நேரடியாக செலுத்துவதும், மக்கள் சந்தை விலைக்குப் பொருள்களை வாங்கிக் கொள்வதும், ஒருவகையில் நாடகம்தான். நேரடி மானியம் பெறுவோர் சந்தை விலைக்கு மறைமுகமாகப் பழகுவார்கள். மானியம் பெறாதவர்கள் சந்தை விலைக்கு நேரடியாகவே பழகிவிடுவார்கள். இதுதான் அரசின் திட்டம். அனைவருக்கும் இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு தருகிறோம் என்று கூறி, வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்தவர்களின் மானிய விலை மண்ணெண்ணெய்க்கு அரசு முதலில் முற்றுப்புள்ளி வைத்தது. இப்போது நேரடி மானியம் என்கிற பெயரில் படிப்படியாக எரிவாயு மானியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்பட்டிருக்கிறது'' என்று நாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பிட்டிருந்தோம்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்த பிறகும், அதற்கு ஏற்றாற்போல பெட்ரோலியப் பொருள்களின் விலையில் அரசு விலைக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. அதற்கு பதிலாக பெட்ரோலியப் பொருட்களின் மீதான மறைமுக வரிகளை அதிகரித்துத் தனக்கு வரும் வருவாயை அதிகரித்துக் கொண்டது.
மானியங்கள் தரப்படுவது என்பதே சாமானிய, அடித்தட்டு, கீழ் நடுத்தர வர்க்கத்தினரால் அந்த விலை கொடுத்து அத்தியாவசியப் பொருள்கள் வாங்க முடியாது என்பதால்தான். அப்படி இருக்கும்போது மானியங்களை முற்றிலுமாக அகற்றுவது என்பது எப்படி சரியாக இருக்க முடியும்?
வேட்புமனு தாக்கல் செய்யும்போது தங்களது சொத்து மதிப்பு பல கோடி என்று தெரிவித்திருக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் சலுகைகளும், மானியங்களும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கப்படுகிறது. சம்பளமும், படிகளும் கூட்டப்படுகின்றன. சாமானிய மக்களுக்கு அரசு தரும் ஒரே ஒரு சலுகை மானிய விலையில் உணவுப் பொருள்களும், சமையல் எரிவாயுவும். அப்படி இருக்கும்போது, வருமான வரி செலுத்துபவர்களுக்கு மானியங்களை அகற்றுவதுபோல, சாமானியர்களின் மானியங்களையும் அகற்றுவது என்ன நியாயம்?
விறகடுப்பும், மண்ணென்ணையும் பயன்படுத்திக் கொண்டிருந்த ஏழை எளியவர்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு இலவசமாக வழங்குகிறோம் என்று கூறி, அவர்களை அதற்குப் பழக்கப்படுத்தினார்கள். 2.6 கோடி ஏழைப் பெண்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு அளித்துப் பெருமை தட்டிக் கொண்டார்கள். இப்போது, சந்தை விலைக்கே வாங்கிக் கொள்ளுங்கள் என்று தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்கள்.
வசதி படைத்தவர்களுக்கு மானியங்கள் தரப்படக் கூடாதுதான். மானியங்கள் முறைகேடுகளுக்கு வழிவகுக்கக் கூடாதுதான். ஆனால், அடித்தட்டு, நடுத்தரவர்க்கத்தினரின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் மானியங்கள் முற்றிலுமாக அகற்றப்படுவதும் கூடாது. சமையல் எரிவாயு உருளைகளின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டால் மட்டுமே மானியம் முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com