பெயர்ப் பிரச்னை

சில தெருக்களின் பெயர்களை மாற்றுவது என்று சென்னை
பெயர்ப் பிரச்னை


சில தெருக்களின் பெயர்களை மாற்றுவது என்று சென்னைப் பெருநகராட்சி முடிவெடுத்திருக்கிறது. அதன்படி அந்தந்தத் தெருவிலிருக்கும் முக்கியமான கட்டடங்களையோ, நிறுவனங்களையோ, அலுவலகத்தையோ அவை அமைந்திருக்கும் தெருக்களுக்கு சூட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. சென்னை பெருநகராட்சி சிறப்பு அலுவலர் குழுவின் தீர்மானத்தின்படி ஜார்ஜ் டவுனிலுள்ள பிரேசர் பாலச் சாலை, டி.என்.பி.எஸ்.சி. சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட இருக்கிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம், பிரேசர் பாலச் சாலையில் சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. பிரேசர் பாலச் சாலையின் பெயரை டி.என்.பி.எஸ்.சி. சாலை என்று மாற்ற வேண்டும் என்று 2016-லேயே தமிழக அரசுக்கு அந்த ஆணையம் வேண்டுகோள் விடுத்திருந்தது. அந்த வேண்டுகோளை இப்பொழுது நிறைவேற்ற முற்பட்டிருக்கிறது சென்னை பெருநகராட்சி.
அதேபோல சென்னை எழும்பூரிலுள்ள மாண்டியத் சாலை, 'ரெட் கிராஸ்' சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சாலை கடந்த 250 ஆண்டுகளாக மாண்டியத் சாலை என்று பரவலாக அறியப்பட்டு வந்திருக்கிறது. இந்தச் சாலையின் பெயருக்கு காரணமான வில்லியம் மாண்டியத் என்பவர் மிகப்பெரிய பங்களிப்பு எதையும் தந்திருப்பதாகத் தகவல் இல்லாத நிலையில் அந்தச் சாலைக்கு ரெட் கிராஸ் சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க வழியில்லை.
ஆனால், பிரேசர் பாலச் சாலை அப்படிப்பட்டதல்ல. அதற்கு ஒரு பின்னணி உண்டு. 1688 செப்டம்பர் 29-இல் தொடங்கப்பட்ட சென்னை மாநகராட்சியின் நான்காவது மேயராக 1691-இல் இருந்த பெருமைக்குரியவர் வில்லியம் பிரேசர். இவரது நினைவாகத்தான் ஜார்ஜ் டவுனிலுள்ள பாலத்திற்கு பிரேசர் பாலம் என்று பெயர் சூட்டப்பட்டது.
சென்னையிலுள்ள ஏறத்தாழ 50 சாலைகள் காலனிய ஆதிக்கத்தைச் சேர்ந்த பிரிட்டிஷ் அதிகாரிகளின் பெயரில் காணப்படுகின்றன. இந்தப் பெயர்களையெல்லாம் மாற்றுவது என்று 2010 முதல் சென்னை பெருநகராட்சியால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஹாடோஸ் சாலை, ஹாரிங்டன் சாலை, ஸ்டெர்லிங் சாலை, டெய்லர்ஸ் சாலை, ஆர்ம்ஸ் சாலை, கிரீம்ஸ் சாலை உள்ளிட்ட சாலைகளுக்கு எல்லாம் ஏன் தமிழ்ச் சான்றோர்களின் பெயர்களைச் சூட்டக்கூடாது என்கிற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.
முன்பே குறிப்பிட்டதுபோல, எந்தவித சரித்திரப் பின்னணியோ, சமுதாயப் பங்களிப்போ இல்லாத வெளிநாட்டவர்களின் பெயர்களை அகற்றுவதில் எந்தவிதமான தவறும் காண முடியாது. அதேநேரத்தில் நம்மை அடிமைப்படுத்திய அந்நியர்களாகவே இருந்தாலும், அவர்களுக்கு அரசியல் சமுதாயப் பங்களிப்பு இருக்குமேயானால் அவற்றை நினைவுகூரும் விதமாக அந்த ஆளுமைகளின் பெயரில் அமைந்த சாலைகளின் பெயர்களை மாற்றுவது சரியாக இருக்காது. திருக்குறளை மொழிப்பெயர்த்த, தன்னை எல்லீஸன் என்று அழைத்துக் கொண்ட, எல்லீஸ் துரையின் பெயரில் அமைந்த எல்லீஸ் சாலையின் பெயரை மாற்றுவது என்பதை ஏற்க மனம் ஒப்பவில்லை.
சென்னையில் உள்ள தெருக்கள் மற்றும் பகுதிகளின் பெயர்கள் குறித்த சர்ச்சை நீண்டநாள்களாகவே தொடர்ந்து வருகிறது.
சர் பிட்டி தியாகராயாவின் நினைவாக தியாகராய நகர் என்று பெயர் சூட்டப்பட்டும்கூட அது பரவலாக தி.நகர் என்றும், கலைஞர் கருணாநிதி நகர் கே.கே. நகர் என்றும், ஜெ.ஜெயலலிதா நகர் ஜெ.ஜெ. நகர் என்றும்தான் அழைக்கப்படுகின்றன. அதேபோல பாரதிதாசன் சாலையை பி.டி. சாலை என்றழைக்கும் அவலம் காணப்படுகிறது. தெருக்களின் பெயர்கள் சுருக்கமாக அமையாமல் போனால் எதற்
காகப் பெயர் சூட்டப்படுகிறதோ அந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடுகிறது.
சென்னை பெருநகராட்சியில் காணப்படும் இன்னோர் அவலம் ஜாதிப் பெயர்களை அகற்றுகிறோம் என்று தெருக்களின் பெயர்கள் சிதைக்கப்படுவது. கோபதி நாராயணச் செட்டித் தெரு, ஜி.என். செட்டித் தெருவாக மாறி இப்பொழுது செட்டி என்ற ஜாதிப் பெயர் அகற்றப்பட்டு, வெறும் ஜி.என். தெருவாக மாறியிருக்கிறது. அதேபோல சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியான ஜஸ்டிஸ் சர் முத்துசாமி ஐயரின் பெயரில் அமைந்த சாலை இப்பொழுது வெறும் முத்துசாமி சாலை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. முத்துசாமி என்பவர் யார் என்று யாருக்கும் தெரியாது. எதற்காக ஆளுமைகளின் பெயர் சாலைகளுக்கு சூட்டப்படுகிறதோ அதன் அடிப்படை நோக்கமே அவர்களது பெயர்கள் சிதைக்கப்படும்போது தோற்கடிக்கப்படுகிறது.
புதிதாக அமைக்கப்படும் சாலைகளுக்கு ஜாதிப் பெயர்களைச் சூட்ட வேண்டாம் என்று முடிவெடுக்கலாமே தவிர, ஆளுமைகள் எந்தப் பெயரில் தங்களை அழைத்துக் கொண்டார்களோ அந்தப் பெயரில் சாலைகள் அழைக்கப்படுவதுதான் நியாயமாக இருக்கும். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு சாலையிலும் அந்தச் சாலையின் பெயர்க் காரணமும், ஆளுமைகளின் பெயரில் அமைந்திருந்தால் அவர்களது வரலாற்றுக் குறிப்புகளுடனான தகவல் பலகையும் அமைக்கப்பட வேண்டும். கடைசியாக ஓர் ஐயப்பாடு. சென்னைப் பெருநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இல்லாத நிலையில், சிறப்பு அலுவலர் குழுவுக்குத் தெருக்களின் பெயர்களை மாற்றும் அதிகாரம் உண்டா? அப்படியே இருந்தாலும், அதிகாரிகள் பெயர் மாற்றம் செய்வது தார்மீகமாக சரியானதுதானா?
பெயர் சூட்டுவதாலும் பெயர் மாற்றுவதாலும் மட்டுமே பெரிதாக எதையும் நாம் சாதித்துவிடப் போவதில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com