வரவேற்புக்குரிய மாற்றம்!

குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் முப்பவரப்பு

குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் முப்பவரப்பு வெங்கய்ய நாயுடு வெற்றி பெற்றிருக்கிறார். நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இருக்கும் எண்ணிக்கை பலத்தின் அடிப்படையில் இவரது வெற்றி முன்பே உறுதி செய்யப்பட்டதுதான். வியப்பு என்னவென்றால், எதிர்பார்த்ததைவிட 17 வாக்குகள் அதிகமாகப் பெற்று வெங்கய்ய நாயுடு குடியரசுத் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதுதான். கடந்த 25 ஆண்டுகளில் மிக அதிகமான வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் குடியரசுத் துணைத்தலைவர் என்கிற பெருமையும் வெங்கய்ய நாயுடுவுக்கு கிடைத்திருக்கிறது.
1952, 1957 தேர்தல்களில் டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணனும், 1979-இல் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முகமது ஹிதயத்துல்லாவும், 1987}இல் சங்கர் தயாள் சர்மாவும் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல இரண்டு முறை தொடர்ந்து குடியரசுத் துணைத்தலைவராக பதவி வகித்த பெருமை டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணனுக்கும், ஹமீது அன்சாரிக்கும் மட்டுமே உண்டு.
15-ஆவது குடியரசுத் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் வெங்கய்ய நாயுடுவின் அரசியல் அனுபவம் அவருக்கு மிகப்பெரிய பலம். இதற்கு முன்னால் குடியரசுத் துணைத்தலைவராக இருந்த பி.டி. ஜாட்டி, ஆர். வெங்கட்ராமன், சங்கர் தயாள் சர்மா, கே.ஆர். நாராயணன், கிருஷ்ண காந்த், பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோருக்கும் இவரைப்போலவே அரசியல் அனுபவம் இருந்திருக்கிறது.
குடியரசுத் தலைவர்போல் அல்லாமல், குடியரசுத் துணைத்தலைவருக்கு மாநிலங்களவையைத் தலைமை தாங்கி நடத்த வேண்டிய பொறுப்பும் இருப்பதால், அரசியல் பின்னணி என்பது மிகவும் அத்தியாவசியமாகிறது. அதிலும், இப்போது ஆட்சியிலிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாநிலங்களவையில் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், பிரச்னையில்லாமல் அவையை நடத்த அரசியல் அனுபவம் அவசியம் தேவை. இது தெரிந்துதான் பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் பதவிக்கு ராம்நாத் கோவிந்தையும், குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்கு வெங்கய்ய நாயுடுவையும் தேர்ந்தெடுத்தார் போலும்.
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் 1949-ஆம் ஆண்டு விவசாய குடும்பத்தில் பிறந்த வெங்கய்ய நாயுடுவின் அரசியல் பயணம் கல்லூரி நாட்களிலேயே தொடங்கிவிட்டது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் மூலம் அரசியலில் அடியெடுத்து வைத்த வெங்கய்ய நாயுடு, ஜனசங்கத்தின் உறுப்பினராக நெருக்கடி நிலைகாலத்தில் அன்றைய காங்கிரஸ் அரசின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடி சிறை சென்றவர். ஜனசங்கம், ஜனதா கட்சியுடன் இணைந்தபோதும் அதைத் தொடர்ந்து ஜனதா கட்சியில் பிளவு ஏற்பட்டு பா.ஜ.க. உருவானபோதும், வெங்கய்ய நாயுடு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தொடர்புகளை தக்கவைத்துக் கொண்டு, இயக்கம் சென்ற வழியிலேயே தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார்.
ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினராக இரண்டு முறையும், மாநிலங்களவை உறுப்பினராக நான்கு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் வெங்கய்ய நாயுடு, வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும், இப்போதைய நரேந்திர மோடி அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராகவும், தகவல் ஒலிபரப்பு மற்றும் வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை ஆகியவற்றின் அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவசாலி. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக வெங்கய்ய நாயுடு பதவி வகித்தபோது எதிர்க்கட்சி உறுப்பினர்களுடனும் தலைவர்களுடனும் அவர் ஏற்படுத்திக்கொண்ட நெருக்கமும் நட்புறவும் மாநிலங்களவையை வழிநடத்த அவருக்கு உறுதுணையாக இருக்கும்.
குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கோபாலகிருஷ்ண காந்திக்கு மிகப்பெரிய வம்சாவளி பின்னணி உண்டு என்பதில் சந்தேகமில்லை. தேசப்பிதா காந்தி, மூதறிஞர் ராஜாஜி ஆகியோரின் பேரன் என்பதை குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் ஒரு மிகப்பெரிய தகுதியாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. திறமையான வெளிவிவகாரத்துறை அதிகாரியாகவும் மேற்கு வங்க முன்னாள் ஆளுநராகவும் பணியாற்றியவர் என்பதுதான் கோபாலகிருஷ்ண காந்தியின் தனிச்சிறப்பு. குடியரசுத் தலைவருக்கான எல்லா தகுதிகளையும் பெற்ற கோபாலகிருஷ்ண காந்தியை, குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்குக் களம் இறக்கியது, எதிர்க்கட்சிகள் செய்த மிகப்பெரிய தவறு. ஒருமனதாக குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் தகுதிபெற்ற ஒருவர் குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்கான போட்டியில் தோல்வியைத் தழுவியிருப்பது மிகப்பெரிய உறுத்தல்.
குடியரசுத் துணைத்தலைவராகத் தென்னிந்தியர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி. சுதந்திர இந்தியாவில், ஆரம்பம் முதலே குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர் பதவிகளில் வடஇந்தியாவைச் சேர்ந்த ஒருவரும் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவரும் மாறிமாறிப் பதவி வகிப்பது என்கிற மரபு, 2007-இல் குடியரசுத் தலைவராக பிரதிபா பாட்டீலையும், குடியரசுத் துணைத்தலைவராக ஹமீது அன்சாரியையும் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தெர்ந்தெடுத்தபோது மீறப்பட்டது. முந்தைய தேர்தலில் பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ஹமீது அன்சாரியே குடியரசுத் துணைத்தலைவராக தொடர்ந்ததால் தென்னிந்தியாவுக்கு அதுவரை தரப்பட்ட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இப்போது அந்த நல்ல மரபு மீண்டும் நிலைநாட்டப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com