சேவையும் தேவையும்

அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அரசு தனது மிகப்பெரிய சாதனையாக தங்க நாற்கரச் சாலை திட்டம் மூலம் நெடுஞ்சாலை

அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அரசு தனது மிகப்பெரிய சாதனையாக தங்க நாற்கரச் சாலை திட்டம் மூலம் நெடுஞ்சாலை கட்டமைப்பை வலுப்படுத்தியது. இப்போதைய மோடி அரசு அதற்கு இணையாக ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்தப் போவதாகவும், சர்வதேச அளவில் உயர்த்தப் போவதாகவும் ஆட்சி அமைத்தவுடன் அறிவித்தது. புல்லட் ரயில்கள், ரயில் நிலையங்களின் மேம்பாடு, ரயில்வே சேவையின் தரம், தொழில்நுட்ப ரீதியிலான மாற்றங்கள், வலுப்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டது.
ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, ரயில்களில் வழங்கப்படும் உணவுகள் மற்றும் பயணிகளின் வசதிகளில் 'குறையே இல்லாத நிலை' என்கிற கொள்கையை அறிவித்திருக்கிறார். பயணிகளுக்கு வழங்கப்படும் உணவிலோ, சேவைகளிலோ குறைபாடுகள் இருப்பதை சகித்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார். பயணத்தை இனிமையாக்குவதுதான் ரயில்வே நிர்வாகத்தின் முனைப்பாக இருக்க வேண்டும் என்று ரயில்வே ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
தில்லியிலிருந்து ஆக்ராவுக்குச் செல்லும் கதிமேன் விரைவு ரயிலில் ரயில்வே பணிப்பெண்கள் ஒற்றை ரோஜா மலரைக் கொடுத்து வரவேற்பது, ரயில் பயணத்தின்போது உணவளித்து உபசரிப்பது என்று புதியதொரு அணுகுமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. விரைவிலேயே இதேபோன்ற அனுபவம் மும்பையிலிருந்து கோவாவுக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் தேஜஸ் விரைவு ரயில் பயணிகளுக்கும் ஏற்பட இருக்கிறது.
இவையெல்லாம் குளிர்சாதனப் பெட்டிகளில் பயணிக்கும் நடுத்தர, உயர் வகுப்பு பயணிகளுக்குத்தானே தவிர சாமானியர்களுக்கு அல்ல என்றாலும்கூட, ரயில்வே சேவையின் தரம் இப்படி உயர்த்தப்படுவதன் மூலம் விரைவிலேயே எல்லா பயணிகளுக்கும் ஓரளவுக்காவது வசதி மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம். வறுமைக்கோட்டிற்குக் கீழே ஏறத்தாழ 30 விழுக்காடுக்கு மேல் இந்தியர்கள் இருக்கும் நிலையில், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளின் வசதிகள் குறித்தும், குளிர்பதனம் செய்யப்படாத உறங்கும் வசதியுள்ள 2-ஆம் வகுப்பு பயணிகளின் வசதிகள் குறித்தும் அமைச்சர் சுரேஷ் பிரபு வருங்காலத்தில் அக்கறை காட்டுவார் என்றும் எதிர்பார்ப்போம்.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இந்திய ரயில்வேயின் உண்மை நடைமுறை நிலை என்ன என்பதை கணக்குத் தணிக்கை ஆணையர் (சி.ஏ.ஜி.) கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை வெளிச்சம்போட்டு காட்டுகிறது. அந்த அறிக்கையின்படி, மேலே குறிப்பிட்ட சர்வதேச அளவிலான வசதிகளுக்கும் நடைமுறை சேவைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் வெளிப்படுகிறது. அந்த அறிக்கையின்படி ரயில்களில் வழங்கப்படும் உணவுப் பொருள்கள் மனிதர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றவையாக இல்லை. முன்பதிவு செய்த பயணிகளுக்கு தரப்படும் விரிப்புகளும், போர்வைகளும் மாதக் கணக்கில் சலவை செய்யப்படுவதில்லை. 2016 ஜூலை முதல் அக்டோபர் வரையிலான தணிக்கையின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அந்த அறிக்கை பல அதிர்ச்சிகளைத் தருகிறது.
80 ரயில்களிலும், 74 ரயில் நிலையங்களிலும் கணக்குத் தணிக்கை ஆணையர் அலுவலக அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது, விற்பனைக்கு இருக்கும் உணவுப் பொருள்கள், எலிகள், பெருச்சாளிகள், ஈக்கள் ஆகியவற்றால் தங்குதடையில்லாமல் பதம் பார்க்கப்படுகின்றன என்பது தெரிய வந்திருக்கிறது. ரயில்களில் வழங்கப்படும் உணவுப் பொருள்கள் அடிப்படை சுகாதார தரத்திலானவையல்ல என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது.
ரயில் பயணத்தின்போது விற்கப்படாத உணவுப் பொருள்கள் ரயில் நிலையங்களில் உள்ள சமையல் அறைகளில் மீண்டும் சூடுபடுத்தப்பட்டு நடைமேடைகளில் விற்கப்படுகின்றன. ரயில்நிலைய சமையல் அறைகளில் உணவுப் பொருள்கள் பாதுகாப்பாக வைக்கப்படாமல் பூச்சி, ஈ, தூசு ஆகியவற்றுக்கு இலக்காகின்றன. எலிகளும், பெருச்சாளிகளும், கரப்பான் பூச்சிகளும், மூட்டைப்பூச்சிகளும் பரவலாக ரயில் பெட்டிகளில் காணப்படுவதாக சோதனையில் கண்டறியப்பட்டிருக்கிறது.
விதிகளின்படி பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் ஒவ்வொரு முறை உபயோகத்திற்குப் பிறகும் அடுத்த பயணத்திற்கு முன்னால் வெள்ளாவியில் வைத்து வெளுக்கப்பட வேண்டும். அதேபோல, கம்பளிப் போர்வைகள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை உலர் சலவை மூலம் வெளுக்கப்பட வேண்டும். இந்த விதி கடைப்பிடிக்கப்படுவதே இல்லை. கணக்கு தணிக்கை ஆணையர் அலுவலக அதிகாரிகள் 9 ரயில்வே மண்டலங்களில் உள்ள 14 தேர்ந்தெடுத்த கிடங்குகளில் சோதனையிட்டபோது கம்பளிப் போர்வைகள் மாதக்கணக்காக உலர் சலவை செய்யப்படுவதில்லை என்பதும் போர்வைகள் மாதத்திற்கு ஒருமுறைதான் வெளுக்கப்படுகின்றன என்பதும் தெரியவந்தது.
உணவு வழங்கும் சேவைக் கொள்கையில் அடிக்கடி ஏற்படுத்தப்படும் மாற்றங்களே இதுபோன்ற அக்கறையின்மைக்கும் பொறுப்பின்மைக்கும் முக்கிய காரணம் என்கிறது அந்த அறிக்கை. எல்லாவித சேவைகளுக்கும் பணம் கொடுக்கும் பயணிகளுக்கு தரமான சேவை தரப்படாமல் இருப்பது மிகப்பெரிய அநீதி. இதற்கு காரணமானவர்களைக் கேள்வி கேட்டுத் தண்டிக்காதவரை, ரயில்வே அமைச்சர் எடுக்கும் எந்த முயற்சியும் வெற்றி பெறாது. ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு உயர்வகுப்பு பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவது போலவே சாமானியர்களுக்குத் தரப்படும் அடிப்படை வசதிகள் குறித்தும் கவலைப்பட்டால் நல்லது.
இந்தியாவின் தேவை ஒளிரும் ரயில்வே அல்ல; குறைந்த கட்டணத்தில் ஒழுங்கான, பாதுகாப்பான, சுத்தமான, அதிகரித்த ரயில்வே சேவையே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com