கடிவாளம்!

அஸ்ஸாம் சட்டப்பேரவை நிறைவேற்றி இருக்கும் சட்டமொன்றை

அஸ்ஸாம் சட்டப்பேரவை நிறைவேற்றி இருக்கும் சட்டமொன்றை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்து ரத்து செய்திருக்கிறது. நாடாளுமன்றச் செயலாளர்களை முதல்வர் நியமித்துக் கொள்வதற்கும், அமைச்சர்களுக்குத் தரப்படும் சம்பளம், சலுகைகள் அனைத்தும் அவர்களுக்கும் வழங்கப்படுவதற்கும் அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவை இயற்றியிருந்த சட்டம் அதிகாரம் வழங்கியிருந்தது. அப்படி நியமிக்கப்படும் நாடாளுமன்றச் செயலாளர்களுக்கு எந்தவித பொறுப்பும் வழங்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அந்தச் சட்டம் வழிவகுத்திருந்தது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது அதில் பிரதமர் அல்லது முதல்வர் தலைமையில் அமைச்சரவை அமைக்கப்பட வேண்டும் என்று மட்டும்தான் குறிப்பிடப்பட்டிருந்ததே தவிர, அமைச்சரவையில் இத்தனை உறுப்பினர்கள்தான் இருக்க வேண்டும் என்கிற வரம்பு விதிக்கப்படவில்லை. தமிழகத்திலேயே எடுத்துக்கொண்டால்கூட, 1967-இல் அண்ணா தலைமையிலான அமைச்சரவை வரையிலும் முதல்வர் உள்பட ஒன்பது அமைச்சர்கள் மட்டுமே இருந்தனர். பெரும்பாலான மாநிலங்களிலும் இதேபோல குறைந்த அளவிலான அமைச்சர்கள்தான் அமைச்சரவையில் இடம் பெற்றனர்.
சுதந்திர இந்தியாவில் அமைந்த முதல் மத்திய அமைச்சரவையில் பிரதமர் ஜவாஹர்லால் நேரு உட்பட 15 பேர்தான் இருந்தனர். 1972-இல்தான் அமைச்சர்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்தது. 1989-இல் வி.பி. சிங் தலைமையில் முதலாவது கூட்டணி அமைச்சரவை அமைந்தது முதல் எல்லா தரப்பினரையும் திருப்திப்படுத்துவதற்காக, அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அவலம் ஏற்பட்டது. 2004-இல் அரசியல் சாசன சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதற்கு கூட்டணி அரசுகள் ஒரு முக்கியமான காரணம். 2004-இல் நிறைவேற்றப்பட்ட 91-ஆவது அரசியல் சட்டத் திருத்தம்தான் முதன் முதலில், அமைச்சரவையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருக்கக்கூடாது என்கிற வரம்பை விதித்தது. ஆளுங்கட்சி உறுப்பினர்களின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ள பெரும்பாலான முதல்வர்கள் தங்கள் மனம்போன போக்கில் சலுகைகள் வழங்குவதை இந்த அரசியல் சாசன சட்டப்பிரிவு தடுக்கிறது.
இந்தச் சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்குக் காரணம், அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதுதான். ஒரு கட்டத்தில் சில மாநிலங்களில் ஏறத்தாழ 60 சதவீத ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அமைச்சர்களாகவும் துணை அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டது ஊடகங்களில் கண்டனத்தையும் பொதுமக்களின் அதிருப்தியையும் எதிர்கொள்ள நேர்ந்தது.
அமைச்சர்களின் எண்ணிக்கைக்கு வரம்பு விதிக்கப்பட்டவுடன் நாடாளுமன்றச் செயலாளர்களை நியமிக்கும் உத்தியை முதல்வர்கள் கையாளத் தொடங்கினர். அரசியல் சட்டம் விதித்திருக்கும் கட்டுப்பாட்டை முதல்வர்கள் மீறுவது நீதிமன்றங்களின் அதிருப்தியை எதிர்கொண்டது. கொல்கத்தா உயர்நீதிமன்றம், மும்பை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட பல உயர்நீதிமன்றங்கள் நாடாளுமன்றச் செயலாளர்களை நியமிக்கும் முறையை நிராகரித்திருக்கின்றன. நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டும்கூட சில மாநிலங்களில் நாடாளுமன்றச் செயலாளர்களை நியமிக்கும் போக்கு தொடர்ந்து வந்தது.
அமைச்சர்களின் எண்ணிக்கைக்கு வரம்பு விதிப்பதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் கூறப்படுகின்றன. அமைச்சரவையின் செயல்திறனை உறுதிப்படுத்த குறைந்த அளவில் அமைச்சர்கள் இருப்பதுதான் சரி என்பதும், அதிக எண்ணிக்கையில் அமைச்சர்களை நியமிப்பதால் தேவையில்லாமல் மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படக் கூடாது என்பதும்தான் அக்காரணங்கள்.
தனிப்பட்ட காரணங்களாலும் அரசியல் நிர்பந்தங்களாலும் முதல்வர்கள் முடிந்த அளவுக்கு சட்டப்பேரவை உறுப்பினர்களை அமைச்சர்களாக்க முற்படுவது வழக்கமாகிவிட்டிருக்கிறது. ஆளுங்கட்சியின் பெரும்பான்மையை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும், அதிருப்தி உறுப்பினர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவும் முதல்வர்கள் அமைச்சர் பதவியை பயன்படுத்தலானார்கள். எதிர்க்கட்சிகளால் தங்களின் பெரும்பான்மை பாதிக்கப்படும்போதும் எதிர்க்கட்சியிலுள்ள உறுப்பினர்களை ஆளுங்கட்சிக்கு இழுப்பதற்காகவும்கூட அமைச்சர் பதவி என்கிற ஆசை காட்டப்படுகிறது.
நாடாளுமன்றச் செயலாளர்களுக்கு என்று எந்தவிதமான குறிப்பிட்ட வேலையோ கடமையோ கிடையாது. நாகாலாந்தில் சமீபத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முதல்வர் டி.ஆர். ஜெலியாங் 29 நாடாளுமன்றச் செயலாளர்களையும் ஒன்பது ஆலோசகர்களையும் நியமித்தார். இப்போது முதல்வரை ஆதரிக்கும் 47 உறுப்பினர்களும் அமைச்சர்களாகவும் நாடாளுமன்றச் செயலாளர்களாகவும் ஆலோசகர்களாகவும் இருக்கிறார்கள். உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு இதுபோன்ற செயல்பாடுகள் தடுக்கப்படும். சட்டப்பேரவைகளுக்கு அரசியல் சாசன வரம்பை மீறி புதிதாக எந்த பதவியையும் உருவாக்கும் அதிகாரம் கிடையாது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
மக்கள்தொகை பெருக்கமும், மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருப்பதும் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்பதற்கான வாதங்கள். அதே நேரத்தில் அளவுக்கதிகமான துறைகளும் அமைச்சர்களும் இருப்பதால் நிர்வாகம் மேம்படும் என்பது உண்மையல்ல. உச்சநீதிமன்றமே இந்த பிரச்னையில் முடிவெடுத்திருப்பதன் மூலம் நாடாளுமன்றச் செயலாளர்களை முதல்வர்கள் நியமித்துக் கொள்ளும் நடைமுறைக்குக் கடிவாளம் போடப்பட்டிருக்கிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com