ஆணையத்துக்கு நன்றி!

குஜராத் மாநிலத்தின் மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள்

குஜராத் மாநிலத்தின் மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையம் எந்த அளவுக்கு நடுநிலையாக செயல்படுகிறது என்பதையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் எந்த அளவுக்குப் பொறுப்பின்மையுடன் செயல்படுகிறார்கள் என்பதையும் வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது. கட்சி மாறி வாக்களிப்பது, வாக்களிக்காமல் இருப்பது என்பதையெல்லாம்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒருவர் தவறாக வாக்களிப்பது முறைதவறி நடந்துகொள்வது என்பவை மக்கள் அவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு இழைக்கும் துரோகம்.
குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு மூன்று உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருந்தனர். பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவும், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியும், பா.ஜ.க.வின் எண்ணிக்கை பலத்தின் அடிப்படையில் முதல் சுற்றிலேயே வெற்றி அடைந்துவிட்டனர். எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு இருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர் பலத்தின் அடிப்படையில் அந்தக் கட்சியின் வேட்பாளர் அகமது படேலும், முதல் சுற்றிலேயே வெற்றி அடையத் தகுதி பெற்றவராகத்தான் இருந்தார். காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட குழப்பமும், அதை பயன்படுத்தி அகமது படேலை எப்படியும் தோற்கடித்தே ஆக வேண்டும் என்பதில் பா.ஜ.க. காட்டிய முனைப்பும்தான் அவரது தேர்தலைப் பிரச்னைக்கு உள்ளாக்கின.
குஜராத் சட்டப்பேரவையில் 57 உறுப்பினர்களைக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் எண்ணிக்கை பலம் 43-ஆக குறைந்துவிட்டிருக்கிறது. காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் பா.ஜ.க.வில் இணைவதற்காக பதவி விலகினர். காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவராக இருந்த சங்கர் சிங் வகேலா உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலர் காங்கிரஸில் இருந்து விலகியிருக்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் குஜராத் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் அந்தக் கட்சியின் தேர்தல் வெற்றி வாய்ப்பையே குலைத்துவிட முடியும் என்று ஆளும் பா.ஜ.க. கருதுகிறது.
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த அகமது படேல் அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர். காங்கிரஸ் கட்சிக்கு நிதி திரட்டுவதில் சமர்த்தர் என்று அறியப்படுபவர். பல ஆண்டுகளாக தொடர்ந்து மக்களவை அல்லது மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்து வருபவர்.
விரைவில் குஜராத் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமான அகமது படேலை தோற்கடிப்பது காங்கிரஸ் கட்சியை மானசீகமாக பலவீனப்படுத்தும் என்று பா.ஜ.க. தலைமை முடிவெடுத்தது. காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலர் ஒருவர்பின் ஒருவராக பதவி விலகி பா.ஜ.கவில் இணைய முற்பட்டனர். அப்படி இணைய முற்பட்டவர்களில் ஒருவர் அகமது படேலுக்கு எதிராக பா.ஜ.க. சார்பில் களமிறக்கப்பட்டார்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆளும் பா.ஜ.க.வால் ஈர்க்கப்படுவதைப் பார்த்த காங்கிரஸ் தலைமைக்கு அச்சம் ஏற்பட்டது. 44 சட்டப்பேரவை உறுப்பினர்களை, காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் கர்நாடக மாநிலத்துக்கு அழைத்துச் சென்று அவர்களை நட்சத்திர விடுதியில் தங்க வைத்து பாதுகாக்க முற்பட்டது கட்சித் தலைமை. இதற்கு முன்னால் இதுபோல சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாற்றுக் கட்சியினரால் விலைபேசப்படாமலும், மிரட்டப்படாமலும், ஆசைவார்த்தை காட்டப்படாமலும் இருப்பதற்காக பாதுகாப்பாக வைக்கப்பட்ட நிகழ்வுகள் பல உண்டு.
எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவுக்கும் கோவாவுக்கும் அழைத்துச் செல்லப்பட்டதும், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சென்னை கூவத்தூரில் உள்ள ஒரு விடுதியில் தங்கவைக்கப்பட்டதும் மட்டுமல்லாமல், பல்வேறு மாநிலங்களில்கூட இதுபோல தங்கள் கட்சி உறுப்பினர்கள் கடத்தப்படாமலும் பிற கட்சியால் கவரப்படாமலும் இருப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்ட வரலாறு உண்டு.
பெங்களூருவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 44 உறுப்பினர்களும் மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவிக்கு விசுவாசமாக அகமது படேலுக்கு வாக்களித்தனர். ஆனால், பா.ஜ.க.வுக்கு மாற்றி வாக்களித்த காங்கிரஸ் உறுப்பினர்களில் இரண்டு பேர் தங்களது வாக்களிப்பை ரகசியமாக வைத்திருக்காமல் வெளிப்படுத்திவிட்டனர். கடந்த ஆண்டு ஹரியாணாவில் இதேபோல் ரகசியம் மீறப்பட்டதால் வாக்குகள் ரத்து செய்யப்பட்டது போலவே இந்தத் தேர்தலிலும் அந்த இருவரின் வாக்குகளும் ரத்து செய்யப்பட்டன. அதன்விளைவாக, முதல் சுற்றில் வெற்றி பெறுவதற்கான குறைந்தபட்ச வாக்குகள் 45 என்பதிலிருந்து 44-ஆக குறைந்து அகமது படேல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இந்தத் தேர்தலை இந்த அளவுக்கு பா.ஜ.க. கெளரவப் பிரச்னையாக எடுத்துக்கொண்டு அகமது படேலை தோற்கடித்தே தீர வேண்டும் என்கிற வெறியுடன் களமிறங்கிய செயல் அந்தக் கட்சிக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. காங்கிரஸ் தலைமை பலவீனப்பட்டுக் கொண்டு இருப்பதைத்தான் குஜராத் நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.
இந்தியத் தேர்தல் ஆணையம் எந்தவிதச் சார்பும் இல்லாமல் நடுநிலையாக முடிவெடுத்தது என்பதுதான் பாராட்டுக்குரிய விஷயம். நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையும் அரசியல் கட்சிகளையும்விட தேர்தல் ஆணையத்தால்தான் இந்திய ஜனநாயகம் தடம் புரளாமல் காப்பாற்றப்படுகிறது என்பதை குஜராத் மாநிலங்களவைத் தேர்தல் முடிவு உறுதிப்படுத்தியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com