எட்டவில்லை இலக்கை..!

சுதந்திர இந்தியா 71-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற நாள் இது.

சுதந்திர இந்தியா 71-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற நாள் இது. 70 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் நள்ளிரவுக்கு முன் பண்டித ஜவாஹர்லால் நேரு இந்திய அரசியல் நிர்ணய சபையில் நிகழ்த்திய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த உரை நினைவுக்கு வருகிறது. விதியுடனான இந்தியாவின் போராட்டம் குறித்த அவரது பதிவு மீண்டும் மீண்டும் பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் மேற்கோளாகக் குறிப்பிடப்பட்டும் தொடர்கிறது.
அந்த முதல் சுதந்திர நாள் உரையில், பண்டித ஜவாஹர்லால் நேரு இந்தியாவுக்கு நிர்ணயித்திருந்த இலக்குகளை நாம் 70 ஆண்டுகள் கடந்தும்கூட முழுமையாக இல்லாவிட்டாலும் பாதியளவுக்குக்கூட எட்டவில்லை என்பதுதான் உண்மை. வறுமைக்கு முற்றுப்புள்ளி வைப்பது, அறியாமையை அகற்றுவது, பிணியின் பிடியிலிருந்து அனைவரையும் பாதுகாப்பது, அனைவருக்கும் சமச்சீரான வாய்ப்புகளை ஏற்படுத்துவது என்கிற இலக்குகளை இன்னும் நாம் எட்டியபாடில்லை.
பண்டித நேருவின் அந்த உரை இன்று வரை இந்த தேசத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. அன்றுமுதல் இன்றுவரை கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவின் எல்லா குடியரசுத் தலைவர்களும், எல்லா பிரதமர்களும் பண்டித ஜவாஹர்லால் நேரு நிகழ்த்திய அந்த உரையின் கருத்துகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்திருக்கிறார்கள் என்பதிலிருந்தே அடைய வேண்டிய இலக்கு கானல் நீர் போலத் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது என்பது தெளிவு.
விடுதலைக்கு முன்பு, 20-ஆம் நூற்றாண்டின் முதல் ஐம்பது ஆண்டு காலத்தில் இந்திய பொருளாதாரம் தேங்கிக் கிடந்தது. பரவலாக வறுமை காணப்பட்டது. இந்தியாவின் மொத்த உற்பத்தி (ஜி.டி.பி.) வளர்ச்சி பூஜ்ஜியமாகவும் அதற்கு கீழேயும் இருந்த நிலை. அந்நியர்களின் ஆட்சியில் இந்தியா ஒட்டுமொத்தமாக சுரண்டப்பட்டு விட்டிருந்தது. 70 ஆண்டுகளுக்கு முன்னால் கிடைத்த விடுதலை, சோம்பிக் கிடந்த இந்திய பொருளாதாரத்தைத் தட்டியெழுப்ப முற்பட்டது என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.
அடுத்த 17 ஆண்டுகள் பண்டித நேருவின் ஆட்சியிலும் அதற்குப் பிறகும் சோஷலிச பாணியிலான திட்டமிடலில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஆமை வேகத்தில்தான் இருந்தது என்கிற குற்றச்சாட்டு உண்மையே. அதேநேரத்தில் இந்தியாவுக்கு பலமான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்துவது என்றும், கல்வி, சுகாதாரம், சாலைகள் என்று அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது என்றும் செயல்படும்போது அசுர வேகப் பொருளாதார வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை நாம் உணர வேண்டும். இந்தியாவின் மக்கள்தொகைப் பெருக்கமும் ஒரு காரணம் என்பதால் நமது வாழ்க்கைத் தரமும் உயராமல் இருந்தது.
44 ஆண்டுகள் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை அடையாவிட்டாலும் இந்தியப் பொருளாதாரம் வலுவான அடிப்படையுடன் அமைக்கப்பட்டது என்பதுதான் உண்மை. அந்த அடிப்படைக் கட்டமைப்பு இருந்ததால்தான் 1991-இல் பொருளாதாரச் சீர்திருத்தமும் தாராளமயமாக்கல் கொள்கையும் அன்றைய நரசிம்ம ராவ் அரசால் கொண்டு வரப்பட்டபோது அவை பயன் அளிக்கத் தொடங்கின. திடீர் பொருளாதாரச் செழிப்பு ஏற்பட்டதற்கு அதுதான் காரணம். புதிய பொருளாதார கொள்கையின் விளைவாக கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கூடியது என்பது உண்மையாக இருந்தாலும்கூட அது நடுத்தர வர்க்கத்திலும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களிலும்கூட குறிப்பிடத்தக்க அளவு பொருளாதார மேம்பாட்டை அளிக்கவும் தவறவில்லை.
இப்போது இந்தியர்கள் முன்னெப்பதும் இல்லாத அளவுக்கு சர்வதேச அளவில் தொடர்புடையவர்களாக மாறிவிட்டிருக்கிறார்கள். ஒருகாலத்தில் தொலைபேசி இணைப்புக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருந்த காலம் போய் இப்போது நூறு கோடிக்கும் அதிகமான செல்லிடப்பேசி இணைப்புகள் இந்தியாவில் இருக்கும் நிலை. கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே இருந்த தொலைபேசி வசதி இப்போது சாதாரணக் கூலித்தொழிலாளிக்கும்கூட செல்லிடப்பேசி மூலம் ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவில் உள்ள குடும்பங்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டிகள் இருக்கின்றன. சாமானியர்களும்கூட விமானங்களில் பயணிப்பதும் ரயிலில் குளிர்பதனப் பெட்டிகளில் பயணிப்பதும் வளர்ச்சியின் அடையாளமோ இல்லையோ நிச்சயமாக பணப்புழக்கத்தின் அடையாளம்தான்.
ஒருபுறம் அசுர வளர்ச்சி ஏற்பட்டிருக்கும்போது இன்னொருபுறம் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்களின் நிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லை. அவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்று அரசின் புள்ளிவிவரம் கூறினாலும்கூட இன்னமும் தெருவோரங்களில் தூங்குவோரும், எந்தவித சுகாதார வசதியும் இல்லாமல் குடிசைகளில் குடியிருப்பவர்களும் அதிகரித்து வருகிறார்களே தவிர, குறைந்ததாகத் தெரியவில்லை.
சமச்சீரான வளர்ச்சி, அனைவருக்குமான வளர்ச்சி, தரமான கல்வி, சுகாதாரம், குடிதண்ணீர் ஆகியவை இன்னும் இந்தியாவில் பலருக்கும் எட்டாக்கனியாகத்தான் தொடர்ந்து வருகிறது. இன்னும் எத்தனை நாள்தான் பண்டித ஜவாஹர்லால் நேரு 70 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட கனவைப் போலவே நாமும் கனவு கண்டு கொண்டிருக்கப் போகிறோம்?
அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவைகள் உறுதிப்படுத்தப்படுவதுதான் சுதந்திர இந்தியாவின் இலக்காக இருக்க வேண்டுமே தவிர, உலகத் தரத்திலான வசதிகளை ஒரு சில பேருக்கு மட்டுமே வழங்குவதாக இருத்தல் கூடாது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்ததுபோல மக்களும் அரசும் அந்த இலக்கை நோக்கி நகர்வதற்குத் தயாராக வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com