அணுகுமுறை சரியல்ல!

கடந்த புதன்கிழமை இந்தியாவின் 15 முக்கிய நகரங்களில் விஞ்ஞானிகள்

கடந்த புதன்கிழமை இந்தியாவின் 15 முக்கிய நகரங்களில் விஞ்ஞானிகள், மாணவர்கள், கல்வியாளர்கள், அறிவியல் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் அறிவியல் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேரணி நடத்தினர். சில நகரங்களில் ஊர்வலத்துடன் நிறுத்திக்கொண்டனர். இவர்களது கோரிக்கைகள் எந்த அளவுக்கு அரசால் ஏற்கப்படும் என்று தெரியவில்லை. ஊடகங்களும் இதுகுறித்து முக்கியத்துவம் அளிக்கவில்லை.
அரசமைப்புச் சட்டப்பிரிவு 51-இன்படி, அறிவியல் வளர்ச்சிக்கும் ஆராய்ச்சிக்கும் ஊக்கமளிக்க வேண்டியது அரசின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாக கூறப்பட்டிருக்கிறது. அறிவியல் வளர்ச்சிக்கும் கல்விக்கும் கணிசமான தொகை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. தேசத்தின் வளர்ச்சிக்கும் நன்மைக்கும் அறிவியல் வளர்ச்சி இன்றியமையாதது என்பதை அரசு ஒப்புக்கொண்டாலும்கூட, அரசியல் குறிக்கோள்களோ தலையீடுகளோ இல்லாத அறிவியல் ஆய்வுகளுக்கு தேவையான வெளிப்படைச் சூழலை ஏற்படுத்தித் தருவதற்கு, கவனம் செலுத்துவதற்கு நமது ஆட்சியாளர்கள் தயாராக இல்லை.
அறிவியல் துறையில் ஏற்பட்டிருக்கும் அதிருப்திக்குக் காரணம், கடந்த ஆண்டில் நடந்த இரண்டு நிகழ்வுகள். முதலாவது, திருப்பதியில் நடந்த அறிவியல் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் தொடக்க உரை. அந்த உரையில் அவர் அறிவியலும் தொழில்நுட்பமும் உடனடி வளர்ச்சிக்கு தேவைக்கு ஏற்ப மாற வேண்டும் என்கிற கருத்தை முன்வைத்தார். கூட்டாண்மை நிறுவனங்களின் சமூக நலநிதி (கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபில் பண்ட்) அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்கிற கருத்தையும் அவர் முன்வைத்தார். அதாவது, அறிவியல் ஆய்வுகள் தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், உடனடியாக பயன்படாத அறிவியல் கண்டுபிடிப்புகள் தேவையற்றவை என்றும் மறைமுகமாக அவர் தெரிவித்தார்.
இரண்டாவது நிகழ்வு, டேராடூனில் 'சிந்தன் ஷிவிர்' என்கிற அறிவியலாளர்களின் சிந்தனைச் சங்கமம் ஒன்று கூடியது. அதில் அவர்கள் ஒரு தீர்மானமும் நிறைவேற்றினார்கள். அந்த தீர்மானத்தின்படி ஆராய்ச்சிகளுக்கான பரிசோதனைக் கூடங்கள் வளர்ச்சியை முன்னிறுத்தியதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆராய்ச்சிக் கூடங்கள் தங்களது தேவைக்கான நிதியை தாங்களே திரட்டிக்கொள்ள வேண்டும் என்றும் தங்களது கண்டுபிடிப்புகளை பெரிய நிறுவனங்களுக்கு அளிப்பதன் மூலம் லாபம் சம்பாதிக்கும் அமைப்புகளாக மாற வேண்டும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது.
மத்திய அரசு அறிவியல் ஆராய்ச்சிகளுக்காகவும், அறிவியல் ஆய்வுகளுக்காகவும், தொழில் ஆராய்ச்சிகளுக்காகவும் பல அமைப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த அமைப்புகளின் சார்பில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஆராய்ச்சிக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் பலர் ஆய்வு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் மத்தியஅரசு நிதியுதவி வழங்கிவருகிறது. மத்திய அரசால் நிதியுதவி வழங்கப்படும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகத்துக்கு (சி.எஸ்.ஐ.ஆர்.) ஒதுக்கப்படும் நிதியுதவி பாதியாகக் குறைக்கப்பட்டு மறுபாதிக்கான நிதியுதவியைத் திரட்டிக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஆராய்ச்சிக்கூடங்கள் தங்களது ஆராய்ச்சி எந்த அளவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பொருளாதார சமுதாய இலக்குகளை அடைய பயன்படுகிறது என்பது குறித்த அறிக்கைகளை அவ்வப்போது அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இவையெல்லாம் அறிவியல் துறை எப்படி செயல்படுகிறது என்பது குறித்த புரிதல் இல்லாமல் இருப்பதைத்தான் வெளிப்படுத்துகின்றன. அறிவியல் ஆராய்ச்சியில் என்னவெல்லாம் செய்ய முடியும், எப்போது செய்ய முடியும், அதன் பயன்கள் என்னவாக இருக்கும் என்பவற்றை எல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டு காலவரைமுறையும் செய்து முடிப்பது என்பது சாத்தியமே அல்ல. அறிவியல் ஆய்வுகள் என்பவை தொடர்ந்து செய்யப்பட்டுக் கொண்டிருப்பவை. அந்த பயிற்சிக்கூடங்களில் நடைபெறும் ஆராய்ச்சிகள் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத முடிவுகளைத் தரக்கூடும். பள்ளி மாணவர்களுக்குத் தரப்படும் மதிப்பெண் அறிக்கைகளைப்போல ஆராய்ச்சியாளர்களுக்கு அவர்களது ஆய்வுகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கைகளை வழங்குவது சாத்தியமல்ல.
இன்று இஸ்ரோ, சந்திரயான் விண்வெளிக்கலங்களை வெற்றிகரமாக செயல்படுத்த முடிகிறது என்றால் அதற்கான விதை ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன்பு போடப்பட்டதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ராக்கெட்டுகளுக்கான பாகங்களை தும்பா ஏவுகணை நிலையத்துக்கு ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் உள்ளிட்ட விஞ்ஞானிகள் சைக்கிளில் எடுத்துச்சென்ற காலம் எல்லாம்கூட உண்டு. அப்போதெல்லாம் இந்தியாவின் நிதியாதாரம் கணிசமாக இல்லாமல் இருந்தும்கூட அறிவியல் ஆராய்ச்சிக்காக நிதி ஒதுக்கி ஆய்வுகளை நாம் ஊக்குவித்திருக்கிறோம். இப்போது நிலைமை அப்படியல்ல. ஆனாலும், ஆய்வுகளுக்கு நிதி ஒதுக்குவதற்கு இப்போது அரசு தயக்கம் காட்டுவது ஏன் என்பது புரியவில்லை.
ஆராய்ச்சிக்கூடங்கள் தாங்களே நிதி ஆதாரத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் அவை தொழில்துறைகளின் கைப்பாவைகளாக மாறி அவற்றின் வணிக வளர்ச்சிக்கேற்ற ஆய்வுகளில்தான் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள முடியும். அப்போது அடிப்படை அறிவியல் ஆய்வுகள் இந்தியாவில் நடைபெறாமல் போய்விடும். சர் சி.வி. ராமனைப் போல இந்தியர் ஒருவர் இந்தியாவிலேயே அறிவியல் ஆய்வின் மூலம் புதியதொரு கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெறுவது என்பதற்கு முற்றுப்புள்ளி விழுந்துவிடும். அரசின் இந்த அணுகுமுறை சரியல்ல!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com