அரசுதான் குற்றவாளி!

நமது மத்திய - மாநில அரசுகள் சுகாதாரம் குறித்து எந்த அளவு

நமது மத்திய - மாநில அரசுகள் சுகாதாரம் குறித்து எந்த அளவு அக்கறை செலுத்துகின்றன என்பதை உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரிலும், தமிழகத்தில் ஆம்பூரிலும் நடந்தேறிய சம்பவங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. தனியார் மருத்துவமனைகள் அதிகரிக்கத் தொடங்கியது முதல், அரசு மருத்துவமனைகள் மீது அக்கறை செலுத்துவதை ஆட்சியாளர்கள் அறவே விட்டுவிட்டனர் என்பதைத்தான் இந்தச் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் இருவர் மரணமடைந்திருக்கிறார்கள். மருத்துவர்கள் இருக்கவில்லை என்பது மட்டுமல்ல, அந்த அரசு மருத்துவமனைப் பணியாளர்கள் செயல்பட்ட விதம் அதைவிடக் கண்டனத்துக்குரியது. ஆம்பூரில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும், ஏன் ஒட்டுமொத்த இந்தியாவிலும் அரசு மருத்துவமனைகளும் மருத்துவர்களும் இப்படித்தான் செயல்படுகிறார்களோ என்கிற அச்சத்தை இது ஏற்படுத்துகிறது.
ஆம்பூர் சம்பவத்துக்குத் தனிப்பட்ட மருத்துவர்கள், ஊழியர்களின் தவறுதான் காரணம் என்றால், உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் பாபா ராகவதாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்தேறிய சம்பவத்துக்கு உத்தரப் பிரதேச மாநில அரசுதான் காரணம். ஒருவார இடைவெளியில் கோரக்பூர் மருத்துவமனையில் எழுபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்திருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம், மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் உயிர்வாயுவை அளிக்கும் ஆக்சிஜன் உருளைகளுக்குத் தட்டுப்பாடு இருந்ததுதான்.
ஆக்சிஜன் உருளைத் தட்டுப்பாடு எதுவும் இருக்கவில்லை என்பது உண்மையானால் உத்தரப் பிரதேச அரசு குழந்தைகள் நலப் பிரிவிற்கு தலைவரான மருத்துவர் கஃபீல் அகமத்கானை பணியிடை நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? ஆக்சிஜன் உருளைக்கான தட்டுப்பாடு இருந்தது என்றாலும், குழந்தைகளின் மரணத்துக்கு அதுவல்ல காரணம் என்று சப்பைக்கட்டுக் கட்டுகிறது உத்தரப் பிரதேச அரசு.
எழுபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் - அதில் பெரும்பாலானவை பிறந்து சில வாரங்களேயான சிசுக்கள் - ஒன்றன்பின் ஒன்றாக மரணமடையத் தொடங்கியபோதே மருத்துவமனை அதிகாரிகள் விழித்துக் கொண்டிருக்க வேண்டும். மருத்துவமனைக்கு ஆக்சிஜன் உருளைகள் வழங்கி வந்த நிறுவனத்திற்கு ரூ.68 லட்சத்துக்கும் அதிகமான தொகை பல மாதங்களாகத் தரப்படாததால், அவர்கள் உருளைகள் வழங்குவதை நிறுத்திவிட்டனர். பெரும்பாலான குழந்தைகள் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்குத் தொடர்ந்து ஆக்சிஜன் தரப்பட்டாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதற்கு மருத்துவமனையில் வழியில்லாததால் அந்தக் குழந்தைகள் மரணமடைந்திருக்கின்றன.
மருத்துவமனை ஊழியர்களே ஆக்சிஜன் உருளைகள் இல்லாத குறைபாட்டை எடுத்துரைத்திருக்கிறார்கள். அதற்காக நிர்வாகத்துடன் போராடியிருக்கிறார்கள். அப்படி இருந்தும் நிர்வாகம் மெத்தனமாக இருந்திருக்கிறது. கணக்குத் தணிக்கை அதிகாரியின் கடந்த ஜூன் மாத அறிக்கையில், பாபா ராகவதாஸ் மருத்துவமனையில் இந்திய மருத்துவ கவுன்சிலால் பரிந்துரைக்கப்பட்ட அளவிலான மருத்துவக் கருவிகள் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
கிழக்கு உத்தரப் பிரதேச மாவட்டங்களில் நுரையீரல் தொற்றால் குழந்தைகள் மரணம் அடைவது என்பது புதிதொன்றும் அல்ல. 1978 முதல் இதுவரை 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர், அதில் பெரும்பாலும் குழந்தைகள் இந்த நோய்த் தொற்றால் மரணமடைந்திருக்கிறார்கள். இந்த நுரையீரல் நோய்த் தொற்று பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்குக் கொசுக்களால் பரவுகிறது. காய்ச்சலும் தலைவலியுமாகத் தொடங்கி, காய்ச்சல் அதிகரித்து 'பக்கவாதம்', 'கோமா' நிலை என்று உயிருக்கே ஆபத்தாக முடிகிறது.
கோரக்பூர், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதி. கடந்த இருபது ஆண்டுகளாக கோரக்பூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக யோகி ஆதித்யநாத் இருந்தும்கூட, ஆண்டுதோறும் ஏற்படும் இந்த நோய்த் தொற்றுக்கு முடிவுகாணும் முயற்சியில் அவர் ஈடுபடவில்லை என்பதுதான் சோகம். மக்களவை உறுப்பினராக சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை தொடர்பான 89 கேள்விகளை அவர் எழுப்பியிருந்தும்கூட அதில் கோரக்பூரை ஆண்டுதோறும் பாதிக்கும் நோய்த் தொற்று குறித்து அக்கறை காட்டாதது ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை மாநில அரசுகள் அவரது கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்காமல் இருந்துவிட்டதா என்பது தெரியவில்லை.
ஆண்டுதோறும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு விதமான நோய்த் தொற்றுகள் பரவுவது வழக்கமாக இருக்கிறது. அவற்றை முறையாகக் கண்காணித்து அடுத்த ஆண்டு மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான வழிமுறைகளை முன்னெச்சரிக்கையுடன் செய்ய முடியும். ஆனால், மத்திய-மாநில அரசுகள் பொருளாதாரம் சார்ந்த கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் காட்டும் அக்கறையை சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் காட்டுவதில்லை.
அரசு மருத்துவமனைகளைத் தனியார் மருத்துவமனைகளைவிட தரம் உயர்ந்ததாக மாற்றுவதற்கு பதிலாக அவற்றைப் புறக்கணிக்கும் போக்குதான் காணப்படுகிறது. சாமானிய மக்களுக்கு அரசு மருத்துவமனைகளின் மீது மேலும் நம்பிக்கை இழக்க வைக்கும் கோரக்பூர், ஆம்பூர் போன்ற சம்பவங்கள் இனியும் தொடருமானால் கடந்த 70 ஆண்டுகளில் நாம் உருவாக்கி வைத்திருக்கும் சுகாதாரக் கட்டமைப்புகள் முற்றிலுமாகச் சிதைந்துவிடும். ஏழைகளே இல்லாத இந்தியா என்பது பாராட்டுக்குரிய இலக்குதான். அதற்காக இப்படியா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com