தேவையா? இது தேவையா?

மாநிலங்களவைக்கான சமீபத்திய சுற்று தேர்தல்களுக்குப் பிறகு

மாநிலங்களவைக்கான சமீபத்திய சுற்று தேர்தல்களுக்குப் பிறகு ஆளும் பா.ஜ.க.வின் எண்ணிக்கை பலம் கூடியிருக்கிறது என்றாலும்கூட, இன்னும் பா.ஜ.க.வோ அதன் கூட்டணி கட்சிகளோ பெரும்பான்மை பலம் பெற்ற நிலையை எட்டவில்லை. அதிக எண்ணிக்கையிலான கட்சி என்கிற அளவில் பா.ஜ.க. இப்போதைக்கு ஆறுதல் கொள்ளலாம்.
மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 245. அவர்களில் 233 உறுப்பினர்கள் மாநில சட்டப்பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். ஏனைய 12 பேர் கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் நல்கிய பங்களிப்பின் அடிப்படையில் குடியரசுத் தலைவரின் பரிந்துரையின் அடிப்படையிலான நியமன உறுப்பினர்கள். மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆறு ஆண்டு காலம் பதவி வகிப்பார்கள்.
பண்டித ஜவாஹர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி ஆகிய இருவர் மட்டும்தான் தங்கள் பதவிக்காலம் முழுவதிலும் மாநிலங்களவையில் தனிப்பெரும்பான்மையுடன் பதவி வகித்திருக்கிறார்கள். ஏனைய பிரதமர்கள் எல்லோருமே ஏதாவது ஒரு காலகட்டத்தில் தங்கள் கட்சிக்குப் போதிய பலமில்லாத சூழலை எதிர்கொண்டவர்கள்தான். அரசியல் கட்சிகள் என்று எடுத்துக்கொண்டால், பதவி வகித்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி மட்டும்தான் தனது சொந்த பலத்தாலோ அல்லது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவாலோ மாநிலங்களவையில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றிருந்தது. அந்த அதிர்ஷ்டம் காங்கிரஸ் அல்லாத ஜனதா கட்சிக்கோ, தேசிய முன்னணி அரசுக்கோ, ஐக்கிய முன்னணி அரசுக்கோ, பாரதிய ஜனதாவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கோ இருக்கவில்லை.
வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 1998 முதல் 2004 வரை ஆட்சி செய்தபோது தொடக்கத்தில் வெறும் 45 உறுப்பினர்கள்தான் பா.ஜ.க.வுக்கு இருந்தனர். கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்களையும் சேர்த்தால் 80 ஆனது. 2004-இல் பதவியிலிருந்து விலகும்போது இந்த எண்ணிக்கை 90-ஆக உயர்ந்தது, அவ்வளவே. நரேந்திர மோடி அரசு பதவியேற்றபோது 47 பா.ஜ.க. உறுப்பினர்களும் 30 கூட்டணிக் கட்சியினரும் மட்டுமே இருந்தனர். இப்போது ஐக்கிய ஜனதா தளம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த பிறகு 245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் 90 உறுப்பினர்களின் ஆதரவை பெற்றிருக்கிறது. அதிமுக போன்ற இதர கட்சிகள் மற்றும் நியமன உறுப்பினர்களின் ஆதரவையும் சேர்த்தாலும்கூட 121 உறுப்பினர்களின் ஆதரவைத்தான் ஆளுங்கட்சி பெற முடியும்.
அரசியல் நிர்ணய சபையின் விவாதத்தின்போது மாநிலங்களவை அமைக்கப்படுவதற்குக் கடுமையான எதிர்ப்பு இருந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுவதற்காகத்தான் பிரிட்டிஷ் பிரபுத்துவவாதிகள் மேல்சபை என்கிற ஒன்றை ஏற்படுத்தினார்கள் என்று மொகமத் தாகீர் என்கிற உறுப்பினர் குறிப்பிட்டு மாநிலங்களவை அமைக்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்தார்.
ஷிபன்லால் சக்சேனா என்பவர் ஒருபடி மேலே போய், எந்த ஒரு நாட்டிலும் மேலவை என்பது வளர்ச்சிக்கு உதவுவதாக இருந்ததில்லை என்றும், சர்வதேச அளவிலான முன்னேற்றத்தை எட்டிப்பிடிக்க இந்தியா முயலும்போது அதற்கு மாநிலங்களவை மிகப்பெரிய தடையாக இருக்கும் என்றும் எச்சரித்தார். மாநிலங்களவை தேவை என்பதை வலியுறுத்தியவர்களில் என். கோபால சுவாமி ஐயங்கார் குறிப்பிடத்தக்கவர்.
கண்ணியமான விவாதங்களுடன் உணர்ச்சிபூர்வமாக முடிவெடுக்காமல் சிந்தித்து முடிவெடுக்க மாநிலங்களவை தேவை என்றும், அதை மேலவை என்றோ மாநிலங்களவை என்றோ கருதாமல் அறிஞர்கள் அவையாகக் கருத வேண்டும் என்றும் கோபால சுவாமி ஐயங்கார் உள்ளிட்ட பலரும் கருதினர். பெரும்பான்மை ஆதரவு அடிப்படையில் மாநிலங்களவை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அப்படி உருவாக்கப்பட்ட மாநிலங்களவையின் இன்றைய நிலைமையைப் பார்க்கும்போது சற்று வேதனையாகத்தான் இருக்கிறது. மாநிலங்களவை உறுப்பினர்களின் அடிப்படையில் வைத்துப் பார்த்தால் இந்தியா மிகவும் பணக்கார நாடாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால், மாநிலங்களவை உறுப்பினர்களில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் கோடீஸ்வரர்கள். சிலர் பெரும் கோடீஸ்வரர்கள்.
பிகாரைச் சேர்ந்த பா.ஜ.க. உறுப்பினர் ஆர்.கே. சின்ஹாவுக்கும் அவரது மனைவிக்கும் சேர்ந்து ரூ.800 கோடிக்கும் அதிகமான சொத்து இருக்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சுயேச்சை உறுப்பினரான மனைவணிக சக்கரவர்த்தி சஞ்சய் கக்கடேயின் சொத்து மதிப்பு ரூ.485 கோடி. 10 கோடிக்கும் குறைவானவர்களின் எண்ணிக்கை வெறும் 16 விழுக்காடு மட்டுமே.
கோடீஸ்வரர்களாக இருப்பதில் தவறில்லை. ஆனால், அவர்கள் விவாதங்களில் பங்கு பெறுவதில்லை என்பதுதான் வேதனை. நியமன உறுப்பினர்களில் சச்சின் டெண்டுல்கரும், நடிகை ரேகாவும், நாடாளுமன்றத்திற்கு வருவதே இல்லை. டெண்டுல்கர் கடந்த ஐந்து ஆண்டுகளில் 7%, நடிகை ரேகா 5% மட்டுமே வருகை தந்திருக்கிறார்கள். இதுவரை விவாதத்தில் கலந்து கொள்ளவோ கேள்விகளைக் கேட்கவோ செய்ததில்லை. குத்துச்சண்டைவீராங்கனை மேரி கோம் கூட 61% வருகை பதிவு செய்திருப்பது மட்டுமல்லாமல் விவாதங்களிலும் கலந்துகொள்கிறார் எனும்போது டெண்டுல்கரும் ரேகாவும் எதற்காக மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொண்டு மக்களின் வரிப்பணத்தை வீணாக்குகிறார்கள் என்று கேள்வி எழுப்ப ஒருவர்கூட இல்லை.
இப்படியே போனால், தேவைதானா இந்த மாநிலங்களவை என்ற கேள்வி என்றாவது ஒருநாள் எழத்தான் போகிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com