காசநோய் பேராபத்து!

ஒரளவுக்குக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட காச

ஒரளவுக்குக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட காச நோய் மறுபடியும் பூதாகரமாக உருவெடுக்கத் தொடங்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஒன்பது இந்திய நகரங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 76 ஆயிரம் குழந்தைகளில் 5,500 குழந்தைகள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. குறைந்த அளவு கணக்கெடுப்பிலேயே இதுதான் நிலைமை என்றால் ஒட்டுமொத்த இந்தியாவிலும் முழுமையாகக் கணக்கெடுக்கப்பட்டால் எத்தனை குழந்தைகள் காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள், அவர்களில் எத்தனை குழந்தைகள் நோய் முற்றிய நிலையை அடைந்திருப்பார்கள் என்பதை நினைத்தால் பெரும் கவலை ஏற்படுகிறது.
உலகளாவிய அளவில் மிக அதிகமான காசநோய் மரணம் இந்தியாவில்தான் என்று கூறப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி 2014-இல் அறியப்பட்ட 15 லட்சம் காசநோய் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவைச் சாரும். காசநோய் தடுக்கப்படவும் குணப்படுத்தப்படவும் முடியும் என்ற நிலையிலும் இந்த அளவுக்கு அதிகமாகக் காசநோய் மரணங்கள் இந்தியாவில் ஏற்படுவது நமது சுகாதார அமைப்புகள் கவனமாக இயங்கவில்லை என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.
2015-இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நான்கு பெருநகரங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட காசநோயால் பாதிக்கப்பட்ட 600 குழந்தைகளில் 10% பேர் காசநோய்க்கான ரிஃபாம்பிசின் என்கிற மருந்துக்குக் கட்டுப்படாதவர்கள் எனக் கண்டறியப்பட்டது. குழந்தைகளும் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது, புதிய தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தை நாம் மேலும் வலுப்படுத்தியாக வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
குழந்தைகளுக்கு காசநோய் காணப்படுவது என்பது சமுதாயத்தில் அதிகமாகக் காசநோய் காணப்படுவதன் அறிகுறி. காரணம், பெரியவர்களிடமிருந்துதான் குழந்தைகள் காசநோய்த் தொற்றைப் பெற்றிருக்க முடியும். அதுமட்டுமல்ல, நமது சுகாதார அமைப்புகள் முறையாக செயல்பட்டுப் பெரியவர்களிடம் ஆரம்பக் காலத்திலேயே காசநோய் அறிகுறிகளைக் கண்டுபிடித்துக் குணப்படுத்தாமல் விட்டிருப்பதுதான் இந்த அளவுக்குக் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதற்குக் காரணம்.
உலகளாவிய அளவிலும் கூட காசநோய் என்பது மிகப் பெரிய மனித உயிர்க் கொல்லியாகத் தொடர்கிறது. குறிப்பாக, வளர்ச்சியடையாத நாடுகளில் காசநோயின் பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது. காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஏறத்தாழ 58% நோயாளிகள், ஆசியா, மேற்கு பசிபிக் பகுதிகளைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். இந்தியா, இந்தோனேஷியா, சீனா ஆகிய மக்கள்தொகை அதிகமுள்ள மூன்று நாடுகளில்தான் மிக அதிகமாகக் காசநோய் காணப்படுகிறது. இவற்றிலும்கூட இந்தியாதான் நோயாளிகளின் எண்ணிக்கையில் முதன்மையில் இருக்கிறது.
அரை நூற்றாண்டுக்கு முன்பு இருந்த காசநோய்க்கான சிகிச்சை முறைகள் அல்ல இப்போது கையாளப்படுவது. அப்போது, குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது தொடர் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதால், ஆங்காங்கே தனிமை மருத்துவமனைகள் (சானடோரியம்) அமைக்கப்பட்டு நோயாளிகள் அங்கு அனுமதிக்கப்பட்டனர். அதன்மூலம் காசநோய் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க முடியும் என்று கருதப்பட்டது. குணப்படுத்துவது கடினம் என்று கருதப்பட்ட காசநோய்க்கு, மருத்துவ அறிவியல் இப்போது தீர்வு கண்டிருக்கிறது. ஆறு முதல் ஒன்பது மாதங்களில் ரிஃபாம்பிசின் உள்ளிட்ட மருந்துகள் மூலம் காசநோயைப் பூரணமாகக் கட்டுப்படுத்த முடிகிறது. 1995-இல் 25% மட்டுமே குணப்படுத்தப்பட்ட நிலைமை மாறி இப்போது 88%க்கு அதிகமாக காசநோய் பூரணமாக குணப்படுத்தப்படுகிறது.
கிருமிகள் ÷காசநோய் மருந்துக்கு எதிர்ப்பு சக்தியை அடைந்து விடுவதற்கு மிக முக்கியமான காரணம் நோயாளிகள் முழுமையாக சிகிச்சையை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது. இதற்கு நோயாளிகளின் பொறுப்பின்மை மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது. காசநோயால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலோர் ஏழைகளாகவும், படிப்பறிவில்லாதவர்களாகவும் இருப்பதால் முழுமையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. மேலும், தொடர் சிகிச்சை செய்து கொள்ள அவர்களுடைய வறுமை அனுமதிப்பதில்லை.
பாதியில் சிகிச்சையை நிறுத்திவிடும்போது காசநோய்த் தொற்று அதற்கான மருந்துக்கு எதிர்ப்பு சக்தியைப் பெற்று விடுகிறது. அவர்களிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவும்போது அந்த நோயாளிக்கு உடலில் எதிர்ப்பு சக்தி இல்லாமல் போனால் காசநோயைக் குணப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டு விடுகிறது. இப்படியே இது பரவும்போது காசநோய்க்கு எதிரான முயற்சிகள் மேலும் கடினமாகி விடுகின்றன. அதனால் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, முறையான சிகிச்சை அளித்து, கடைசி வரை காசநோய் பாதிக்கப்பட்டவர்கள் கண்காணிக்கப்பட்டாக வேண்டிய நிர்பந்தம் நிலவுகிறது.
காசநோயாளி ஒருவர் இருமும்போது அவரிடமிருந்து வெளிப்படும் காசநோய்த் தொற்று, காற்றுமண்டலத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு இருக்கும். அந்தக் காற்றை சுவாசிப்பவர்களுக்கு நிச்சயமாக அதன் தாக்கம் ஏற்படும். உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் காசநோயால் பாதிக்கப்படுகிறார்கள். நகர்ப்புறங்களில் வாழ்கின்ற அனைவரும் நிச்சயமாகக் காசநோய்த் தொற்றை எதிர்கொள்பவர்களாகத்தான் இருப்பார்கள்.
குழந்தைகள்கூட பாதிக்கப்படுகிறார்கள் என்கிற நிலையில், காசநோய்க்கு எதிராக முனைப்புடன் போராட இந்தியா தயாராக வேண்டும். இன்றைய நிலையில் நமது தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டம் வலுவானதாக இல்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com