இதுவல்ல வளர்ச்சி...

ஒடிஸா மாநிலம் புரியிலிருந்து உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாருக்கு

ஒடிஸா மாநிலம் புரியிலிருந்து உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாருக்கு சென்று கொண்டிருந்த உத்கல் விரைவு ரயில் கடந்த சனிக்கிழமை விபத்துக்குள்ளானது. உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் மாவட்டத்திலுள்ள கதெளலி ரயில் நிலையத்திற்கு அருகில் 14 பெட்டிகள் தடம் புரண்டதால் ஏற்பட்டிருக்கும் இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள்.
கவனக்குறைவால்தான் இத்தனை உயிரிழப்பும் பாதிப்பும் ஏற்பட்டிருக்கிறது என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. 100 கி.மீ. வேகத்தில் விரைந்து கொண்டிருந்த உத்கல் விரைவு ரயில் தடம் புரண்டதற்கான காரணம் தண்டவாளப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததுதான் என்பதை அறியும்போது ரயில் ஓட்டுநர் மீதும், பாதுகாவலர் (கார்டு) மீதும் மட்டுமல்லாமல் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை செய்யாமல் விட்டிருந்த ரயில் நிலைய அதிகாரிகளின் பொறுப்பின்மையையும் வன்மையாகக் கண்டிக்காமல் இருக்க முடியவில்லை. தகவல் தொடர்புகள் மிகவும் அதிகரித்துவிட்ட நிலையில் இப்படியொரு விபத்து ஏற்பட்டிருக்கவே கூடாது.
தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கும்போது 10 அல்லது 15 கி.மீ. வேகத்தில்தான் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்கிற விதி இருக்கிறது. இது ஓட்டுநருக்கு தெரியாமல் இருந்திருப்பது வியப்பைத் தருகிறது. தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருப்பது குறித்து ரயில்வே தொலைத்தொடர்பு துறையினரிடம் தெரிவிக்கப்படாமல் இருந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகவும் கடுமையான குற்றம். அப்படி தெரிவித்திருந்தும் அந்தத் துறையினர் ரயிலின் ஓட்டுநரை எச்சரிக்கை செய்யாமல் இருந்திருந்தால் அது அதைவிடப் பெரிய குற்றம். யாரோ ஒருவருடைய பொறுப்பின்மைக்காகத் தங்களது உயிரை இந்திய ரயில்வேயிடம் ஒப்படைத்திருக்கும் பலர் பலியாகியிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது இதை விபத்து என்று சொல்வதைவிடப் படுகொலை என்று சொன்னால்கூட தவறு இல்லை என்றுதான் தோன்றுகிறது.
பாதுகாப்பு என்பது இந்திய ரயில்வேயில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் வார்த்தை. ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையின்போதும் ரயில்வேதுறை அமைச்சர் தனது உரையில் இதுகுறித்துப் பேசாமல் இருந்ததேயில்லை. ஆண்டுதோறும் ரயில்களின் பாதுகாப்பிற்காக மிக அதிகமான தொகையும் ஒதுக்கப்படுகிறது. ரயில்வேயைப் பொருத்தவரை தண்டவாளத்தின் ஒவ்வொரு மீட்டரிலிருந்தும் தொடங்கி ரயிலின் என்ஜின், ரயில் பெட்டிகள் என்று அனைத்திலுமே பாதுகாப்பு தேவைப்படுகிறது. இந்தப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கென்றே ஊழியர்கள் நிரந்தரமாக நியமிக்கப்பட்டு அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. அப்படியிருந்தும் விபத்து நிகழும்போது, அதற்கு யாரும் பொறுப்பேற்காத நிலைமை தொடர்கிறது என்று சொன்னால் அதை சகித்துக்கொள்ள முடியவில்லை.
இந்த ஆண்டு கடந்த எட்டு மாதங்களில் மட்டும் ஏழு ரயில்கள் தடம் புரண்டு இருக்கின்றன. மத்தியப் பிரதேசத்தில் நடந்த ஒரு ரயில் விபத்திற்கு சதித் திட்டம் காரணமாக இருக்கும் என்கிற ஐயப்பாடு இருக்கிறது. ஏனைய ஆறு விபத்துகளுக்கும் காரணம் பாதுகாப்புக் குறைபாடு அல்லது ஊழியர்களின் கவனக்குறைவு, இரண்டில் ஒன்றுதான். ரயில்களின் பாதுகாப்புக்காக ரூபாய் ஒரு லட்சம் கோடி இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டும் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி ரயில்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மக்களின் வரிப்பணம் செலவழிக்கப்பட்டும்கூட விபத்துகள் தொடர்கின்றன எனும்போது, அந்த ஒதுக்கீடு முறையாக செலவழிக்கப்படுகிறதா அல்லது மடைமாற்றம் செய்யப்படுகிறதா என்கின்ற ஐயப்பாடு எழுகின்றது.
ஒருபுறம் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கேற்றார்போல ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. நவீன யுகத்திற்குத் தகுந்தார்போல ரயில்கள் நவீனமயமாக்கப்படுவது மட்டும் போதாது, ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட்டாக வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. பாதுகாப்பு அம்சங்கள் உறுதிப்படுத்தப்படாமல் தேவையையும் எதிர்பார்ப்பையும் ஈடுகட்ட முயற்சிக்கும்போது அதன் விளைவுகள் மோசமானதாகத்தான் இருக்கும். பாதுகாப்பு அம்சங்களின் குறைவால் ஏற்படுவது பொருள் இழப்பல்ல, உயிரிழப்பு என்பதால் ரயில் விபத்துகளை நாம் சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது.
நரேந்திர மோடி அரசு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ரயில் உள்ளிட்ட அதிநவீன ரயில் போக்குவரத்துக்குத் திட்டமிடுகிறது. இதுபோன்ற ரயில்களை இயக்குவதற்குத் துல்லியமான கட்டமைப்பு வசதிகள் மிகமிக அவசியம். தொழில்நுட்பம் இதற்கான உத்தரவாதத்தை அளிக்கிறது என்றாலும்கூட அந்தத் தொழில்நுட்பத்தைக் கையாளும் ஊழியர்கள் கவனக்குறைவாக செயல்பட்டால் அதிவேக ரயில்கள், அதிவேக மரணத்துக்கு காரணமாகிவிடும் ஆபத்து காத்திருக்கிறது.
சென்னை - பெங்களூரு, புணே - ஆமதாபாத் ஆகிய தடங்களில் புல்லட் ரயில்களை இயக்குவது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு அதற்கான பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்பட இருக்கும் நிலையில், உத்கல் விரைவு ரயில் விபத்து ஒரு முன்னெச்சரிக்கையாக அமைந்திருக்கிறது. ரயில்வே நிர்வாகம் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் 'புல்லட் ரயில்' கனவு காணக் கூடாது.
உலகம் முழுவதும் ரயில் விபத்துகள் நடைபெறத்தான் செய்கின்றன. ஆனால், உயிரிழப்பு என்று வரும்போது இந்தியாதான் முன்னிலை வகிக்கிறது. பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாத வளர்ச்சி என்பது வளர்ச்சியே அல்ல!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com