மரணக் குழிகள்!

இரண்டு வாரங்களுக்கு முன்னால் தில்லி, லஜ்பத் நகரிலுள்ள நகராட்சி

இரண்டு வாரங்களுக்கு முன்னால் தில்லி, லஜ்பத் நகரிலுள்ள நகராட்சி கழிவுநீர் கிடங்கை சுத்தம் செய்ய இறங்கிய மூன்று துப்புரவுத் தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருக்கிறார்கள். கடந்த மாதம் தில்லியில் தண்ணீர் சேகரிப்புத் தொட்டியை சுத்தம் செய்வதற்கு இறங்கிய நான்கு துப்புரவுத் தொழிலாளர்கள் விஷவாயுவால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர்.
மார்ச் மாதம் கடலூரில் இதேபோல கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மூன்று துப்புரவுத் தொழிலாளர்கள் மூச்சுத்திணறலால் மரணமடைந்தனர். அதேபோல பெங்களூருவிலும் கடந்த மாதம் மூன்று பேர் கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை அகற்றுவதற்காக இறங்கியபோது மரணத்தைத் தழுவினர். கடந்த பிப்ரவரி மாதம் மும்பையிலும் இதேபோல மூன்று பேர் உயிரிழக்க நேர்ந்தது.
கடந்த பல ஆண்டுகளாகவே சாக்கடைத் திறப்புவாய்கள் துப்புரவுத் தொழிலாளர்களின் மரணக் குழிகளாக இருந்து வருகின்றன. தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் துப்புரவுக்கு முன்னுரிமை அளித்தும்கூட துப்புரவுத் தொழிலாளர்களின் நிலைமையிலும் அவர்களது பாதுகாப்பிலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கழிப்பறைகளைக் கட்டுவதில் மட்டுமே அதிக முனைப்பு காட்டப்படுகிறதே தவிர, துப்புரவுத் தொழிலாளர்களின் செயல்பாடுகளை நவீனப்படுத்துவதில் அக்கறை காட்டப்படுவதில்லை.
சாக்கடைத் துப்புரவு பணியில் மனிதர்கள் வேலைக்கு அமர்த்தப்படுதல் மற்றும் மறுவாழ்வுச் சட்டம் 2013-இன்படி மலக்கழிவுகளை மனிதர்களைக் கொண்டு அகற்றுதல், சாக்கடைகளை சுத்தப்படுத்த துப்புரவு பணியாளர்களை நேரடியாக ஈடுபடுத்துவது உள்ளிட்டவை சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி ஈடுபடுத்துபவர்களுக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை உள்பட கடுமையான தண்டனையை அந்தச் சட்டம் வழங்கியது. 1993-இல் கொண்டு வரப்பட்ட சட்டத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தி மனிதர்களே மனித கழிவுகளை அகற்றும் சமூக களங்கத்திற்கு 2013-இல் சட்டப்படி முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்தச் சட்டத்தின்படி, மலக்கழிவுகளையோ, சாக்கடைகளையோ சுத்தப்படுத்துவதற்கு தேவையான உபகரணங்களை உள்ளாட்சி நிர்வாகங்கள் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வழங்குவது கட்டாயமாக்கப்பட்டது. அதேபோல எல்லா உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபடும் நிறுவனங்கள் அதற்கு ஏற்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாக்கடைகள், மலக் கிடங்குகள் உள்ளிட்டவற்றை மனிதர்கள் நேரிடையாக ஈடுபடாமல் துப்புரவு செய்ய வலியுறுத்தியது. இதை மீறும் அதிகாரிகள், இரண்டு ஆண்டு வரை தண்டனை, இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டையுமே எதிர்கொள்ள நேரிடும் என்று அந்தச் சட்டம் எச்சரித்தது.
2013-இல் மனிதர்கள் சாக்கடைத் துப்புரவில் நேரிடையாக ஈடுபடுவது சட்டப்படி தடுக்கப்பட்டும்கூட இன்றுவரை இந்த அவலத்திற்கு முடிவு காணப்படவில்லை என்பதுதான் மிகப்பெரிய வேதனை. 'சபாய் கரம்சாரி அந்தோலன்' என்கிற துப்புரவுத் தொழிலாளர்களின் நலனுக்கான அமைப்பு, வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின்படி 2016-இல் மட்டும் இந்தியாவில் 1,300 துப்புரவுத் தொழிலாளர்கள் சாக்கடை சுத்திகரிப்புப் பணியின்போது இறந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் மலக் கிடங்குகளை சுத்தப்படுத்தும்போதும் கழிவுநீர் ஓடைகளில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகளை அகற்றுவதற்காக நேரிடையாக உள்ளே இறங்கியபோதும் அங்கே வெளியாகும் விஷவாயுக்களால் தாக்கப்பட்டு மரணமடைந்தவர்கள்.
வேடிக்கை என்னவென்றால், 2016-இல் இந்தியாவில் தீவிரவாதத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 516தான். ஆனால், துப்புரவுத் தொழிலாளர்கள் 1,300 பேர் கடுமையான சட்டத்தையும் மீறி பணியில் அமர்த்தப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, 2013-இல் சட்டம் இயற்றப்பட்டும்கூட ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்கள் சாக்கடை சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பதும், மரணமடைகிறார்கள் என்பதும் எந்த அளவுக்கு அந்தச் சட்டம் உள்ளாட்சி அமைப்புகளாலும் அதிகாரிகளாலும் புறக்கணிக்கப்படுகிறது என்பதை வெளிச்சம் போடுகிறது.
பிராக்ஸிஸ்ட் இந்தியா என்கிற பெங்களூருவைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் நகராட்சிகளிலும் மாநகராட்சிகளிலும் பணிபுரியும் சாக்கடைத் துப்புரவுத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்னைகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. தில்லி மாநகராட்சியில் அதிகாரபூர்வமாக 104 பேர் சாக்கடைத் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கிறது. தில்லி மாநில சட்ட உதவி ஆணையமோ, 233 சாக்கடைத் துப்புரவுப் பணியாளர்கள் 2013-இல் இருந்ததாக ஒரு கணக்கை தெரிவிக்கிறது. இவர்கள் அல்லாமல் தனியாரால் பணிக்கு அமர்த்தப்பட்ட சாக்கடைத் துப்புரவுப் பணியாளர்கள் எத்தனை பேர் என்பது குறித்து எந்தவிதமான கணக்கெடுப்பும் இல்லை.
தலைநகர் தில்லியிலேயே இதுதான் நிலைமை என்றால், அகில இந்திய அளவில் எத்தனை பேர் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வாய்ப்பே இல்லை. இது குறித்து அரசோ தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோ எந்த முயற்சியும் மேற்கொண்டதாகவும் தெரியவில்லை.
சர்வதேச அளவில் மலக் கிடங்குகளையும் கழிவுநீர் ஓடைகளையும் துப்புரவுப்படுத்த எத்தனையோ நவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. இந்தியா ஒளிர்கிறது, வளர்கிறது என்றெல்லாம் பெருமை தட்டிக் கொள்ளும் நம்மால் துப்புரவுத் தொழிலாளர்களுக்குப் போதிய பாதுகாப்பையும், தொழில்நுட்பப் பின்பலத்தையும்கூட வழங்க முடியவில்லை என்பதை என்னவென்று சொல்ல?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com