நம்பிக்கை துரோகம்!

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை, 'நீட்' எனப் பரவலாக அறியப்படும் தகுதி காண் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறுதியிட்டுக் கூறிவிட்டிருக்கிறது. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை உடனடியாகத் தொடங்கி, செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்கிற நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலும் தமிழக அரசால் வெளியிடப்பட்டுவிட்டது.
தமிழகத்தில் 3,534 பொது மருத்துவ இடங்கள் உள்ளன. இதில் 2,445 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், மீதமுள்ள இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்டுக் கிடைக்கின்றன. இந்த இடங்கள் அனைத்துமே, இனிமேல் 'நீட்' தேர்வின் தேர்ச்சி அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும் என்கிற நிலைமை உறுதியாகிவிட்டது.
தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டத்தில் படித்து, அதிக மதிப்பெண்களுடன் தேறியவர்களில் பெரும்பாலோருடைய மருத்துவக் கல்லூரிக் கனவு தகர்ந்திருக்கிறது. பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண்களும், தனியார் பயிற்றுவித்தல் மூலமாகப் படித்ததால் 'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண்ணும் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் பலரும் 'நீட்' தேர்வின் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
'நீட்' தேர்வின் மூலம் மட்டுமே மருத்துவக் கல்லூரிச் சேர்க்கை என்கிற நிலைமை அநேகமாக உறுதிப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், சமச்சீர் கல்வித்திட்ட மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது மத்திய வர்த்தகத் துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு. தமக்கு எந்தவிதத்திலும் தொடர்பே இல்லாத சுகாதாரத் துறை சார்ந்த பிரச்னையில் அவர் தலையிட்டிருக்க வேண்டிய அவசியமே இருக்கவில்லை.
'தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்குமானால், இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும் தமிழகத்துக்கு 'நீட்' அடிப்படையிலான மாணவர் சேர்க்கையிலிருந்து விலக்கு அளிப்பதற்கு மத்திய அரசு உதவும்' என்கிற நிர்மலா சீதாராமனின் அறிக்கைதான் ஆயிரக்கணக்கான தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. இப்போது அந்த நம்பிக்கை தகர்ந்து விட்டிருக்கிறது.
மத்திய அரசும், தமிழக அமைச்சர்களிடம் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது. மத்திய சட்ட அமைச்சகமும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், சுகாதார அமைச்சகமும் தமிழகத்தில் 'நீட்' தேர்வுக்கு ஓர் ஆண்டு விலக்குக் கோரும் அவசரச் சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளித்தன. நிகழாண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்த மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதன் விளைவுதான், கடந்த 12 ஆண்டுகள் மருத்துவக் கல்விக் கனவுடன் அரசுப் பள்ளிகளில் படித்துத் தேறிய மாணவர்களின் வருங்காலத்தை இப்போது கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
ஓர் ஆண்டுக்கு விலக்களிப்போம் என்று உறுதியளித்திருந்தது மத்திய அரசு. 'தமிழக அரசின் அவசரச் சட்ட மசோதாவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்கக் கூடாது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது' என்கிற கூடுதல் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தாவின் தெரிவித்தல்தான், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குக் காரணம் எனும்போது, நிர்மலா சீதாராமனும், மத்திய அரசும் நடத்தியதை நயவஞ்சக நாடகம் என்பதா? நம்பிக்கை துரோகம் என்பதா?
கிராமப்புற, அடித்தட்டு வர்க்க மாணவர்கள் மருத்துவக் கல்வி பெற வேண்டும் என்பதற்காக மக்கள் வரிப்பணத்தில் மாவட்டத்துக்கு மாவட்டம் மிகுந்த முதலீட்டில் நிறுவப்பட்டிருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில், அவர்களுக்கு இடமில்லை. தனியார் பள்ளிகளில் தாராளமாக நன்கொடையும் கட்டணமும் செலுத்திப் படித்த வசதி பெற்ற மாணவர்களுக்குத்தான் பெரும்பான்மை அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள் என்கிற நிலைமை ஏற்பட இருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த நகர்ப்புற மாணவர்கள் மருத்துவக் கல்லூரிப் படிப்புக்குப் பின் கிராமப்புறங்களில் சேவை செய்யப் போவதுமில்லை.
எல்லாமே முடிந்துவிடவில்லை. அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தைத் தனியார் மருத்துவக் கல்லூரிக் கட்டணத்துக்கு நிகராக உயர்த்த அரசு யாரிடமும் கேட்க வேண்டியதில்லை. அந்த மருத்துவக் கல்லூரிகளில் 'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கட்டணச் சலுகை வழங்குவதையும் யாரும் தடுத்துவிட முடியாது. இதையாவது தமிழக அரசு உடனடியாக செய்தாக வேண்டும்.
இன்னொன்றும் இருக்கிறது. கல்வி பெறும் உரிமைச் சட்டத்தில் இருப்பதுபோல, எல்லா அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், அந்தந்தப் பகுதியிலுள்ள மாணவர்களுக்குத்தான் முன்னுரிமை என்று மாநில அரசு உத்தரவு பிறப்பிக்க முடியும். அந்தந்தப் பகுதி மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில், வெளியூர் மாணவர்கள் வந்து படிப்பதும், உள்ளூர் மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதும் நியாயமே இல்லை.
மத்திய அரசின் நம்பிக்கை துரோகம், சரியான வாதங்களை முன்வைத்து சமூக நீதியை நிலைநாட்ட இயலாத மாநில அரசின் கையாலாகாத்தனம், கிராமப்புற மாணவர்களின் நிலையைப் புரிந்து கொள்ள இயலாத நீதிமன்றத்தின் வறட்டுச் சட்ட வியாக்கியானம் இவையெல்லாம், லட்சக்கணக்கான ஏழைப் பெற்றோரின், கிராமப்புற மாணவர்களின் கனவுகளைத் தகர்த்திருக்கிறதே... நெஞ்சு பொறுக்குதில்லையே..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com