அந்தரங்கம் புனிதமானது!

தனிநபர் அந்தரங்கம் என்பது இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமை

தனிநபர் அந்தரங்கம் என்பது இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமை என்று தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையில் அமைந்த ஒன்பது பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு வரலாற்றுப் புகழ்மிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது. 134 கோடி இந்தியர்களின் அடிப்படை உரிமை நிலைநாட்டப்பட்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டம் இந்தியக் குடிமகனுக்கு சில அடிப்படை உரிமைகளை வழங்கியிருக்கிறது என்றாலும்கூட அவற்றில் அந்தரங்கம் ஓர் அடிப்படை உரிமை என்று தெளிவுபடுத்தியிருக்கவில்லை. அது குறித்த தெளிவான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
ஆதார் அடையாள அட்டை தொடர்பாக முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிமுகப்படுத்திய சட்டத்தை எதிர்த்து கர்நாடக மாநில முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கே.எஸ். புட்டசாமி தொடுத்திருந்த வழக்குதான் தனிமனித அந்தரங்கத்துக்கு அரசியல் சட்டப் பாதுகாப்பு உண்டா என்பது குறித்த விவாதத்திற்கு வழிகோலியது.
கடந்த ஜூலை 18-ஆம் தேதி இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின்முன் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு அந்த அமர்விலுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரியது. இதற்கு முன்னால், அந்தரங்கம் அடிப்படை உரிமைதானா என்பது குறித்து 1954-இல் எம்.பி. சர்மா வழக்கில் எட்டு நீதிபதிகள் கொண்ட அமர்வும், 1962-இல் கரக்சிங் வழக்கில் ஆறு நீதிபதிகள் கொண்ட அமர்வும் அந்தரங்கம் அடிப்படை உரிமை இல்லை என்று தீர்ப்பு வழங்கியிருக்கும் நிலையில், ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்கிற மத்திய அரசின் நியாயமான கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒன்பது நீதிபதிகள் கொண்ட அந்த உச்சநீதிமன்ற அமர்வு அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமைதான் என்று இப்போது ஏகமனதாக முடிவெடுத்துத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமையா, இல்லையா என்கிற கேள்வி அரசமைப்புச் சட்ட விவாதத்தின்போதே எழுப்பப்பட்டது. உயிருக்கும் சுதந்திரத்திற்கும் உரிமை என்பது அரசமைப்புச் சட்டத்தின் பகுதி III -இலும் சட்டப்பிரிவு 21(3)-இன் படியும் உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் இது குறித்துத் தனியாக குறிப்பிடத் தேவையில்லை என்று அரசியல் சாசன சபை முடிவெடுத்திருக்கக் கூடும். இந்த வழக்கில் வாதிட்ட மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்பிரமணியம் கூறியதுபோல, உயிருக்கும் சுதந்திரத்திற்குமான உரிமை என்பது இயற்கையான உரிமை என்பதை மறுக்க முடியாது. 'அந்தரங்கம் இல்லாமல் சுதந்திரத்தை அனுபவிப்பதோ, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமை என்பது அந்தரங்கம் இல்லாமலோ செயல்பட முடியாது' என்கிற அவரது வாதம் அரசியல் சாசன அமர்வால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் கருத்துத் தெரிவித்த தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால், அந்தரங்கம் என்பது தனியாக சட்டமாகவோ அல்லது எல்லா பிரச்னைகளுக்கும் பொதுவானதாகவோ இருந்துவிட முடியாது என்று தெரிவித்தார். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு உள்ளிட்டவற்றிற்கு தரப்படும் தகவல்கள் பொதுவெளியில் கிடைக்கப்பெறும் நிலையில், அந்தரங்கம் என்பதை அடிப்படை உரிமையாகவோ, சட்டமாகவோ கருத முடியாது என்பது அவரது கருத்து.
தொழில்நுட்பம் தனிமனித செயல்பாடுகளுடன் இரண்டறக் கலந்துவிட்ட நிலையில், 'அந்தரங்கம்' என்பதற்கு அர்த்தமே இல்லையோ என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஒருவரின் கையில் அறிதிறன் பேசி (ஆன்ராய்ட் செல்லிடப்பேசி) இருக்குமேயானால் ஒருவரது நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணிக்க முடியும். அறிதிறன் பேசியிலிருந்து அல்லது செல்லிடப்பேசியிலிருந்து பகிர்ந்து கொள்ளும் செய்திகளை ஒட்டுக்கேட்கவோ, களவாடவோ இயலும். மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் கூறியதுபோல, வங்கி அட்டை, வாக்காளர் அட்டை போன்றவற்றுக்கு தரப்படும் தகவல்கள் பொதுவெளியில் கசியாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இந்த நிலையில் அந்தரங்கம் முழுமையாக பாதுகாக்கப்படுவது என்பது சாத்தியமே இல்லை.
அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியபோது இருந்த நிலைமையிலிருந்து மிகப்பெரிய மாறுதல்களை இன்றைய சமுதாயம் எதிர்கொண்டிருக்கும் நிலை. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து அசுர வளர்ச்சி கண்டிருக்கும் நிலையில், தகவல்களைப் பாதுகாப்பதற்கு அரசு உறுதி அளிக்க வேண்டும். தனியார் அந்தரங்கத்துக்கும், அரசின் பாதுகாப்பு குறித்த தேவைக்கும் ஏற்ப போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தியிருக்கிறார்கள். எண்ம அந்தரங்கத்தை உறுதிப்படுத்துவது, தேசத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்வது, குற்றத் தடுப்பு மற்றும் புலனாய்வு, சமூகநலத் திட்டங்களின் பயன்கள் வீணாக்கப்படாமல் தடுப்பது உள்ளிட்டவற்றில் அந்தரங்கம் அடிப்படை உரிமை என்று கோரி யாரும் தப்பித்து விடாமல் பார்த்துக்கொள்வதை உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏற்றுக்கொள்கிறது.
ஆதார் அட்டை குறித்த வழக்கு, கட்செவி அஞ்சல் தகவல்களை முகநூல் நிறுவனம் பயன்படுத்திக் கொள்வது தொடர்பான வழக்கு ஆகியவற்றை இந்தத் தீர்ப்பு பாதிக்கக்கூடும். இந்தத் தீர்ப்பு தனிமனித அந்தரங்கத்தின் மீது அரசு தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதை தடுக்கும் என்கிற வகையில் வரவேற்புக்குரியது. அதே நேரத்தில் எந்தளவுக்கு, எப்படி இந்தத் தீர்ப்பு நீதிமன்றங்களால் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொருத்துத்தான் இந்தத் தீர்ப்பின் வெற்றி அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com