சட்டம் கடமையைச் செய்யட்டும்!

பாலியல் வன்முறை வழக்கில், தேரா சச்சா

பாலியல் வன்முறை வழக்கில், தேரா சச்சா செளதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்று பஞ்ச்குலா சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து ஹரியாணா, பஞ்சாப், மேற்கு உத்தரப் பிரதேசம், தில்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறையும் கலவரமும் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஏறத்தாழ 40 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள்.
கலவரம் மூளக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் கடந்த நான்கு நாட்களாகவே தெரியத் தொடங்கிவிட்டிருந்தது. குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், அதிலும் குறிப்பாகப் பெண்கள், தீர்ப்பு வழங்கப்படும் பஞ்ச்குலாவை நோக்கி படையெடுக்கத் தொடங்கிவிட்டிருந்தனர். தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னாலும்கூட ஹரியாணா அரசு முழுமனதுடன் இந்த கலவரங்களை எதிர்கொள்ளவில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு.
பஞ்சாப், ஹரியாணா உயர்நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை கூறியிருப்பதுபோல ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர்,
குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் ஆதரவாளர்களைப் பாதுகாக்கிறாரோ
என்கிற ஐயப்பாடு எழாமல் இல்லை. தேரா சச்சா செளதா அமைப்புக்கு ஹரியாணா மாநிலக் கல்வித் துறை ரூ.51 லட்சம் உதவித்தொகை வழங்கியிருப்பதை நீதிபதிகள் வன்மையாக கண்டித்திருக்கிறார்கள்.
ஹரியாணா மாநிலம், சிர்சாவில் செயல்படும் தேரா சச்சா செளதா அமைப்பின் தலைவரான 50 வயது குர்மீத் ராம் ரஹீம் சிங், இரண்டு பெண் பக்தர்களை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக கடந்த 2002-ஆம் ஆண்டில் பஞ்சாப் - ஹரியாணா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்தது. அதன் அடிப்படையில் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு எதிராக சி.பி.ஐ. பாலியல் வன்முறை வழக்கு பதிவு செய்தது.
சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டபோது சம்பந்தப்பட்ட இரண்டு பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். சண்டீகர் அருகே உள்ள பஞ்ச்குலாவில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது.
குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது. இவர் மற்ற மதத் தலைவர்களைப் போன்றவர் அல்ல. "மைக்கேல் ஜாக்ஸன் பாபா' என்று அழைக்கும் அளவுக்கு அதி நவீனமான மனிதர் அவர். தேரா சச்சா செளதா அமைப்பின் மாநாடுகளில் வண்ண நிறங்களில் ஜிகினாவுடன் கூடிய உடைகளை அணிந்து கொண்டு அதிநவீன மோட்டார் பைக்கில் திரைப்படக் கதாநாயகர் போல பெருத்த ஆரவாரத்துக்கு நடுவில் இவர் நுழைவது வேடிக்கையான காட்சி. வெறும் மத குருவாக மட்டுமல்லாமல், திரைப்படம் எடுப்பது, பாடுவது, நடிப்பது, இசையமைப்பது, விளையாட்டுகளில் ஈடுபடுவது என்று பல்கலை வித்தகராகக் காட்சி அளிப்பவர் இவர். தீர்ப்பு வழங்கப்படும் நாளில், பஞ்ச்குலாவில் அவரது ஆதரவாளர்கள் ஏறத்தாழ இரண்டு லட்சம் பேர் கூடியிருந்தார்கள் என்பதிலிருந்தே எந்த அளவுக்கு அவர் பிரபலம் என்பதை புரிந்து கொள்ளலாம்.
தேரா சச்சா செளதா என்கிற அமைப்பு 1948-இல் மஸ்தானா பலுசிஸ்தானி என்கிற துறவி ஒருவரால் ஆன்மிகத் தேடலுக்கு வழிகாட்டக்கூடிய, லாப நோக்கில்லாத சமுதாய நலன் அமைப்பாக உருவாக்கப்பட்டது. அதன் தலைமையகம் ஹரியாணா மாநிலம் சிர்சாவில் அமைந்திருக்கிறது. இந்த அமைப்புக்கு இந்தியா முழுவதிலும் 46 ஆசிரமங்கள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, ஐரோப்பா என்று இதன் கிளைகள் பரந்து விரிந்திருக்கின்றன. இந்த அமைப்பில் ஏறத்தாழ ஆறு கோடிக்கும் அதிகமான தொண்டர்கள் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் பக்தர்களாக (தொண்டர்களாக) இருந்து வருகிறார்கள்.
ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீகங்காநகர் மாவட்டம் ஸ்ரீ குருசார் மோடியா என்கிற கிராமத்தில் இந்தியா சுதந்திரமடைந்த 20-ஆவது ஆண்டில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். அவருக்கு ஏழு வயதாக இருக்கும்போது தேரா சச்சா செளதா அமைப்பின் அப்போதைய தலைவராக இருந்த ஷா சப்னம் சிங் இவரிடம் ஏதோ ஒரு சக்தி இருப்பதாகக் கூறி, இவரைத் தனது வாரிசாகத் தேர்ந்தெடுத்தார். இந்து - முஸ்லிம் நல்லிணக்கத்துக்கு இவர் வழிகோலப் போகிறார் என்று அவர் கருதியதால் இவருக்கு ராம் ரஹீம் என்று பெயர் மாற்றம் செய்தார். 1990-இல் ஒரு மிகப்பெரிய மாநாட்டைக் கூட்டி 23 வயது குர்மீத் ராம் ரஹீம் சிங்கைத் தன்னுடைய வாரிசு என்று அறிவித்தார் ஷா சப்னம் சிங்.
தேரா சச்சா செளதா என்பது ஒரு தனித்துவம் மிக்க நிறுவனம். அதற்கு சமூகத்தின் அடித்தட்டு மக்களின் ஆதரவு கணிசமாக உண்டு. கடந்த மக்களவைத் தேர்தலிலும், ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலிலும் பா.ஜ.க.வின் வெற்றிக்கு தேரா சச்சா செளதா அமைப்பும் அதன் தலைவரும் கணிசமான பங்களிப்பு நல்கியிருக்கிறார்கள். ராணுவம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருப்பதும், அது எப்போது வேண்டுமானாலும் தேரா சச்சா செளதா அமைப்பின் தலைமையகத்தில் நுழையக்கூடும் என்பதும், மாநில அரசு போதிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.
என்னதான் மக்கள் செல்வாக்குள்ளவராக ஒருவர் இருந்தாலும், சட்டம் தனது கடமையைச் செய்தாக வேண்டும். அதை தேரா சச்சா செளதா ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பதோ தடுக்க முற்படுவதோ ஏற்புடையதல்ல!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com