காத்திருக்கும் சவால்கள்!

இந்திய உச்சநீதிமன்றத்தின் 45-ஆவது தலைமை நீதிபதியாக நீதிபதி

இந்திய உச்சநீதிமன்றத்தின் 45-ஆவது தலைமை நீதிபதியாக நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி ஏற்றிருக்கிறார். அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதிவரை இந்தியாவின் தலைமை நீதிபதியாகப் பதவி வகிக்க இருக்கும் நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக் காலம், பல முக்கியமான பிரச்னைகளுக்குத் தீர்ப்பு வழங்கும் காலமாக இருக்கப் போகிறது.
1953-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி பிறந்த நீதிபதி தீபக் மிஸ்ரா, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி வகிக்கும் மூன்றாவது ஒடிஸா மாநிலத்தவர். இவருக்கு முன்னால் இவரது சிறிய தந்தை நீதிபதி ரங்கநாத் மிஸ்ராவும் (1990), நீதிபதி ஜி.டி. பட்நாயக்கும் (2002) உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியை வகித்திருக்கிறார்கள். நீதிபதி தீபக் மிஸ்ராவின் பாட்டனார் கோதாவரிஷ் மிஸ்ரா பிரபல ஒரிய மொழிக் கவிஞர். இவரது இன்னொரு சிறிய தந்தையான லோக்நாத் மிஸ்ரா, முன்னணி காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். அஸ்ஸாம் மாநில ஆளுநராகவும் பதவி வகித்தவர்.
இந்தியாவின் 45-ஆவது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்றிருக்கும் நீதிபதி தீபக் மிஸ்ரா கோபப்பட்டு யாருமே பார்த்திருக்க முடியாது. சிக்கலான பிரச்னைகள், விவாதங்களின் போதுகூட சிரித்த முகத்துடன் காணப்படும் தீபக் மிஸ்ராவுக்குத் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருக்கிறது என்பதுதான் வேடிக்கை. இசட் பிரிவு பாதுகாப்புடன், புல்லட் துளைக்காத வாகனத்தில் பயணிக்கும் ஒரே நீதிபதி தீபக் மிஸ்ரா மட்டுமே.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்குத் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதற்கு, 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அவரது தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்புதான் காரணம். மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான யாகூப் மேமனின் மரண தண்டனையை ரத்து செய்யும் மேல் முறையீட்டை, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நிராகரித்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு அச்சுறுத்தல்கள் வந்த வண்ணம் இருந்தன. அதனடிப்படையில்தான் குண்டு துளைக்காத வாகனமும், இசட் பிரிவு பாதுகாப்பும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
1977-இல் வழக்குரைஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய தீபக் மிஸ்ரா, 1996-இல் ஒடிஸா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டிலேயே நிரந்தர நீதிபதியாக்கப்பட்டு, மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். பாட்னா உயர்நீதிமன்றத்திலும், தில்லி உயர்நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய பிறகு 2011-இல்
உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார் அவர்.
முதல் தகவல் அறிக்கையை 24 மணி நேரத்திற்குள் காவல்துறை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது, தகுந்த காரணங்களும் புள்ளிவிவரங்களும் இல்லாமல் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கூடாது என்று உத்தரவிட்டது, மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளி யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது, நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதிப்படுத்தியது, மான நஷ்ட வழக்கின் அரசியல் சட்ட அங்கீகாரத்தை உறுதிப்படுத்தியது, கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ். கர்ணனுக்கு நீதிமன்ற அவமதிப்புக்காக சிறைத் தண்டனை வழங்கியது உள்ளிட்டவை நீதிபதி தீபக் மிஸ்ரா வழங்கியிருக்கும் முக்கியமான தீர்ப்புகள்.
தேசிய சட்ட உதவி ஆணையத்தின் தலைவராக நீதிபதி தீபக் மிஸ்ரா ஆற்றிய பணி அவருக்குப் பரவலான பாராட்டைப் பெற்றுத் தந்திருக்கிறது. தங்களது தரப்பு வாதத்தை நீதிமன்றத்தில் எடுத்துரைக்கக்கூட வசதியில்லாத ஏழைக் குற்றவாளிகளுக்கு, இலவச சட்ட உதவி வழங்குவதில் மிகுந்த முனைப்புக் காட்டியவர் நீதிபதி தீபக் மிஸ்ரா. ஏழைக் கைதிகளுக்கு காணொலிக் காட்சி மூலம் இலவச சட்ட உதவி வழங்குவதற்கு மாநில சட்ட உதவி ஆணையங்களின் மூலம் ஏற்பாடு செய்தவர் நீதிபதி தீபக் மிஸ்ராதான்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றிருக்கும் நீதிபதி தீபக் மிஸ்ராவைப் பல முக்கியமான வழக்குகள் எதிர்கொள்கின்றன. இவர் பதவி வகிக்க இருக்கும் அடுத்த 13 மாதங்களில் தீர்ப்புக்குக் காத்திருக்கும் வழக்குகள் எல்லாமே தேசிய முக்கியத்துவம் பெற்றவை என்பது மட்டுமல்ல, விவாதத்துக்குரியவையும்கூட.
தனிமனித அந்தரங்கப் பாதுகாப்பு குறித்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பின் பின்னணியில், இரண்டு முக்கியமான வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் முன்பு வர இருக்கின்றன. ஆதார் எண்ணைக் கட்டாயப்படுத்துவது என்பது அந்தரங்கப் பாதுகாப்பை மீறுவதாகக் கருதலாமா, கூடாதா என்பது ஒரு வழக்கு. இன்னொரு வழக்கு, இந்தியக் குற்றவியல் சட்டப்பிரிவு 370-இன் கீழ் குற்ற
மாகக் கருதப்படும் பாலியல் சுதந்திரம் குறித்த மறு ஆய்வு.
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழக்கும் சட்டப்பிரிவு 35அ, நீதிபதிகள் நியமனம் குறித்த நடைமுறை விதிகள், அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கு உள்ளிட்ட பல முக்கியமான வழக்குகள் இவரது தலைமையிலான உச்சநீதிமன்றத்தில் விவாதத்திற்கு வர இருக்கின்றன. கீழமை நீதிமன்றங்களில் மட்டும் தேங்கிக் கிடக்கும் 2.8 கோடி வழக்குகளை எப்படி எதிர்கொள்வது என்கிற பிரச்னைக்கு, இவரது பதவிக் காலத்திலாவது தீர்வு காணப்படப் போகிறதா அல்லது தொடர்கதையாகத் தொடரப் போகிறதா என்பது முக்கிய கேள்வி.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சரித்திரம் நிகழ்த்துவாரா இல்லை சரித்திரத்தில் ஒருவராக இடம்பெறுவாரா என்பதை அவரது பதவிக்காலம் முடியும்போதுதான் தீர்மானிக்க முடியும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com