மண்டல் 2!

நியாயமாகவும் சமச்சீராகவும் நிறைவேற்றப்படவில்லை

நியாயமாகவும் சமச்சீராகவும் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் இடஒதுக்கீட்டுக் கொள்கையின் குறைபாடு. நூற்றாண்டுகளாக பாதிக்கப்பட்ட சமூகப் பிரிவினரைக் கைதூக்கி விடுவதற்காகக் கொண்டுவரப்பட்டதுதான் இடஒதுக்கீட்டுக் கொள்கை. ஆனால், இடஒதுக்கீட்டின் ஆதாயங்கள் எல்லாம் சமூக ரீதியாக பின்தங்கிய, ஆனால் பொருளாதார ரீதியாக முன்னேறிய பிரிவினரால் கபளீகரம் செய்யப்படுகின்றன. இந்தக் குற்றச்சாட்டு பட்டியலின, ஆதிவாசி மக்களுக்கு மட்டுமல்லாமல் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பொருந்தும்.
பட்டியலின, ஆதிவாசிப் பிரிவினரைப்போலவே பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும் அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு மண்டல் ஆணையம் வழிகோலியது. அதுமுதல், பெரும்பான்மை எண்ணிக்கையின் காரணமாக அரசியல் செல்வாக்குப் பெற்ற பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பிரிவினர் மட்டுமே அதன் பயனை முழுமையாக அனுபவித்து வருகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு இருந்துவருகிறது. குறிப்பாக அரசியல் ரீதியாக வலிமையுடன் திகழும் யாதவர்களின் ஆதிக்கம் காணப்படும் உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு சர்ச்சையாக தொடர்ந்து வருகிறது.
பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு பயனைப் பெறுவதற்கு, முன்பு இருந்த ரூபாய் ஆறு லட்சம் வரம்பை ரூபாய் எட்டு லட்சமாக மத்திய அமைச்சரவை இப்போது உயர்த்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், மிகமிக பிற்படுத்தப்பட்டவர்கள் என்று உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு ஓர் ஆணையத்தை அமைப்பது என்றும் முடிவெடுத்திருக்கிறது. மத்திய அரசின் பட்டியலில் உள்ள ஏறத்தாழ 50,000 பிற்படுத்தப்பட்ட சாதியினரை சமூக, பொருளாதார, கல்வி ஆகிய மூன்றின் முன்னேற்றத்தின் அடிப்படையில் பிரித்து உள்ஒதுக்கீடுகளுக்கு வழிகோலுவதுதான் இதன் நோக்கம். அதன்மூலம் பிற்படுத்தப்பட்டவர்களில் ஏழைகளாகவும், மிகவும் பின்தங்கியவர்களாகவும் இருப்பவர்களை, வலிமையுள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினரின் பாதிப்புக்குள்ளாகாமல் பாதுகாக்க முடியும் என்பது அரசின் நம்பிக்கை.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கான தேசிய ஆணையமும் நாடாளுமன்றக் குழுவும் இதுபோன்ற உட்பிரிவுகளை ஏற்படுத்தவும் அந்த உட்பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கவும் பரிந்துரைத்திருக்கின்றன. ஒருசில மாநிலங்களில் ஏற்கெனவே இதுபோன்ற உள்ஒதுக்கீடுகள் நிலுவையில் உள்ளன. தேசிய அளவில் இதை நடைமுறைப்படுத்துவது என்பது மிகவும் கடினமான செயல்பாடு என்றாலும்கூட மத்திய அரசு அந்த முயற்சியில் இறங்கத் தலைப்பட்டிருக்கிறது. 
மத்திய அமைச்சரவை உள்ஒதுக்கீடு குறித்து பரிசீலிக்க ஓர் ஆணையத்தை அமைக்க இருப்பது, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. எண்ணிக்கை பலம் பொருந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு சாதியினர் இடையிலும், வசதியில்லாத ஏழைகள் இடஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்க அனுமதிக்கப்படவில்லை. உத்தரப் பிரதேசம், பிகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பெரும்பாலான சலுகைகளையும் ஒதுக்கீடுகளையும் எண்ணிக்கை பலம் பொருந்திய யாதவர்கள் அபகரித்துக் கொண்டனர். ஏனைய பிற்படுத்தப்பட்ட குர்மி, கோரி, லோத் போன்ற சாதியினர் ஒதுக்கீட்டின் பயனை முழுமையாக அடையவில்லை.
மத்திய அமைச்சரவையின் இப்போதைய முடிவின் மூலம் சமூக, பொருளாதாரப் பின்னணியின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் உட்பிரிவுகளை ஏற்படுத்துவதும், அவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதும், அதன்மூலம் எண்ணிக்கை பெரும்பான்மையில்லாத பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு சமூக நீதி வழங்குவதும் சாத்தியப்படும்.
இடஒதுக்கீட்டின் மூலம் சமூக நீதி வழங்குவது மட்டுமே எந்த ஒரு சமூகத்தையும் முழுமையாக கைதூக்கிவிட்டுவிடாது. இடஒதுக்கீடு என்பது ஒரு குறிப்பிட்ட விழுக்காடு மட்டுமே. அதில் வருமானத்தின் அடிப்படையிலோ, எண்ணிக்கை பலத்தின் அடிப்படையிலோ எந்தவொரு பிரிவினர் அதிகமாக பயன் அடைந்தாலும், அது ஏனைய பிரிவினரின் பாதிப்பின் அடிப்படையில்தான் இருக்க முடியும். குறைந்த வருவாய்ப் பிரிவினர் இடஒதுக்கீட்டின் முழு பயனையும் அடைய வேண்டும் என்பதாக மத்திய அமைச்சரவையின் நோக்கம் இருக்குமானால், ஆண்டு வருமான வரம்பை ரூபாய் ஆறு லட்சத்திலிருந்து ரூபாய் எட்டு லட்சமாக உயர்த்த வேண்டிய அவசியம் என்ன என்பது புரியவில்லை.
இப்போது திட்டமிட்டிருப்பதுபோல பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு முன்னால் பல்வேறு சாதிகளின் முழுமையான சமூக, பொருளாதாரப் புள்ளிவிவரங்களை அரசியல் நோக்கம் இல்லாமல் திரட்டியாக வேண்டும். ஆணையத்திற்குத் தரப்பட்டிருக்கும் மூன்று மாத காலவரம்பில் இது சாத்தியமாகும் என்று தோன்றவில்லை. அவசரக்கோலத்தில் உள்ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டால் அது அரசின் நோக்கத்தையே சிதைத்துவிடும்.
மத்திய அரசின் இந்த முயற்சிக்குப் பின்னால் எந்த அளவுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலனில் அக்கறை இருக்கிறதோ, அதே அளவுக்கு அரசியல் உள்நோக்கமும் இருக்கிறது. உத்தரப் பிரதேசத்திலும் பிகாரிலும் யாதவர்களல்லாத ஏனைய பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பா.ஜ.க. கூட்டணியின் பின்னால் அணிதிரண்டிருப்பது அனைவரும் அறிந்த உண்மை. அடுத்த சில மாதங்களில் பத்து மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் வர இருக்கும் நிலையில் பா.ஜ.க.வின் பொதுநலத்தில் சுயநலமும் கலந்திருக்கிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com